மாதவம் - 14

மும்பையில், கோமதியின் வீட்டில், குழந்தையின் வருகையையொட்டி, அமர்க்களப்படுத்தப்பட்டது. ஏழைகளுக்கு அன்னதானங்கள், கோவில்களில் அபிஷேகங்கள், உற்றார் சுற்றாருக்கு விருந்து உபசரிப்புகள் என, கிருஷ்ணன் அனைத்து ஏற்பாடுகளையும் அசத்திவிட்டான். கூச்சலும், குமுறலுமாய் இருந்த வீடு, இப்போது சிரிப்பொலியும், குதூகலமுமாய்க் கலைக்கட்டியது. கோமதிக்கும், மாமியாளுக்கும், இருந்த பனிப்போர் முறிந்து, அனைவரின் சிந்தனையும், செயலும், மஹாவைச் சுற்றியே இருந்தது.

கோமதி, தன் தங்கையிடம் உரையாடுவதைக் கூட, வெகுவாகக் குறைத்துக்கொண்டாள். கோதையின் அழைப்புகளை அவ்வப்போது தவிர்த்தாள். ஒரு சில முறை பேசும்போது கூட, முன்பிருந்த நேசம், சற்று வற்றிப்போனதாய் உணர்ந்தாள், கோதை.


மஹாவைப் பெற்றெடுக்க, கோதை பூண்டிருந்த ஒருவருடத் தவக்கோலம் களைந்து, மெல்ல மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்ப முயற்சித்தாள். ஆயினும், ஒரு சிறிய ஏக்கம், இவளை அறுத்துக்கொண்டே இருந்தது .

ஒரு நாள், கோதைக்கு, கோமதியிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது.
"ஹலோ! கோதை எப்படி இருக்க?", என்றாள் கோமதி.
"நல்லா இருக்கேன்கா. நீ எப்படி இருக்க? மஹா எப்படி இருக்கா?", என்றாள் கோதை.
"அவளுக்கென்ன?! இந்த வீட்டு ராஜகுமாரி. நல்லா இருக்கா. லதா,சுதா எப்படி இருக்காங்க? அண்ணன் வேலைக்குப் போய்ட்டாங்களா?", என்றாள் பரிவாய்.
"எல்லாரும் நல்லா இருக்காங்க"
"மஹாவுக்கு முதல் பிறந்த நாள் வருதில்ல. அத விமர்சயா கொண்டாடலாம்னு இருக்கோம். சென்னைல தான், ஒரு ஹோட்டல்ல செய்யலாம்னு இருக்கோம். இந்த வாரம் சனிக்கிழமை, சென்னைக்கு எல்லாரும் வந்துடுவோம். ஞாயிற்றுக்கிழமை மதியம் தான், பிறந்தநாள் விழா. நீங்க எல்லாரும் நிச்சயமா வந்துடணும்"
"கண்டிப்பாகா. என் பிள்ளை பிறந்தநாளை விட, என்ன முக்கியமா வந்துடப்போகுது?"
சற்று அமைதியாய்ப்போன கோமதி, "சரிடி. என் பிள்ளை அழுவுறா. நான் அப்புறம் பேசறேன்", என்று கூறிவிட்டு, தொடர்பை துண்டித்தாள் .

கோதைக்கு அன்று முழுதும் வருத்தமாக இருந்தது. கோமதியின் மாற்றங்கள், இவளை மிகவும் வேதனைப்படுத்தின. ஆனால், தன் பிள்ளையை சில தினங்களில் காணப்போகிறோம் என்கின்ற ஆனந்தம், அவளின் வருத்தங்களை மறைத்தது.

எழுதியவர் : அர்ச்சனா நித்தியானந்தம் (6-Jun-18, 11:38 pm)
சேர்த்தது : அர்ச்சனா
பார்வை : 96

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே