திருப்புகழ் 971 கரம் கமலம் மின் இலஞ்சி பாடல்

தனந்த தனதன தனந்த தனதன
தனந்த தனதன ...... தனதான

......... பாடல் .........
கரங்க மலமின தரம்ப வளம்வளை
களம்ப கழிவிழி ...... மொழிபாகு

கரும்ப முதுமலை குரும்பை குருகுப
கரும்பி டியினடை ...... யெயின்மாதோ

டரங்க நககன தனங்கு தலையிசை
யலங்க நியமுற ...... மயில்மீதே

அமர்ந்து பவவினை களைந்து வருகொடி
யவந்த கனகல ...... வருவாயே

தரங்க முதியம கரம்பொ ருததிரை
சலந்தி நதிகும ...... ரெனவான

தலம்ப ரவமறை புலம்ப வருசிறு
சதங்கை யடிதொழு ...... பவராழி

இரங்கு தொலைதிரு வரங்கர் மருகப
னிரண்டு புயமலை ...... கிழவோனே

இலங்கு தரதமிழ் விளங்க வருதிரு
இலஞ்சி மருவிய ...... பெருமாளே.
----------------------------------------------------------------

......... சொல் விளக்கம் .........

கரம் கமலம் மின் அதரம் பவளம் வளை களம் பகழி விழி ...
கைகள் தாமரைக்கு ஒப்பாகும். ஒளி பொருந்திய வாயிதழ் பவளத்துக்கு
ஒப்பாகும். கழுத்து சங்குக்கு ஒப்பாகும். கண் அம்புக்கு ஒப்பாகும்.

மொழி பாகு கரும்பு அமுது முலை குரும்பை குருகு பகரும்
பிடியின் நடை ... பேச்சு சர்க்கரைப் பாகு, கரும்பு, அமுது
இவைகளுக்கு ஒப்பாகும். மார்பகங்கள் தென்னங் குரும்பைப் போன்று
திடமானவை. நடை பிரசித்தி பெற்ற பெண் யானையின் நடைக்குச்
சமமாகும்

எயின் மாதோடு அரங்க நக கன தனம் குதலை இசை
அலங்க ... இத்தகைய வேடர் குலப் பெண்ணாகிய வள்ளியுடன் (நீ
அணைந்து வருவதால்) மலை போன்ற கனத்த மார்புகள் அழுந்துதல்
உற, மழலைச் சொல் போல, இன்னிசை கூடிய வள்ளியின் மொழி
பின்புலத்தில் கேட்க,

நிய(ம)ம் உற மயில் மீதே அமர்ந்து பவ வினை களைந்து வரு
கொடிய அந்தகன் அகல வருவாயே ... நிச்சயமாகவே நீ மயிலின்
மேல் ஏறி வீற்றிருந்து, பிறப்பாகிய வினையை ஒழித்து, என்னைப் பிடிக்க
வரும் அந்தக் கொடிய யமன் அணுகாமல் இருக்க வருவாயாக.

தரங்கம் முதிய மகரம் பொருத திரை சல(ந்)தி நதி குமரன்
என ... அலைகள் நிறைந்ததும், பெரிய மீன்கள் சண்டையிட்டு
விளையாடுவதும், அலைகளை வீசுவதும், கடல் போன்றதும் ஆகிய
கங்கை நதி பெற்ற குமரனே (காங்கேயனே) என்று,

வான தலம் பரவ மறை புலம்ப வரு சிறு சதங்கை அடி
தொழுபவர் ... விண்ணோர் போற்ற, வேதம் ஒலி செய்து வாழ்த்த, சிறிய
கிண்கிணிகள் அணிந்துள்ள உனது திருவடிகளைத் தொழுபவரும்,

ஆழி இரங்கு தொ(ல்)லை திரு அரங்கர் மருக ...
பாற்கடலிடையே கருணையுடன் பள்ளி கொண்ட பழையவரும்,
ஸ்ரீரங்கத்துப் பெருமானும் ஆகிய திருமாலின் மருகனே,

பனிரண்டு புய மலை கிழவோனே ... பன்னிரண்டு தோள்
மலைகளை உடைய குறிஞ்சி வேந்தே,

இலங்கு தர தமிழ் விளங்க வரு திரு இலஞ்சி மருவிய
பெருமாளே. ... விளக்கம் பூண்டுள்ள தமிழ் விளங்க
திருஞானசம்பந்தராக வந்து தமிழ் மொழிந்தவனே, திரு இலஞ்சி*
நகரில் வீற்றிருக்கும் பெருமாளே.

------------------------------------------------------------------------------------------------
* இலஞ்சி தென்காசி ரயில் நிலையத்துக்கு 4 மைலில் உள்ள தலம். குற்றாலஅருவிக்கு மிக அருகில் உள்ளது.

--------------------------------------------------------------------------------------------------------------------

எழுதியவர் : (10-Jun-18, 6:14 pm)
பார்வை : 54

சிறந்த கட்டுரைகள்

மேலே