422 உயிர் நீங்கின் மக்கள் உடல் ஒன்றுக்கும் பயனாகாது - யாக்கை நிலையாமை 4

அறுசீர் விருத்தம்
(காய் 4 / மா தேமா)
(காய் வருமிடத்தில் விளம் வரலாம்)

மாடாடு விலங்கிறப்பிற் றசைமயிர்தோல் கொம்புதவும்
..மட்க லந்தான்
ஓடாக வுடையினொன்றுக் குதவும்வீழ் மரங்கல்லும்
..உபயோ கந்தான்
வீடான திடியின்மேற் பொருளுதவுங் காடழியின்
..விறகா மாயக்
கூடாகுந் தேகமிது வீழினெதற் குதவும்நீ
..கூறாய் நெஞ்சே. 4

- யாக்கை நிலையாமை
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

”மாடு ஆடு முதலிய விலங்கினங்கள் இறந்தால் தசை, மயிர், தோல், கொம்புஆகியவை மக்களுக்குப் பயன்படும். மண் பானையும் உடைந்தால் ஓடாகப் பிரிதொன்றுக்குப் பயன் பெறும்.

கீழே விழுந்த மரம் கல் முதலியவும் பயனாகும். வீடு இடிந்தாலும் மேலே உள்ளது போல மரம், கல்லும் பயன்பெறும். காடு அழிந்தால் விறகாகும்.

மாயமாகிய கூடான உடல் உயிர் நீங்கிய பின் எதற்குப் பயனாகும் என்று நீ சொல்” என்கிறார் இப்பாடலாசிரியர்.

குறிப்பு: இன்றைய நிலையில் இறந்த பின் உடல் தானமும், இறக்கும் நிலையில் (Brain death) உடல் உறுப்புகள் தானமும் பலருக்கு பயன் தருகிறது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (9-Jun-18, 10:02 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 50

மேலே