151 இல்லவள் முகத்துக்கு ஈடின்று திங்களும் - கணவன் மனைவியர் இயல்பு 43

கலி விருத்தம்

எழிலி லாளில் லவளெனும் வேசிதேன்
மொழிமு கத்தை மதியைமுன் னான்முகன்
சுழித ராசினிற் றூக்கத்தட் டோடும்பர்
எழுநி சாபதி யின்னுமிங் கெய்திலான். 43

- கணவன் மனைவியர் இயல்பு
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”மனையவள் அழகில்லாதவள் என்று என் மனைவியைக் கூறும் பரத்தையே!

உலகைப் படைத்த நான்முகன் தேன்போலும் மொழியையுடைய என் மனைவியின் முகவொளியின் சிறப்பையும், வானில் பவனி வரும் மதியின் சிறப்பையும் உட்குழிந்த தராசுத் தட்டில் வைத்துத் தூக்க, வான்மதியின் தட்டு முகத்திங்களுடன் போட்டி போட முடியாமல் மேலெழுந்து வானம் சென்றது. அந்த நிலவு மீண்டும் நிலவுலகுக்கு வரவில்லை” என்று மனைவியின் முகத்திற்கு வான்மதியும் ஈடில்லை என்று இப்பாடலாசிரியர் தெரிவிக்கிறார்.

வேசி - பரத்தை. சுழி - உட்குழிவு. நிசாபதி - திங்கள். நிசா - நிசி; இரவு.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (27-May-18, 8:12 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 41

மேலே