ரத்த சரித்திரம்----------------வா மணிகண்டன்

எவ்வளவு மோசமான நிலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்? எவ்வளவு பெரிய முரடர்கள் நம்மை ஆண்டு கொண்டிருக்கிறார்கள்.

நாம் ஒன்றை எதிர்த்துக் குரல் கொடுக்கும் போது அரசாங்கம் துப்பாக்கியை எடுத்து வந்து சுட்டுக் கொல்கிறது. கொன்றுவிட்டு 'வன்முறையை தடுக்கதான் சுட்டோம்' என்கிறார்கள். கலவரங்களை ஒடுக்கும் போது ஒன்றிரண்டு பேர்கள் இறந்து போனதாகச் சொல்வார்கள். ஆனால் தூத்துக்குடியில் இதுவரைக்கும் எட்டு அல்லது ஒன்பது பேர்கள் செத்திருக்கக் கூடும் என்கிறார்கள். முழுமையான கணக்கு தெரியவில்லை. ஒன்பது குடும்பங்களைத் தெருவில் நிறுத்தியிருக்கிறார்கள். அவர்களது குழந்தைகளை அனாதைகளாக்கியிருக்கிறார்கள். பச்சையான அநீதி இது. மாலை வரைக்கும் போலீஸ் வேட்டையாடிக் கொண்டிருப்பதாக நண்பர்கள் சொல்கிறார்கள். மேலிடத்துக்குத் தெரியாமல் இருக்க வாய்ப்பே இல்லை. இவ்வளவு குரூரமான அரச வன்முறை சமீப காலத்தில் இன்றுதான் நிகழ்ந்தேறியிருக்கிறது. அவரவர் சொந்த ஊரிலேயே உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடுவதை போன்ற அவலம் வேறு எதுவும் இருக்க முடியாது. தமிழக அரசு அதைச் செய்து காட்டியிருக்கிறது.

முழுமையான விவரங்கள் நாளை தெரியக் கூடும் அல்லது கடைசி வரைக்கும் விவரங்கள் வெளியில் தெரியாமலேயே பார்த்துக் கொள்வார்கள். இனி கதைகள் கட்டவிழ்த்துவிடப்படும். இறந்து போனவர்கள் மீதுதான் தவறு என்று வரிசையாக செய்திகள் வரும். 'அவர்கள் ஒன்றும் தியாகிகள் இல்லை' என்று எழுதுவார்கள். இப்பொழுதே கூட 'மக்கள்தான் வன்முறையில் ஈடுபட்டார்கள்' என்று ஒரு தரப்பினர் பேசாத தொடங்கியிருக்கிறார்கள்.

இப்படியான polarizationதான் மிக அபயாகரமானது. நமக்குள்ளேயே பிரிந்து கிடக்கிறோம். தம் சொந்த மக்களையே குருவி சுடுவதைப் போல சுட்டுத் தள்ளியவர்களை எதிர்த்துதான் இந்தத் தருணத்தில் பேச வேண்டுமே தவிர மக்களை குற்றவாளிகளையாக்கி கூண்டில் ஏற்றிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. இதை 'தூத்துக்குடி சம்பவமாக' மட்டும் பார்க்க முடியவில்லை. சகல மக்களுக்கும் இதுவொரு எச்சரிக்கை மணி. எதிர்த்து பேச எத்தனித்தால் 'இதுதான் கதி' என்று நேரடியாக மிரட்டியிருக்கிறது அரசாங்கம்.

ஒன்றைப் புரிந்து கொள்ளாமல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். சாமானிய மனிதனின் மனதில் பயத்தை விளைவித்து அவனை ஒடுக்கிவிடலாம் என்று நம்புவதை போன்ற முட்டாள்தனம் எதுவும் இருக்க முடியாது. தனிமனிதர்களை அப்படி மிரட்டலாம். சமூகத்தையே வன்முறையைக் கட்டி மிரட்ட முயற்சித்தால் ஒரு கட்டத்தில் திமிறிவிடுவார்கள். எல்லாவற்றுக்கும் எல்லையுண்டு. நீறு பூத நெருப்பாக விரவிக் கிடந்த வெறுப்பை ஊதி விட்டிருக்கிறார்கள். இந்த வடு என்றைக்கும் அழியாது. தமிழக வரலாற்றில் ஒரு கருப்பு தினம் இன்று. தமிழக அரசு தனது முடிவுரையை தூத்துக்குடி மக்களின் ரத்தத்தில் எழுதியிருக்கிறது.

துப்பாக்கிச் சூட்டில் இறந்து போனவர்களுக்கு அஞ்சலிகள். அவர்களது குடும்பங்கள் மனவுறுதி பெறட்டும்.

