நல்ல திட்டங்கள்தான் மக்களைப் போய் சேருவதில்லையே ஏன்

மத்திய, மாநில அரசுகளைப் பொறுத்தவரை, வரி உள்ளிட்டவை மூலம் பெறப்படும் மொத்த வருவாயில் குறிப்பிட்ட சதவீதம் மட்டுமே நலத் திட்டங்களுக்காக ஒதுக்கப்படுகிறது. அந்த வகையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், அனைவருக்கும் கல்வி, விவசாயிகளுக்கான காப்பீடு, அனைவருக்கும் வீடு என 100-க்கும் மேற்பட்ட திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டங்களுக்காக ஆண்டுக்கு ரூ.2 லட்சம் கோடி வரை ஒதுக்கப்படுகிறது.

இதேபோல, தமிழக அரசும் திருமண உதவி, முதல்வர் காப்பீடு, இலவசமாக ஆடு, மாடு, கோழி வழங்குவது போன்ற திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. மக்களின் நல்வாழ்வுக்காக வகுக்கப்படும் இந்த திட்டங்கள் அனைத்தும் அடித்தட்டு மக்கள் வரை சென்றடைய வேண்டும்.

இந்தப் பணி மாவட்ட நிர்வாகத்திடம்தான் உள்ளது. ஆனால், வகுக்கப்படும் திட்டங்கள் மக்களுக்குப் பயன்படுமா? குறிப்பிட்ட பகுதி யில் இத்திட்டத்தை செயல்படுத்த முடியுமா? என்பது குறித்து கருத்து சொல்ல, அமலாக்க அதிகாரியான மாவட்ட ஆட்சியருக்கு வாய்ப்பு வழங்கப்படுவது இல்லை என்பது நீண்டகால குற்றச்சாட்டு. திட்டங்களை வகுக்கும் உயர் அதிகாரிகளும் இதைக் கண்டுகொள்வதில்லை. திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்து செயல்பாட்டுக்கு தொடங்கி வைக்கும் ஆட்சியாளர்களும் கவனிப்பதில்லை.

இதில் விதிவிலக்கும் உண்டு. தமிழக அரசு சார்பில் 2011-16 காலகட்டத்தில் மக்களுக்கு இலவச கிரைண்டர், மிக்ஸி, மின்விசிறி வழங்கப்பட்டன. ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மின்விசிறி பயன்படாது என்பதை, சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள்தான் மேல்மட்டத்துக்கு தெரியப்படுத்தினர். இதனால் அப்பகுதிகளில் மட்டும் மின்விசிறிக்கு பதிலாக, மின் அடுப்பு வழங்கப்பட்டது. ஆனாலும்கூட, நிர்வாக குளறுபடிகள் காரணமாக சில மாவட்ட ஆட்சியர்களால் சிறப்பாக செயல்பட முடியாமல் போவதாக கூறப்படுகிறது.

நிர்வாகம் 3 அடுக்காக பிரிக்கப்பட்டதுதான் இதற்கு காரணம் என்ற கருத்து நிலவுகிறது. மாவட்டத்தின் உச்சபட்ச அதிகாரம் படைத்தவர் ஆட்சியர். ஐஏஎஸ் அதிகாரியான அவரது நிர்வாகத்தின் கீழ் மாவட்டம் உள்ளது. மாநில அளவில் உள்ள பல்வேறு துறைகளின் மாவட்ட அலுவலகங்கள் ஒரு பிரிவாக செயல்படுகின்றன. தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் ஒரு பிரிவாக செயல்படுகின்றனர். இந்த 3 பிரிவுகளின் ஒருங்கிணைப்பாளராக அதிகார அளவில் அறியப்படுவது மாவட்ட ஆட்சியர்தான். ஆனால், மாவட்ட அளவிலான துறை அலுவலகங்களின் கட்டுப்பாடு, அந்தந்த துறைத் தலைவரிடமே உள்ளது. உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகத்திலும் பிரச்சினைகளின்போது மட்டுமே ஆட்சியர் தலையிட முடியும்.

