பாலகுமாரன் என் இலக்கிய பள்ளியின் முதல் ஆசான்

பாலகுமாரனை எனது 18- ஆவது வயதிலிருந்து அறிவேன். நேரடியான அறிமுகமும் பழக்கமும் 23-வது வயதில் நிகழ்ந்தது. பரஸ்பர விமர்சனங்களுக்கும் முரண்பாடுகளுக்கும் மத்தியிலும்கூட அந்த உறவில் கடைசி வரை எந்தக் கீறலும் இல்லை. அவர் வழியேதான் நான் இலக்கியத்திற்குள் வந்தேன். இலக்கியப் பள்ளியில் அவரே என் முதல் மானசீக ஆசான். என் காலத்து வாசகர்கள் பலரையும் அவர் எங்காவது ஓரிடத்தில் தன் படைப்பின் வழியே சந்தித்திருக்கிறார். இப்படி பல்லாயிரக்கணக்கான வாசகர்களைப் பெற்று கோலோச்சிய காலத்தில் நானும் இருந்தேன்.

ஆண் - பெண் உறவு குறித்து ஜானகிராமனுக்குப் பிறகு அதிக அளவில் நுணுகி நுணுகிப் பல்வேறு கோணங்களில் எழுதியவர் பாலகுமாரன் என்பது என் அனுமானம். பெண்களின்பால் கரிசனத்தோடு பேசும் அவர் எழுத்துகள், பெரும் பெண் கூட்டத்தையே வாசிக்க வைத்தது. அவர்களில் சிலருக்கு அவை தைரியமும் தெளிவும் நிம்மதியும் தந்தன. சளைக்காமல் இருநூறுக்கும் மேற்பட்ட நாவல்களை, பல நூறு கட்டுரைகளை, சிறுகதைகளை எழுதிக் குவிக்கும் அளவுக்கு அவர் எழுத்தின் மீது கொண்டிருக்கும் வேட்கை அவரது வயதுக்கு மீறிய வயதைத் தந்ததுடன் உடலையும் கடுமையாய் நலிவடையச் செய்தது.

ஒரு அரசியல்வாதியால் இயலாத, ஒரு சமூக சேவகரால் எட்ட முடியாத, ஒரு தத்துவவாதி தர இயலாத, சிலசமயம் கடவுள் நம்பிக்கையும் செய்ய இயலாது தோற்கிற ஒன்றை ஒரு கலைஞன் தனது கலையின் வழியே சப்தமில்லாமல் செய்துவிடுகிறான். அவனால் நிகழ்ந்தது தெரியாமல்.. தெரிந்த பின்னும் உரிமையேதும் கோராமல். பாலகுமாரனும் இதைச் செய்தார்.

அவரது சிறந்த கதைகளில் ஒன்று ‘தட்டாரப்பூச்சி’. கதையின் அருமந்த உள்ளடக்கமும் பாத்திரச் செதுக்கலும் அபாரமானவை. வரலாறு நெடுக, முள்ளை மட்டுமே பெரும்பாலும் பதிவுசெய்தவர்கள் மத்தியில், 87 ஆண்டுகள் வாழ்ந்து, 100 அரிய தமிழ் நூல்களை நமக்குப் பதிப்பித்துத் தந்த மகாமகோபாத்தியாய உ.வே.சாமிநாதய்யர், ஒரு ரோஜாவைப் பதிவுசெய்தார். தன் வாழ்வில் ஒரு வண்டிக்காரத் தேவன் தன்னிடம் சவாரிக்குக் கூலி வாங்க மறுத்ததை நெகிழ்ச்சியோடு குறிப்பிடுகிறார். அதுபோலவே ‘தட்டாரப்பூச்சி’. பின்னாளில், அவர் தேர்ந்த வசனகர்த்தாவாக வந்ததன் தடயங்களைக் கொண்ட பல கதைகளில், இதுவும் ஒன்று. தமிழ் சினிமாவின் தேவைக்கேற்ப வசனமெழுதுவது ஒரு பிரம்ம சூத்திரம். தமிழ் நவீன திரைக்கதை வசனத்தின் முன் ஏர்களில் ஒருவரான இவர், அதிலும் சில காலம் தனது கொடியைப் பறக்கவிட்டார்.

வாழ்வின் அபத்தத்தை, நிலையாமையைச் சொல்லும், ‘மிஷின்’ கதை 76-ல் எழுதப்பட்டிருந்தாலும் இன்றும் யௌவனம் கெடாத நவீனத்துவத்தைக் கொண்டிருக்கிறது. ஒரு இயந்திரச் சுழற்சியை வார்த்தைகளின் வழியே நம் கண்முன் நிறுத்துகிற கதை. அவர் கதைகள் பற்றி விசேஷமாகச் சொல்ல பிரத்தியேகமாகச் சில இடங்கள் இருந்தாலும், சில கதைகள் அபாரமான கதைகளே. சுதந்திரப் போராட்ட காலத்தில் ‘மணிக்கொடி’யில் எழுதிய பலரும், அந்தப் போராட்டத்தில் பங்கெடுத்தவர்கள்கூட, அதைப் பற்றி ‘மணிக்கொடி’யில் எழுதவில்லை. எழுதுவது என்பதும் அதன் உள்ளடக்கம் என்பதும் வேறொன்று என்ற மனநிலை அதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். ஆனால், அது ஒரு இலக்கிய ஆவண வரலாற்று இழப்புதான்.

