திகிலும் ருசிக்கும் 3

திகிலும் ருசிக்கும்...3
இப்படி ஒரு அசாதாரண குரல் கேட்ட பிறகும் ஓடிப்போகாமல் அங்கயே உட்கார நான் ஒன்றும் பொம்மையில்லையே.தலை தெறிக்க ஓடினேன்....

ஆனாலும் எங்கே போவேன், இதற்குமேல் எங்கே தங்குவேன், புரியாமல் கால் போன திசையிலே இரண்டு தெரு தாண்டிய பின் தான் நினைவுக்கு வந்தது விபூதி சாமியார் பற்றி...

விபூதி அடிச்சே எப்பேர்ப்பட்ட பேய் பிசாசையும் ஓட்டும் வித்தைக்காரர், இப்பொழுது அவரை போய் பார்த்தால் என்ன?..

விபூதி சாமியார் பற்றி நினைவுக்கு வந்ததுமே மனதுக்கு கொஞ்சம் தைரியம் வந்தது..சரி அவரை போய் பார்த்து வீட்டுக்கு கூட்டிகொண்டுவந்துவிடலாம் தான்...ஆனால் அவர் இருப்பது ரொம்ப தொலைவு, அவரை போய் கூட்டி வருவதற்குள் பேய் போகுதோ இல்லையோ வீட்டில் இருக்கற பணம், நகையெல்லாம் கொள்ளை போய்விடும்..
கதவு திறந்திருக்கறதை பார்த்தால் கதவையும் சேர்த்து களவாடிக்கொண்டு போகும் களவுக்கும்பல் இங்கு அதிகம்...சின்னதாய் ஒரு சந்தேகத்திற்காய் இத்தனை காலம் பாடுபட்டு சேர்த்த பணத்தை பறிகொடுப்பது முட்டாள்தனம் ஆயிற்றே...
ஒரு வேளை அந்த குரல் மனப்பிரம்மையோ, திரும்பி வீட்டுக்கு போய் பார்க்கலாமா, ஒருவேளை நிஜ பேய் இருந்தால்??? இருந்தால் இருக்கட்டுமே, எனக்கு என்ன பயமா??கொஞ்சம் பயமாக தான் இருக்கிறது...`
மூட்டை பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்தின கதையாக எங்கயோ இருந்து வந்த பேய்க்கு பயந்து நான் உழைத்த காசை களவு கொடுக்கணுமா, இல்லை...பேயாவது பிசாசாவது எல்லாம் என் கற்பனையாக தான் இருக்கும்... வீட்டுக்கு போய் ஒரு கை பார்த்துவிட வேண்டியதுதான்...

பயத்தில் நடுங்கின மனதை சமாதானம் பண்ணி ஒருநிலைக்கு கொண்டுவந்த பின் வீட்டுக்கே நடையை கட்டினேன்...

எனக்கு கேட்டதெல்லாம் பிரம்மைதான்னு அடிச்சி சொல்ற அளவு எல்லாமே போட்டது போட்டபடி கிடந்தது, காபி வாசனையும் காணோம், காபி ஆறுது வாங்கனு சொன்ன மோகினியையும் காணோம்...

அட ராமா, எல்லாம் சுத்த நான்சென்ஸ்...நான் போய் இப்படி பயந்தேன்னு கனகாக்கு தெரிஞ்சா...தெரிஞ்சா முடிஞ்சது ஜோலி...மொத்த ஊருக்கும் தண்டோரா போட்டு சொல்லுவா என் வீட்டுக்காரர் ஒரு தொடைநடுங்கினு...முதல்ல இதை அவகிட்ட உளறிவைக்கமா பார்த்துக்கணும்..

வாசலிலேயே நின்னு இப்படியே எத்தனை நேரம் பார்க்கறது, அதான் மோகினியும் இல்ல, நாகினியும் இல்லனு தெரிஞ்சு போச்சே, உள்ள போய் சுட சுட காபி போட்டு குடிக்க வேண்டியதுதான்...
வயிறு வேறு குய்யோமுய்யோன்னு கத்த ஆரம்பிச்சிட்டது, வேற எதுக்கு?? பசிக்குதாம்...இதுக்குமேல காபி போட்டு நேரத்தை வீணடிக்காமல் நேரா புளிளையோதரைல பாய்ஞ்சற வேண்டியது தான்...

ஒரு தட்டு நிறைய புளியோதரையை அள்ளி போட்டு கனகா ஆசைஆசையா செஞ்சு வச்சிட்டு போன தட்டையை புளியோதரை மேல சிதறிவிட்டு விருந்தை அனுபவிக்க தயாரானேன்...

ஆஹா என்ன ஒரு மணம், புளியோதரைக்கு தான் என்ன ஒரு குணம்...இதை விட்டு அந்த விபூதி சாமியாரை பார்க்க ஓட பார்த்தேனே...எத்தனை பெரிய முட்டாள் நான்...

புளியோதரையை சாப்பிடறதுலயும் அள்ளி திங்கறதுலயும் சில தினுசு இருக்கு, புளியோதரையை ஒரு கை அள்ளி வாய்க்குள்ள போட்டு இதமா நாக்கு ருசி அறிய மெல்ல மெல்ல மென்னு எச்சிலுக்குள்ள கரையவிட்டு
கூழாக்கி மெதுவா தொண்டைக்குழிக்குள்ள இருக்கணும், இன்னொரு கை அள்ளி வாய் நிறைய போட்டதும் பாதி மென்னு பாதியை தொண்டைக்குழிக்குள்ள அனுப்பிட்டு மீதி மெல்ல மெல்ல இன்னொரு கைசாதத்தை அதோட சேர்த்து மென்னு முழுங்கி தண்ணிய குடிச்சா பசி ஒரு நொடில இருந்த இடம் தெரியாம காணாம போய்டும்...

ருசிச்சு அனுபவிச்சு சாப்பிடறதுல இருக்க சுகம் அலாதிதான்....இந்த சுகத்தில் கனகாவாது, மோகினியாவது... எல்லா நினைப்பும் காலாவதி ஆகிவிடும்.....
தின்ற வேகத்திலே கண்ணைக்கட்டிக்கொண்டு வந்தது, நேற்று சரியான தூக்கமில்லை, அதை ஈடுசெய்ய காலங்கார்த்தாலேயே தூக்கம் கேட்டு கண் ரெண்டும் அடம்பிடிக்க ஆரம்பித்தது...

வெட்டிமுறிக்க இப்போதைக்கு எந்த வேலையும் இல்லை, நிம்மதியாக தூங்குவதே உசிதமாகப்பட படுக்கையை விரித்து கண் அசர ஆரம்பித்தேன்...

எதோ என்னை உசுப்புவதை போல் தோன்ற ஆழ்ந்த தூக்கம் களைந்து கண்விழிக்க மனமில்லாமல் மேலோட்டமாக உறங்குவதாய் நம்பிக்கொண்டிருந்தேன்....

சின்ன சின்னதான தேம்பல் சத்தம் பீறிட்டு கதறலாக அடக்கமுடியாத பெருவலியின் வெளிப்பாடாக கேட்க ஆரம்பித்தது...அதற்குமேல் பொறுக்கமுடியாமல் கண்கள் படக்கென திறந்துகொண்டு அழுகை வந்த சத்தம் நோக்கி பார்க்கஆரம்பித்தது....
பெருங்குரலெடுத்து இப்படி அழ இந்த வீட்டில் யார் இருக்கிறார், கனகா கூட இப்படி அழுததில்லை, அழ நான் விட்டதில்லை என்று தான் சொல்ல வேண்டும்...

மூன்று முடிச்சி போட்டபோது அய்யர் சொன்ன மந்திரங்களின் ஊடே நான் எடுத்துக்கொண்ட சத்தியம் என் தர்மபத்தினியை அழவிடக்கூடாது, இதை அவளிடம் இதுவரை சொல்லாமலே என் சத்தியத்தை காத்துக்கொண்டிருக்கிறேன், சொல்லிவிட்டால் அதை துருப்புசீட்டாகக்கொண்டு பரமபதம் ஆடிவிடுவாள்....அப்படி இருக்க அவள் இல்லாத நேரத்தில் யார் அழுகை சத்தம் இது, மீண்டும் மோகினியா???

அட இதென்னடா கொடுமையாக இருக்கிறது, மோகினி காபி போட்டு தருகிறது, மோகினி இப்படி காதை பிளக்கும் அளவு சத்தம் போட்டு அழுகிறது... இந்த மோகினிக்கு என்ன தான் வேண்டும் ...இந்த மோகினியின் பஞ்சாயத்தை இன்று தீர்த்தே ஆகவேண்டும்...
ஒருவேளை அழுது ஏமாற்றி அங்கே வரவைத்து தின்றுவிட பார்க்கிறதா...கிராமத்தில் இருக்கும்போது இதுபோல கேள்விப்பட்டிருக்கிறேன், சில மோகினி பிசாசுக்கள் இரக்கம் வருவது போல் அழுது நாடகமாடி தொலைதூரம் கூட்டிப்போய் அடித்து கொன்றுவிடுமாம்...

என் வீட்டுக்குள் வந்து அழுது நாடகமாடிக்கொண்டிருக்கிறதே, நிம்மதியாக கொஞ்ச நேரம் விடாமல் சதா மனதை உளப்பிக்கொண்டு தவிக்கவைக்கும் இந்த மோகினியை என்ன செய்தால் தகும்...

இத்தனை தூரம் காயா? பழமா? என்று மனசை வருத்திக்கொண்டிருப்பதற்கு பதில் என்ன சங்கதி என்று பார்த்துவிட்டே வந்துவிடலாம்...

தைரியமே துணையாக கொண்டு அழுகை சத்தம் வந்த திசை நோக்கி மெல்ல நடந்தேன், அந்த அழுகை சத்தம் பின்புறம் ரொம்ப நாளாக புழங்காமல் கிடந்த தண்ணீர் தொட்டியிலிருந்து வந்தது...

தொட்டி என்றால் மேற்பரப்பில் நாலு அடிக்கு இல்லாமல், சில அடிகள் உள்ளார்ந்து பார்க்கும்படி நல்ல ஆழமாகவே இருக்கும், குழந்தைகள் இருந்தால் உள்ளே விழுந்து ஆபத்து ஏற்படலாம் என்று மூடிபோட்டு தொட்டிக்கு பலத்த பாதுகாப்பு செய்திருந்தார் வீட்டுக்காரர்...
கொஞ்சம் தள்ளி நின்று தைரியத்தை வரவழைத்துக்கொண்டு கேட்டேன், "யாரது??"

அடுத்த நொடி பாதுகாப்புக்கு போட்ட மூடி எதோ வெடி வைத்ததை போல சிதறிக்கொண்டு நாலாபுரமும் தெறித்தது, சுதாரித்துக்கொண்டு நான் நகர தொட்டியிலிருந்து கரும்புகை ஓன்று வெளியேறியது....

எழுதியவர் : ராணிகோவிந் (21-May-18, 1:11 pm)
சேர்த்தது : ராணிகோவிந்த்
பார்வை : 461

மேலே