கேரளாவில் நிபா வைரஸ் எச்சரிக்கை பழந்தின்னி வவ்வால்களால் கிணறுகள், பழங்கள் மூலம் பரவும் ஆபத்து

கேரளாவில் கடந்த சில தினங்களாக நிபா வைரஸ் பரவி வருகிறது. கோழிக்கோடு மாவட்டத்தில் பலர் இந்த வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். கோழிகோடு மாவட்டம், பெரும்பரா பகுதியில் உள்ள சூபிக்கடா கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேருக்கு முதலில் இந்த வைரஸ் தாக்கியுள்ளது.

கடும் காய்ச்சல் ஏற்பட்டு இவர்கள் மூன்று பேரும் உயிரிழந்துள்ளனர். அவர்களில் ஒருவருக்கு சிகிச்சை அளித்த செவிலியர் ஒருவரும் உயிரிழந்துள்ளார். நிபா வைரஸ் தாக்கி மேலும் ஒருவர் இன்று உயிரிழந்தார் இதையடுத்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் உச்சபட்ச எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

பழந்தின்னி வவ்வால்கள்

கேரளாவில் நிபா வைரஸ் பரவி வருவதால் பெரும் பீதி ஏற்பட்டுள்ள நிலையில், இந்த வைரஸை பரப்புவது பழந்தின்னி வவ்வால்கள் என்பது தெரிய வந்துள்ளது. சூபிக்கடா பகுதியில் நிபா வைரஸ் தாக்கி, 3 பேர் உயிரிழந்த வீட்டில் இருந்து சில வவ்வால்கள் பிடிக்கப்பட்டுள்ளன.

வனத்துறையினர் உதவியுடன், கால்நடை வளர்ப்புத்துறை அதிகாரிகள் அந்த வவ்வால்களை பிடித்துள்ளனர். அந்த வவ்வால்களின் ரத்த மாதிரிகளை வைத்து ஆய்வு நடைபெற்று வருகிறது. அதன் மூலம் பழந்தின்னி வவ்வால்களே இந்த வைரஸை பெருமளவு பரப்பி வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த வவ்வால்களின் எச்சில் மற்றும் சிறுநீர் மூலம் வைரஸ் பரவுகிறது. இந்த வவ்வால்கள் சில பழங்களை கடித்து விட்டு, பின் அதை விட்டுச் சென்று விடுகின்றன. அதை சாப்பிடும் மனிதர்களுக்கு வைரஸ் தாக்கி இருக்கலாம் என கருதப்படுகிறது. அதுபோலவே அந்த பகுதியில் உள்ள வீடுகளில் உள்ள கிணறுகள் வழியாகவும் வைரஸ் பரவி இருக்கலாம் என தெரிகிறது.

கடும் வறட்சி நிலவி வரும் நிலையில் நீரின்றி தவிக்கும் பழந்தின்னி வவ்வால்கள் கிணறுகளில் நீர் அருந்துவதாலும், அதன் மூலம் வைரஸ் பரவலாம் என கருதப்படுகிறது. இதையடுத்த கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் கிணறுகளை வலைகள் கொண்டு மூடி பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சுகாதாரத்துறை ஊழியர்கள் வீடுகள்தோறும் சென்று மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

குறிப்பாக பழந்தின்னி வவ்வால்கள் பழங்களை அதிகஅளவில் விரும்பி சாப்பிடும் என்பதால், பழங்கள் மூலம் நிபா ரைவஸ் பரவ வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. எனவே பழங்களை சாப்பிடும் போது கவனத்துடன் இருக்கும்படி கோழிக்கோடு பகுதி மக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

எப்படி வந்தன வவ்வால்கள்?

வவ்வால்கள் மூலம் பரவும் நிபா வைரஸ் 1999-ம் ஆண்டு மலேசியா மற்றும் சிங்கப்பூரில் பரவியது. அப்போது அங்கு பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்பட்டன. இதன் பிறகு 2004-ம் ஆண்டில் வங்கதேசத்தில் இந்த நிபா வைரஸ் பரவியது. இந்த இருமுறையும் பழந்தின்னி வவ்வால்கள் மூலமே இந்த வைரஸ் பரவியது.

வங்கதேசத்தின் அருகில் உள்ள இந்திய பகுதியான மேற்குவங்கத்திற்கும் இந்த வைரஸ் பரவத் தொடங்கியது. பின்னர் பெரும் போராட்டத்திற்கு பிறகே நிபா வைரஸ் பரவுவது கட்டுப்படுத்தப்பட்டது.

அதன் பிறகு பல ஆண்டுகளுக்குப் பின்பு, தற்போது கேரளாவில் இந்த நிபா வைரஸ் பரவியுள்ளது. நிபா வைரஸ் வவ்வால்கள் மூலம் எப்படி கேரளாவிற்குள் வந்தது என்பது பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது. குறிப்பாக, இந்த வைரஸை பரப்பும் வவ்வால்கள் கோழிக்கோடு பகுதிக்கு எப்படி வந்தன என்பது புரியாத புதிராக உள்ளது.

வேறு இடங்களில் இருந்து இந்த வவ்வால்கள் இடம் பெயர்ந்து வந்ததா என ஆய்வு நடந்து வருகிறது. பிடிக்கப்பட்ட வவ்வால்களின் மாதிரிகள் எடுக்கப்பட்டு புனேயில் உள்ள தேசிய வைரலாஜி ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மேலும் வவ்வால்களின் உடலமைப்பைக் கொண்டு அதன் பூர்வீகம், இடம் பெயர்ந்து வருவதற்கான வாய்ப்புகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதன் முடிவுகள் தெரிந்த பிறகு, கேரளாவில் வைரஸ் பரப்பும் வவ்வால்கள் எப்படி வந்தன என்பது குறித்த தகவல்கள் முழுமையாக தெரிய வரும்.

'தி இந்து'..தமிழ்

எழுதியவர் : (23-May-18, 3:50 am)
பார்வை : 27

மேலே