சீர்திருத்தம் தேவை

பேரிடர் காலங்களில் ஆட்சியருக்கு அதிகாரம் இருந்தாலும், மற்ற துறைகளின் திட்டங்களை அவர் அமல்படுத்த முடியாது. இதற்கு நிர்வாக கட்டமைப்பில் உள்ள குளறுபடிகளே காரணம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி எம்.ஜி.தேவசகாயம் கூறியதாவது:

நாட்டில் அடித்தள ஜனநாயகம் என்பதே இல்லை. உத்தரவுகள் டெல்லியில் இருந்தும், சென்னையில் இருந்தும் வரும். அவர்கள் சொன்னதைச் செய்ய வேண்டியது மட்டுமே ஆட்சியரின் வேலை. பஞ்சாயத்துராஜ் என்பதெல்லாம் பெயரளவுக்குதான் உள்ளது. ஆங்கிலேயர் ஆட்சியில் வருமானத்தை வசூலித்து தருகிற, ‘கலெக்ட்’ செய்கிற நிர்வாகிகளாகவே மாவட்ட ஆட்சியர்கள் இருந்தனர். சுதந்திரத்துக்குப் பிறகு, வளர்ச்சி என்ற பெயரில் அவர்கள் மீது பல்வேறு பொறுப்புகள் சுமத்தப்பட்டுள்ளன.

தமிழகத்தில் 32 ஆட்சியர்கள் உள்ளனர். அவர்களைக் கண்காணிக்க, ஆலோசனை கூற மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் இல்லை. மக்களுக்கான நிர்வாகம் இல்லை. சிறந்த நிர்வாகத்துக்கு வழிகாட்டவும் யாரும் இல்லை. எனவே, நிர்வாக சீர்திருத்தம் செய்ய வேண்டியது அவசியம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தற்போது பணியில் உள்ள மூத்த அதிகாரி ஒருவர் இதுபற்றி கூறியபோது, ‘‘மத்திய, மாநில அரசுகளின் எந்த திட்டமாக இருந்தாலும், சம்பந்தப்பட்ட துறைகளின் உயர் அதிகாரிகள் கண்காணிப்பில்தான் செயல்படுகிறது. அத்திட்டங்களை தங்கள் பகுதியில் அமல்படுத்தும் இடத்தில் மாவட்ட ஆட்சியர்கள் இருக்கின்றனர். திட்டங்கள் குறித்து அவர்கள்தான் விழிப்புணர்வு ஏற்படுத்தி, கடைசி மக்கள் வரை கொண்டு சேர்க்க வேண்டும். தமிழகத்தைப் பொறுத்தவரை, திட்டங்களைச் செயல்படுத்த, மாவட்டத்துக்கு ஒருவர் அல்லது இரு சிறிய மாவட்டங்களுக்கு ஒருவர் என மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள், குறிப்பிட்ட கால இடைவெளியில் அந்தந்த மாவட்டங்களுக்குச் சென்று ஆய்வு செய்கின்றனர். பேரிடர் காலங்களில் கூடுதலாக அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றனர்’’ என்றார்.

மக்களை நோக்கிய திட்டம்

தொடர்ந்து மக்களை தங்கள் வசமே வைத்திருக்கும் வகையில்தான் அரசின் புதிய திட்டங்கள் பெரும்பாலும் உருவாக்கப்படுகின்றன. ஆனால், அத்திட்டங்களை வகுக்கும் இடத்தில், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் இடம்பெறுவதில்லை என்ற கருத்து உள்ளது. அதிகாரம் மிக்கவர்களால் வடிவமைக்கப்படும் திட்டங்களை எதிர்காலத்தில் செயல்படுத்து வது கஷ்டம் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால், விழிப்புணர்வு ஏற்படுத்தினால், எந்த திட்டத்தையும் செயல்படுத்த முடியும் என்கிறார் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி நரேஷ்குப்தா. அவர் மேலும் கூறியதாவது:

கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு மின்சாரம், கேஸ் இணைப்பு போன்ற மானியம் வழங்கும் திட்டங்களை மத்திய அரசே நேரடியாக செயல்படுத்தலாம். ஆட்சியர்களைக் கேட்க அவசியம் இல்லை. சில திட்டங்கள் ஒருசில மாவட்டங்களுக்கு மட்டுமே உகந்ததாக இருக்கும். மாநிலம் முழுவதும் அல்லது நாடு முழுவதும் அதை செயல்படுத்த முடியாது. அதுபோன்ற திட்டங்களில் மாவட்ட ஆட்சியர்களிடம் கருத்து கேட்கப்படுகிறது.

