149 மனையவள் நகைப்பஞ்சி வாள் வெல்லலே வலிமை - கணவன் மனைவியர் இயல்பு 41

கலி விருத்தம்

வினையில் வென்றியி லாதிங்கு மீண்டதற்கு
இனன்மு னிந்திடு மென்றஞ்சி லேம்வசை
தனையு மெண்ணிலந் தாரந் திறலிலேம்
எனந கிற்செய்வ தென்சொ லிதயமே. 41

- கணவன் மனைவியர் இயல்பு
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”போர் முயற்சியில் வெற்றிபெறாது இங்கு மீண்டதற்கு உறவினர் கோபப்பட்டு வெறுப்பார் என்று நான் அஞ்சமாட்டேன். உலகோர் கூறும் பழியையும் கருத மாட்டேன்.

தாரமாகிய என் மனைவி வலிமை இல்லாதவன் என இகழ்ச்சியாகச் சிரித்தால் என்ன செய்வது என்று சொல்வாயாக, நெஞ்சே!” என்று தலைவன் வருந்துவதாக இப்பாடலில் பாடலாசிரியர் ’வாள் வெல்லலே வலிமை’ என்று கூறுகிறார்.

வினை - முயற்சி. இனன் - உறவினன், நகின் - சிரித்தால்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (26-May-18, 4:57 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 31

மேலே