ஜூன் 12 இராஇளவரசு பிறந்தநாள்--------------இளவரசு எனும் தமிழியக்கம்

‘இளவலே! நம் தொண்டு தமிழகத்துக்கு உடனடியாகத் தேவை. அரசியல் துறையில் புரட்சி மேற்கொள்ளாவிட் டால், உண்மையாகவே தமிழகம் நெடுநாள் இருக்காது... தாங்கள் தங்கள் ஆராய்ச்சிப் பட்டத்தில் முதல் தரம் எய்த வேண்டும். நானும் நாட்டுக் கடமைகளில் முதல் தரம் எய்துவேன்..’

இந்தக் கடிதம் எழுதப்பட்டது, கல்லூரி மாணவர்கள் தமிழுணர்ச்சி யின் வசப்பட்டிருந்த 1965-ம் ஆண்டு. எழுதியவர் பின்னாளில் மு.தமிழ்க்குடிமகன் என்று பெயர் மாறிய சாத்தையா. கடிதம் எழுதப்பட்டது இரா.இளவரசு என்று பெயர் மாறிய பிச்சைக்கு. பெருஞ்சித்திரனாரின் அழைப்பை ஏற்று மு.தமிழ்க்குடிமகன், ம.இலெனின் தங்கப்பா, இரா.இளவரசு என பலரும் கல்லூரிப் பருவத்திலேயே தனித்தமிழ்ப் பணிக்குத் தங்களை அர்ப்பணித்துக்கொண்டார்கள். அவர்களில் தமிழ்க்குடிமகன், அரசியல் துறையைத் தேர்ந்தெடுத்துக்கொண்டார். ம.இலெ.தங்கப்பா கவிதை, மொழிபெயர்ப்பு, குழந்தை இலக்கியம் என்று முத்திரை பதித்தார். அவர்களின் நெருங்கிய நண்பராக இருந்த இரா.இளவரசு (1939 - 2015) தனது வாழ்நாள் முழுவதும் ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபட்டிருந்தார்.

கணிதவியல், பொருளியல், சட்டவியல், அரசியல் என்று பல துறைகளையும் படித்தவர் இளவரசு. அவற்றில் சிலவற்றில் பட்டம் பெற்றார், சில படிப்புகளைத் தொடராமலும் விட்டுவிட்டார். அவரது ஆர்வம் தமிழின்மீதே இருந்தது. எனினும், அவர் பெற்ற பல்துறை அறிவு பின்னாட்களில் அவர் மேற்கொண்ட தமிழியல் ஆய்வுகளின் நவீனத்துவப் பார்வைக்குக் காரணமானது. புதுக்கோட்டை, தஞ்சை, கரூர், சென்னை மாநிலக் கல்லூரிகளிலும் திருச்சி பாரதிதாசன் உயராய்வு மையத்திலும் பேராசிரியராகப் பணியாற்றியவர் இளவரசு. பொது வெளியில் தமிழை வளர்த்த அவர், தனது தனிப்பட்ட வாழ்க்கையில் சாதிமறுப்பு உள்ளிட்ட திராவிட இயக்கக் கொள்கைகளைக் கடைப் பிடித்தவர். தமிழ் படித்த வேலம்மாளை சாதிமறுப்பு மணம்புரிந்துகொண்ட இளவரசு, தனது மகன், மகள்களுக்கும் சாதிமறுப்பு மணமே செய்வித்தார்.

இரா.இளவரசுவின் வரலாற்றுச் சாதனை அவர் தொகுத்த ‘பாவேந்தம்’ பெருந்தொகுதி! 154 தலைப்புகளில் 7,854 பக்கங்களில் 25 தொகுதிகளில் பாரதிதாசனின் எழுத்துகள் அனைத்தையும் தொகுத்து வெளியிட்ட பதிப்பாசிரியர்களில் இளவரசுவும் ஒருவர். மேலும், பாரதிதாசனின் நூல்வடிவம் பெறாத 353 பாடல்களையும் அவர் தனித்தொகுப்பாக வெளியிட்டிருக்கிறார்.

அவர் பேராசிரியராகவும் ஆய்வாளராகவும் மட்டுமே இல்லை. பெருஞ்சித்திரனார் முன்னெடுத்த தனித்தமிழ் இயக்கத்தின் தொடர்ச்சியாக வாழ்ந்தார். 1980 முதல் 2010 வரை தமிழகம் முழுவதும் பல்கலைக்கழக ஆய்வரங்குகள், கல்லூரி விழாக்கள், தமிழ்ச்சங்கக் கூட்டங்கள் என்று தமிழுணர்வை விதைத்துவந்த பேச்சாளராகவும் இருந்தார். வைகறைவாணன், செந்தலை கவுதமன், தமிழகன், கு.திருமாறன் என்று இளவரசுவின் நட்புப் பட்டியல் மிக நீளமானது. அந்தப் பட்டியலில் இருப்பவர்களே இன்று தனித்தமிழ் இயக்கத்தை முன்னகர்த்திக்கொண்டிருக்கிறார்கள்.

செ.அருள்செல்வன்,

எழுதியவர் : (12-Jun-18, 7:54 pm)
பார்வை : 30

மேலே