உரிமைகளை பறிக்காதீர்கள்

நூறு நாட்கள் வரை
உண்ண உணவின்றியும்
உறங்க நேரமின்றியும்
வீடுகளின் ஓரம்
நெடுநாட்களாக போராட்டம் தொடர்ந்தது!

வீதியோரம் போராடும் வரை
விழிதிறந்து பார்க்க
நேரம் ஒதுக்காதவர்கள் -- இன்று
நெடுஞ்சாலைகளில் நின்று
எதிர்க்கின்றனர்...

அத்தனை நாள் போராட்டத்தில்
ஆகாரம் ஏந்திக் கொண்டு
உடலை காக்க எவரும்
முன்வரவில்லை -- ஆனால்
இன்று ஏனோ ஆயுதம் ஏந்தி
ஆயிரக்கணக்கில் அணிவகுக்கின்றார்கள்

நூறு நாட்கள் பொறுமை காத்தவர்கள்
இன்று
பொறுமையை இழப்பார்களா?....
பொறுமையை இழக்க வேண்டாமென்று
இருந்தவர்கள் இப்போது
பொதுச்சாலைகளில் உயிரை இழக்க
முற்பட்டுவிட்டார்கள்!!

" அமைதி என்ற பெயரில்"
ஊர்வலம் வந்தவர்களை
"அமரர் ஊர்தியில் அழைத்து செல்ல"
அனுமதி கொடுத்தது யாரோ???.....

வனவிலங்குகள் கூட
வாழ வேண்டுமென்று
பாதுகாக்கும் மண்ணில்!
"பாமர மக்களுக்கு மட்டும் ஏன்"
இத்தனை பாதகம்????
இயற்கை காற்றை கேட்டவர்களால்
"மரணத்தை கூட
இயற்கையாக பெற முடியாமல்"
போய்விட்டதே.......

நீதி கேட்க வந்தவர்கள் "நெஞ்சில்"
துப்பாக்கி குண்டுகள்தான்
துளைக்கும் என்றால்!
நீதி மன்றங்கள் எதற்கு???
குடியரசு நாட்டில்
குடும்பங்களாக கூடி வாழவே
இத்தனை போராட்டம் வேண்டுமா???...

சட்டங்கள் எழுத்துக்களில்
இருப்பதாலோ என்னவோ - அது
இன்னும் ஏடுகளில் மட்டுமே
பாதுகாக்கப்படுகின்றது! ஏடுகளிலே
எல்லாவற்றையும் பாதுகாப்பதால்
இங்கு ஏதாவது நிகழ்ந்துவிடுமா?...
அதனை போதிய இடத்தில்
பராமரிக்க வேண்டாமா?....

சுதந்திர நாட்டில்
உரிமைக்காக போராட்டம் நடத்தினால்
உயிர் தான் போகுமென்றால்!
"பெற்ற சுதந்திரத்தினை"
பெருமையாக நாங்களே
கொடுத்துவிடுகிறோம்!!

முடியாட்சி உள்ள நாட்டிலும்
மக்கள் உயிரை காக்க
பல முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றது...

வன்முறை தான்
எதற்கும் தீர்வென்றால்
எதற்காக நாங்கள் இத்தனை நாட்கள்
வாயால் முழக்கமிட்டோம்?????????

"உப்பெடுக்கும் மண்ணில்
உதிரம் தான் வேண்டுமென்றால் -- அதனை
முழுவதுமாக உறிந்து குடித்துவிடுங்கள்
அதற்காக
எங்கள் "உரிமைகளை பறிக்காதீர்கள்...!!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (23-May-18, 6:46 pm)
பார்வை : 516

மேலே