இன்று மேலைநாடுகளில் டெக்னிக்கல் ரைட்டிங் நிறைய எழுதப்பட வேண்டுமெனப் பேசிவருகின்றனர். அது இப்போது கணிசமாக வரத் தொடங்கியுள்ளது. தமிழில் அந்த வகை தொழில்நுட்ப எழுத்தின் முன்னோடிகளில் ஒருவர் பாலகுமாரன்.

தனக்குச் சம்பந்தமில்லாத பல துறைகளுக்குள்ளும் சென்று ஊடாடித் திரிந்து, பலவிதமான டெக்னிக்கல் நாவல்களை எழுதியுள்ளார். ஒரு காலத்தின் கலாசார ஆவணங்கள் அவை. அதுபோன்ற கதைகளின் துல்லியத்துக்காக அவர் திரட்டும் புள்ளிவிவரங்கள், மேற்கொள்ளும் பயணங்கள், சேகரிக்கும் புத்தகங்கள், இரவு - பகல் பாராத விவாதங்கள், துறை சார்ந்த அருஞ்சொற்கள், பழக்கவழக்கப் பண்பாட்டுக் குறிப்புகளுக்காக அவர்களோடே சில காலம் வாழ்ந்து விஷயங்கள் சேகரிக்கும் விதத்தை நான் நேரில் கண்டிருக்கிறேன். பதில் சொல்பவரே சோர்ந்துபோகும் அளவுக்கு அவ்வளவு விலாவாரியாய், துருவித் துருவிக் கேள்விகள் கேட்பார். ஒரு பென்சில், பேப்பர், பேனா, டேப்ரிக்கார்டர் எதுவும் இருக்காது. எல்லாம் மனசுக்குள் வாங்கிக்கொள்வார். கதைக்குள் வரும்போது அவை கதையின் உறுப்பாய் இருக்கும். விமானமோ, விவசாயமோ, இயந்திரமோ, இயல் கலையோ எதுவாயினும் அது சார்ந்த விற்பனன் சொல்வதுபோன்ற தொனியைப் படைப்புகளில் கொண்டுவந்துவிடுவார்.

படைப்புகளில் விஷயங்களுக்கு அவருக்குப் பஞ்சமில்லாமல் போனதற்கு இன்னொரு காரணம், அவர் தனது வாசக வாசகியரோடு கொண்டிருந்த நேரடி, கடித, தொலைபேசி, மேடை, பத்திரிகைத் தொடர்புகள். பதின்பருவ வயதினரை அவர்களுக்கேயான விஷயங்களைத் தந்து வசப்படுத்தி முதலில் கதைக்குள் இழுத்துவிடுவார். ஆனால், அவன் கதையை விட்டு வெளியே செல்கையில், ஒரு பக்குவம் உணர்ந்த தன்மையை அவன் உணர, அவனை அடுத்த படிநிலைக்கு இயல்பாய் நகர்த்த, சதா அவர் தன் எழுத்துகளின் வழியே முயன்றுகொண்டேயிருந்தார். தளர்ந்துபோனவளைத் தாங்கிப் பிடித்து உற்சாகம் தருவதையும் காயம்பட்டவனுக்குக் களிம்பு தடவியதையும் அவர் எழுத்து செய்ததாலேயே அவருக்குப் பெரும் திரளான வாசகர் கூட்டம் இருக்கிறது. அவருக்குப் பின் அது யாருக்கும் இல்லை.

இவை எல்லாவற்றையும்விட முக்கியமாகச் சொல்ல வேண்டியது, அவரது அசாத்தியமான நடை. மர்ம நாவல்களில் துலங்கும் விறுவிறுப்பை, சமூக நாவல்களின் நடையில் கொண்டுவருதல் அவ்வளவு எளிதான காரியமல்ல. எந்தத் திருவிழாவிலும் தன் குழந்தையை இறுகப் பிடித்தபடி, வாத்சல்யத்தோடு நிகுநிகுவென அழைத்துச் செல்கிற அபூர்வ நடை அவருடையது.

வாத்தியார் வீட்டு அகல நெடுந்திண்ணையில் யார் யார் வீட்டுப் பிள்ளைகளுக்கோ எப்போதும் பாடம் நடந்தபடிதான் இருக்கும். நான் அவரைப் பார்த்தபடியே சைக்கிளில் அவர் வீட்டைக் கடப்பேன். ஒரு கணம் இருவரும் பார்த்துக்கொள்வோம். அவரும் கூப்பிடுவதில்லை. நானும் நிற்பதில்லை. ஆனால், இருவரும் பேசிக்கொள்வோம்.



ரவிசுப்ரமணியன்

எழுதியவர் : (23-May-18, 3:41 pm)
பார்வை : 23

சிறந்த கட்டுரைகள்

மேலே