வேதநாயகம் பிள்ளையின் விநோதக் கடிதம்

திருவாவடுதுறை ஆதீன கர்த்தராக விளங்கிய மேலகரம் சுப்பிரமணிய தேசிகர் ஒரு பெரிய தமிழ் அறிஞர். அவரை வந்து சந்திக்கும் தமிழ்ப் புலவர்களுக்குப் புரவலராக விளங்கினார். பலருக்கும் தமிழ் நூல்களை விளக்கிப் பாடம் சொன்னவர் அவர். அவரது பெருமையைக் கேட்ட மாயூரம் முன்சீப்பு வேதநாயகம் பிள்ளை ஒரு நாள் அவரைக் காணவந்தார். அவர் கிறிஸ்தவர். சுப்பிரமணிய தேசிகர் மடாதிபதி. ஆயினும் தமிழ் என்னும் பாலம் அவர்களை இணத்தது.

மடாதிபதியும், நீதிபதியும் பல மணி நேரம் கலந்துரையாடினர். பொழுது சாயும் வேளையில் மாட்டு வண்டியில் ஏறி வேதநாயகம் பிள்ளை மாயூரத்துக்கு விரைந்தார். வண்டிதான் முன்னே சென்றதே தவிர அவர் மனம் பின்னேயே சென்றது; அதாவது திருவாவடுதுறையை நோக்கியே எதிர்த் திசையில் போய்க்கொண்டிருந்தது.

மறுநாள் காலையில் வேதநாயகம் பிள்ளை எழுந்தார். ஆனால் வேலையே ஓடவில்லை. திருவாவடுதுறையிலேயே ஒரு பொருளை விட்டுவந்ததால் ஒரு தவிப்பு. உடனே அந்தப் பொருளைக்கேட்டு கடிதம் எழுதினார். இருவரும் தமிழ் அறிஞர் ஆனதால் கவிதை வடிவில் கடிதம் எழுதினார்:–

சுருதியோர் உருக்கொண்டென்ன

சுப்பிரமணிய மேலோய்!

கருதி இன்னொருகால் உன்னைக்

காணலாம் எனும் அவாவால்

பொ ரு தி என்மனம் பின் ஈர்க்கப்

பொறையுறும் வண்டி பூட்டும்

என்பதி அடைந்திட்டேனே

பொருள்:-

வேதமே உருவாய் நின்றது போல விளங்கும் சுப்பிரமணியப் பெரியவரே! இன்னும் ஒருமுறை உம்மைக் கணுவோம் என்று மனம் பின்னே செல்கிறது. வண்டியோ எருதுகளால் இழுக்கப்பட்டு முன்னே விரைந்தோடுகிறது.

மனம் ஓரிடத்திலும் உடல் வேறொரு இடத்திலும் இருந்தால் எப்படி வேலை செய்யமுடியும். ஆகையால் என் மனத்தை உடனே அனுப்பிவையுங்கள் என்று இன்னொரு பாடல் எழுதி கடிதத்தை அனுப்பிவைத்தார்.

சூர்வந்து வணங்கு மேன்மை சுப்பிரமணியத் தேவே

நேர்வந்து நின்னைக் கண்டு நேற்றிராத்திரியே மீண்டு

ஊர்வந்து சேர்ந்தேன்; என்றன் உளம் வந்து சேரக்காணேன்

ஆர்வந்து சொலினும் கேளேன் ; அதனையிங்கனுப்புவாயே

தமிழ் மீது கொண்ட அன்பு, எப்படி இருவேறு மதத்தினரைச் சேர்த்து வைக்கும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. நல்ல நட்புக்கும் எடுத்துக் காட்டு.

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து

அகநக நட்பது நட்பு (குறள் 786)

காளிதாசனும் வேதநாயகம் பிள்ளையும்

வேதநாயகம் பிள்ளை பயன்படுத்திய ஒரு உவமை 2000 ஆண்டுகளுக்கு முன்னரே காளிதாசனாலும் பயன்படுத்தப்பட்டது.

சகுந்தலை என்னும் பேரழகியை, கண்வரின் ஆசிரமத்தில், மாமன்னன் துஸ்யந்தன் கண்டான்; கண்டதும் காதல் மலர்ந்தது. இருந்தபோதிலும் மாமன்னன் என்பதால் உடனே அவளை அணுக மனமில்லை. மேலும் அவளோ தோழிகளுடன் சென்று விட்டாள். மாமன்னரின் தேர் தலைநகரை நோக்கி விரைந்தோடியது. தேரிலுள்ள அவரது உடல்தான் முன்னே சென்றது. மனமோ தேருக்கு எதிர்த் திசையில் சென்றது. அதாவது பேரழகி சகுந்தலையை நோக்கிச் சென்றது. காளிதாசன் உவமை மன்னன். ஆயிரத்துக்கும் மேலான உவமைகளை தனது ஏழு நூல்களிலும் அள்ளித் தெளித்திருக்கிறான்.

மனம் பின்னே சென்றது; உடல் முன்னே சென்றது என்பதற்கு அவன் பயன்படுத்திய உவமை: தேர் முன்னே சென்றது; தேரின் உச்சியில் கட்டப்பட்ட கொடியோ எதிர் திசையை நோக்கிப் பறந்தது! தேர் = உடல்; கொடி= மனம்.

கொடியும் காற்றில் படபடக்கும்; மனமும் காம வேகத்தில் படபடக்கும். அருமையான உவமை.

வேதநாயகம் பிள்ளையும் இந்த சாகுந்தல ஸ்லோகத்தைப் படித்திருப்பார். அதனால் மனம் பின்னோக்கிச் சென்றது, வண்டி முன்னே சென்றது என்ற உவமையைப் பயன்படுத்தி இருக்கலாம்; அல்லது பெரியோர் ஒரே மாதிரி எண்ணுவர் “GREAT MEN THINK ALIKE” என்றும் கருத இடமுண்டு!


லண்டன் ஸ்வாமிநாதன்

எழுதியவர் : (27-May-18, 9:10 pm)
பார்வை : 21

சிறந்த கட்டுரைகள்

மேலே