கூட்டுக்குடும்பம்

நாம் இழந்துவரும் பண்பாடுகளில் மிக முக்கியமானது கூட்டுக்குடும்பமாகும்.

பலதரப்பட்ட உறவுகளோடு அவ்வப்போது ஏற்படும் பிணக்குகளை பிரச்சினைகளாக்காது அனைவரின் நலன் கருதி விட்டுக்கொடுத்துப் போகும் தன்மையை கூட்டுக்குடும்பங்களில் அன்று கண்டோம்.

பெரிய குடும்பமாக இருந்தாலும் குடும்ப வளர்ச்சிக்கும் மகிழ்ச்சிக்கும் எவ்வித பங்கமும் வந்திடாது பார்த்துக்கொண்டனர் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும்.

ஆனால் இன்றோ, திருமணத்திற்கு முன்னர் தனிக்குடித்தனம் பற்றி பேசி முடிவெடுத்து விடுகின்றனர் இன்றைய நவ நாகரிக இளம் தலைமுறையினர்.

தெரியாத ஒன்றினைப் பற்றி புரியாமல் பேசுவதில் ஆச்சரியமில்லைதான். இருப்பினும் அவர்களின் குடும்பத்தினர் கூட்டுக்குடும்பத்தின் ஏற்றமிகு சிறப்புக்களை சொல்லித்தராது போவதும் ஒரு முக்கிய காரணமாகிறது பலர் தனிக்குடித்தனம் போக.

நடைமுறையில் நன்மைகளே அதிகம் என பரவலாக ஒரு கருத்து நிலவிவந்தாலும் திருமணமான ஒரு சில மாதங்களிலேயே தனிக்குடித்தனம் போகும் முடிவுக்கு வந்துவிடுகின்றனர். அதுவே அவர்களின் இலக்காககிவிடுகிறது.

இதனால் ஏற்படும் பல பாதிப்புக்களுக்கு நடுவே ஒன்றே ஒன்றை மட்டும் சொல்வதானால், வயோதிகர்களை தனியே விட்டு தன் சுகம் மட்டுமே பெரிதென தனியே போய்விடுவோரைச் சொல்லலாம்.

அதன்படியே ஒரு முக்கிய நன்மை எனும்போது, மற்றவரின் தலையீடின்றி தங்களின் எண்ணம்போல் சுகமாய் வாழலாம் என்பதுமாகும்.

ஒரு குடும்பத்தை திறம்பட கட்டிக்காக்கும் நிர்வாகவியலை குடும்பத்தலைவிகள் அன்று பல்கலைக்கழகம் போகாமலே கற்றுத்தேர்ந்திருந்தனர். சிரமங்கள் இருந்திருந்தாலும் சிக்கல்களில் மாட்டியது அன்றில்லை.

இன்றைய நிலை வேறு. ஒரு சிலரே இருந்தாலும் வருவாய்க்கு மேல் கடனை சுமக்கும் பெண்களை நாம் இப்போது பார்க்கிறோம். கடன் அட்டைகள் அதிகம் இருக்கும் அளவிற்கு சிலருக்கு சேமிப்பு இல்லாத நிலை. ஆரோக்கியமான அறிவுரை சொல்லி அனைத்துச் செல்ல பெரியோர் இல்லாத சூழல், தடுக்க யாரும் இல்லை எனும் நினைப்பில் அடுத்தவர் மெச்சும்படியான ஆடம்பர வாழ்வு என தேவைக்கும் மேல் செலவீனங்கள் அதிகரித்து சில குடும்பங்களை குட்டிச் சுவராக்கிவிடுகின்றன.

பெண்களின் மத்தியில் கல்வி கற்றோர் அதிகரித்திருந்தாலும் அன்பு, பண்பு, பாசம், பரிவு, சாந்தம், அமைதி எனும் குணநலன்களை அவர்கள் அதிகம் பெரிது படுத்துவதாகத் தெரியவில்லை.

கல்வி என்பது அழியாச் செல்வம் என்கிறோம். பொருளீட்டுவதற்கு மட்டுமே கல்வியை ஒரு ஆயுதமாக பலரும் பார்க்கிறர்களே தவிர, அதற்கும் அப்பாற்பட்ட உண்மைச் செல்வத்தை பலரும் உணரத்தவறிவிடுகின்றனர். கல்வியை கற்றது போல் நடந்து கொள்வோர் இளம் தலைமுறையினரிடையே பெருகவேண்டும் என்பதே பலரும் ஆதங்கப் படும் ஒன்றாக இருக்கிறது இப்போது.




ராஜ்பாவ்

எழுதியவர் : (17-Jun-18, 5:11 pm)
பார்வை : 1892

மேலே