திட்டங்கள் மக்களிடம் சென்று சேர, துறைகளின் கீழ்நிலை அலுவலர்கள் முயற்சி எடுத்து, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதிகாரிகள், அலுவலர்கள் அதிக அளவில் திட்டங்களை விளம்பரப்படுத்த வேண்டும்.

முக்கிய திட்டங்கள் குறித்து ஆட்சியர் அறிந்திருப்பார். அதேநேரம், பொதுப்பணித் துறை பணிகள் குறித்து அவர் அறிந்திருக்க அவசியம் இல்லை. ஆனால், நில ஆர்ஜிதம் என்று வரும்போது வருவாய்த் துறையின் கீழ் அப்பணிகளை செய்து தரவேண்டியது அவசியம். சட்டம் ஒழுங்கு பிரச்சினை வந்தாலும் அவர் தான் சரிசெய்ய வேண்டி இருக்கும். எனவே, ஆட்சியரின் பணி மிகவும் முக்கியமானது.

இவ்வாறு அவர் கூறினார்.

என்னதான் ஆட்சியர் பணி அதிகாரம் மிக்கது என்றாலும், ஆட்சியாளர்கள் சொல்வதை மீறி அவர்களால் எதுவும் செய்துவிட முடிவதில்லை. இதுபற்றி ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் கூறும்போது, ‘‘எந்த மாநிலமாக இருந்தாலும், ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் முதல்வர், அமைச்சர்கள் சொல்வதைக் கேட்டுத்தான் ஆட்சியர்கள் செயல்பட வேண்டியுள்ளது. தமிழகத்தில், அந்தந்த மாவட்ட அமைச்சர்களுக்கு தனி செல்வாக்கு உண்டு. அரசின் திட்டங்கள் எல்லா மக்களையும் சென்றடைய வேண்டும் என்றால், அரசியல் தலையீடுகள் இருக்கக் கூடாது. பயனாளிகளைத் தேர்வு செய்வதில் ஆளுங்கட்சியினர் தலையிடாமல் இருந்தாலே, உண்மையான பயனாளிக்கு அரசின் திட்டங்கள் சென்று சேரும். தவிர, ஒரு திட்டம் உருவாக்கப்படும் நிலையில் அதுதொடர்பாக ஆய்வுகள் செய்வதுபோல, அத்திட்டம் நிறைவேற்றப்படும் நிலையில், பயனாளிகளுக்கு சென்றடைகிறதா என்பது வரை தொடர் ஆய்வு செய்ய வேண்டியதும் அவசியம்’’ என்றனர்.

அதிகாரப் போட்டி

திட்டங்கள் செயல்பாடு மட்டுமின்றி, மாவட்டங்களில் அதிகாரப் போட்டியையும் ஆட்சியர்கள் சமாளிக்க வேண்டியுள்ளது. மாவட்டத்தில் சட்டம் - ஒழுங்கையும் சேர்த்து கவனிக்க வேண்டியது மாவட்ட ஆட்சியர்தான். ஆனால், அதற்கான பொறுப்பில் இருக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள்(எஸ்.பி.) அதுபற்றிய தகவல்களை சரிவர பகிர்ந்துகொள்வது இல்லை என்ற கருத்தும் பரவலாக காணப்படுகிறது. ஐஏஎஸ் - ஐபிஎஸ் அதிகாரிகள் இருவரும் நேரடியாக நியமிக்கப்பட்டவர்கள் என்றால், ஓரளவு இணக்கமாக சென்றுவிடுகின்றனர். அந்தஸ்து பெற்ற ஐஏஎஸ் - நியமன ஐபிஎஸ் இடையே இந்த சுமுக உறவு இருப்பதில்லை என்ற கருத்தும் அதிகாரிகள் மத்தியில் காணப்படுகிறது. சமீபத்தில் நடந்த மாவட்ட ஆட்சியர் - காவல்துறையினர் மாநாட்டில் முதல்வர் இந்த விஷயத்தை நாசூக்காக சுட்டிக்காட்டி, இருவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

தி ஹிந்து தமிழ்

எழுதியவர் : (12-Jun-18, 7:29 pm)
பார்வை : 62

சிறந்த கட்டுரைகள்

மேலே