போராட்டக்காரர்கள் மீது 'பிரிவினைவாதிகள்' 'தேசத்துரோகிகள்' என்று தயவு செய்து முத்திரை குத்த வேண்டாம். ஸ்டெர்லைட் மீது போராட்டக்காரர்கள் மட்டுமே எதிர்ப்பைக் காட்டவில்லை. அது சூழலைக் கெடுத்திருப்பதாக உச்ச நீதிமன்றம் நூறு கோடி ரூபாய் தண்டம் விதித்திருக்கிறது. ஆலை இனி இயங்க அனுமதிக்க முடியாது என்று மாசுக் கட்டுப்பட்டு வாரியம் சொல்லியிருக்கிறது. அப்பேர்ப்பட்ட ஆலை இனி இயங்கக் கூடாது என்றுதான் அந்த ஊர் மக்கள் கேட்கிறார்கள். அதுவும் திடீரென்று கிளம்பி வரவில்லை. ஆண்டுக்கணக்கில் ஆலையை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களைத்தான் மனசாட்சியே இல்லாமல் சுட்டுத் தள்ளியிருக்கிறார்கள்.

ஒரு வினாடி யோசித்துப் பார்க்கலாம்- வீட்டு முன்பாக குப்பை கிடந்தால், வீதியில் சாக்கடை தேங்கினால் புகார் அளிக்க விரும்புகிறவர்கள்தான் நாம். அந்த ஊரில் காற்றும் நீரும் கெட்டு, மக்களுக்கு அதன் பாதிப்புகள் தெரிகின்றன என்கிறார்கள். தம் குழந்தைகள் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்று பயப்படுகிறார்கள். அவர்கள் அந்த ஆலையை மூடச் சொல்லிக் கேட்பதில் என்ன தவறு இருக்கிறது? நாமாக இருந்தாலும் அதைத்தானே கேட்டிருப்போம்?

இன்றைய அரசு எந்தவிதத்திலும் வலுவில்லாதது. மக்களின் போராட்டங்களை, எதிர்ப்புணர்வை கையாளத் தெரியாத அரசு இது. வலுவில்லாதவன் தன்னை எதிர்த்து பேசுகிறவனை கையில் கிடைத்ததை எடுத்து அடிப்பதைப் போல இந்த அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. துரதிர்ஷ்டவசமாக அவர்களிடமும் துப்பாக்கியும் சுட்டுத் தள்ள காவலர்களும் இருக்கிறார்கள்.

தூத்துக்குடி சம்பவங்களின் சில காட்சிகளை பார்க்க நேர்ந்தது. விரல்களுக்குள் பயம் பரவுகிறது. குரூரமான காட்சிகள் அவை. காவல்துறையின் வேகம் அச்சமூட்டுகிறது. மக்களைக் காக்க வேண்டியவர்கள் சர்வசாதாரணமாக துப்பாக்கியின் ரவைகளை அவர்கள் நெஞ்சில் செலுத்துகிறார்கள். இவையெல்லாம் ஆட்சியாளர்களுக்குத் தெரியாமலா நடந்திருக்கிறது?. இன்றைக்கு தூத்துக்குடியில் நிகழ்ந்தது நாளை எந்த ஊரில் வேண்டுமானாலும் நடக்கலாம். அங்கு பாய்ந்த தோட்டாக்கள் நம் நெஞ்சங்களை குறி பார்க்க எத்தனை நாட்கள் பிடிக்கும்?

எழுதியும் பேசியும் வருவதனால் எந்த மாறுதலும் நிகழப் போவதில்லை. ஒவ்வொரு தரப்பு மக்களும் இந்த அநியாயங்களை புரிந்து கொள்ள வேண்டும். சகல திசைகளிலும் அக்கிரமங்களைப் பற்றி பேச வேண்டும். அதுதான் ஒரே வழி. படுகொலை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. உண்மையிலேயே பயமூட்டுகிற சம்பவம் இது. எதிரிக்கும் கூட இப்படியொரு சூழல் அமைந்துவிடக் கூடாது என்று பதறுகிறேன்.

தமிழக அரசுக்கு கடுமையான கண்டனங்கள். இப்படியொரு சம்பவத்துக்கு முழுமையான பொறுப்பையும் அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆட்சியில் தொடர தமிழக அரசுக்கு எந்தத் தார்மீக உரிமையுமில்லை. எதிர்காலத்திலாவது தார்மீகம் என்ற சொல்லுக்கெல்லாம் அர்த்தம் தெரிந்தவர்கள் நம்மை ஆள வேண்டும் என்று கடவுளை பிரார்தித்துக் கொள்கிறேன்.

எழுதியவர் : (23-May-18, 5:34 pm)
பார்வை : 17

சிறந்த கட்டுரைகள்

மேலே