என்றுமுள்ள நதி

இன்று எவரோ இந்த காணொளிகளை எனக்கு அனுப்பி நீங்கள்தானா இது என்று கேட்டிருந்தார்கள். எட்டு ஆண்டுகளாகிவிட்டிருக்கின்றன. 2010ல் நாங்கள் பெருங்குழுவாக கோதாவரிக்குமேல் ஒரு படகுப்பயணம் செய்தோம். மூன்றுநாள் நீர்ப்பரப்பின்மீது. உண்பது அரட்டையடிப்பது தூங்குவது எல்லாமே படகில். அவ்வப்போது படகை நிறுத்திவிட்டு இறங்கி நீராடினோம். ஒருநாளில் ஏழுஎட்டு குளியல்.

விஷ்ணுபுரம் நண்பர்குழுமம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே உருவாகிவிட்டிருந்தது 2008 முதல் இந்தியப்பயணங்களும் மழைப்பயணங்களும் ஆரம்பமாகிவிட்டிருந்தன. இந்தப்பயணம் கொஞ்சம் தனித்துவமானது. இதில் கூடுதல் எண்ணிக்கையில் நண்பர்கள் கலந்துகொண்டார்கள். அவ்வகையில் பெரிய பயணம்.நண்பர் ராமச்சந்திர ஷர்மா ஏற்பாடு செய்திருந்தார்.

இன்று அந்த முகங்களைப்பார்க்கிறேன். பதினேழுபேரில் இருவர் விலகிச்சென்று தொடர்புகளை முற்றாக அறுத்துவிட்டிருக்கிறார்கள். அவ்வப்போது கசப்புகளையும் ஏளனங்களையும் கொட்டிக்கொண்டிருக்கிறார்கள். விலக்கத்திற்கு முழுமையான காரணம் அரசியல் மட்டுமே. இங்கிருந்து பிரிந்துசென்ற இரு தரப்புகளைச் சேர்ந்தவர்கள் அவர்கள். ஒரு தரப்பு தீவிர இந்துத்துவநோக்குக்குச் சென்றுவிட்டிருக்றது.இன்னொன்று தீவிர இந்து,இந்திய எதிர்ப்பாளர்கள் ,இரு எல்லைகள். இரண்டுவகை உச்சக்காழ்ப்புகள். அவர்களுக்கு வேறேதும் கண்ணுக்குத் தெரியவில்லை. அரசியல் நம் காலகட்டத்தின் நட்பு, உறவு அன்பு அனைத்தையும் தீர்மானிக்கிறது. அதிலும் சென்ற ஐந்தாண்டுகளில் அரசியல் இருபக்கங்களாகப் பிரிந்து வெறுப்பது என்று மாறிவிட்டிருக்கிறது. தன்னவர் எதிரிகள் என்று உலகையே பகுக்கிறது இவ்வுளநிலை.

பொதுவாகச் சாதி, மதம் ஆகியவற்றின் மீதான பற்றே தமிழ்நாட்டில் அரசியல். அதற்கப்பால் ‘தூய’ ’கொள்கைசார்ந்த’ அரசியல் கொண்டவர்கள் இங்கே அரிதினும் அரிது. அரசியல் என்பதோ வெறும் காழ்ப்புமிழ்தல், வசைபாடுதல்தான். அதற்கப்பால் சென்று நேர்நிலையாக ஏதேனும் செய்பவர்கள், எங்கேனும் செயல்படுபவர்கள் பல்லாயிரத்தில் ஒருவர். எதிர்நிலை எடுப்பதும் வசைபாடுவதும் ஒருவகையான துடிப்பை உருவாக்குகின்றன. அன்றாடவாழ்க்கையின் சலிப்பான ஒன்றுமே அற்ற நிலையின் வெறுமையை நிறைக்கின்றன. இவற்றைச் செய்பவர்களைக் கூர்ந்து நோக்கினால் பெரும்பாலும் அவர்கள் இவற்றைமட்டுமே செய்வதைக் காணலாம். அதற்கப்பால் ஏதும் செய்ய இயல்வதில்லை. போலியான ஒரு தீவிரநிலையை எதிர்மறை உளநிலைக்கு அளித்துக்கொள்ள அரசியல் ஒரு கருவி

நாம் சிறுகூண்டுகளில்தான் வளர்க்கப்படுகிறோம். தற்செயலாக, அல்லது இளமையின் மீறலின் ஒருபகுதியாக இலக்கியம் ஆன்மீகம் போன்ற ‘அரசியலற்ற’ பகுதிகளுக்கு வருபவர்களுக்கு அந்தச்சூழல் மூச்சுத்திணறத் தொடங்குகிறது. இது அனைவரும் பங்கெடுக்கும் ஒரு விரிந்த களம். எல்லா தரப்பும் பங்குகொள்ளும் ஓர் உரையாடற்களமாக அறிவுச்சூழல் இருக்கமுடியுமென்றே நான் நம்புகிறேன். ஆனால் எதிர்நிலை உளப்பாங்கு கொண்டவர்களுக்கு இங்கிருக்கும் நேர்நிலை உளநிலை சலிப்பூட்டுகிறது. வெறுப்பின், எதிர்நிலையின் பரபரப்புக்கு ஏங்குகிறார்கள். இங்குள்ள கொண்டாட்டங்கள் உப்புசப்பில்லாதவையாகத் தெரிகின்றன. நட்புரையாடல், இயற்கையின் தரிசனம், அறிவார்ந்த தேடல் எதுவும் ஒரு பொருட்டாகத் தெரிவதில்லை. இங்குள்ள பரந்துபட்ட சூழல் நிலைகுலையச் செய்கிறது. மாற்றுமதத்தவரை, சாதியரை இயல்பாக எதிர்கொள்ள அவர்களால் இயல்வதில்லை சொல்லிலும் விழியிலும் எப்போதும் கவனமாக இருப்பது கடினமாக இருக்கிறது. பலர் சூழலறியாமல் சிறுமையை வெளிப்படுத்தி அனைவருக்கும் சங்கடத்தை உருவாக்கியும் இருக்கிறார்கள் .ஆகவே பழகிய சிற்றறைகளுக்குள்ளேயே திரும்பிச் செல்கிறார்கள். அங்கேயே நிறைவாக இருக்கிறார்கள். அவர்களைத் தக்கவைக்க முடியாதென்பதே நான் கற்றுக்கொண்டது.

ஆனால் அதுவும் நன்றே. இன்று இப்படி ஒரு பயணம் ஒருங்கிணைக்கப்பட்டால் நேர்பாதிப்பங்கினர் புதியவர்களாக, இளைஞர்களாக இருப்பார்கள். சென்ற ஐந்தாண்டுக்குள் வாசிக்க வந்தவர்களாக, இலக்கியத்தில் புதியனநிகழ்த்தும் வேகம் கொண்டவர்களாக, அரசியலுக்கு அப்பால் இலக்கியம் என்னும் அறிவியக்கம்மேல் நம்பிக்கை கொண்டவர்களாக இருப்பார்கள் அன்று பதினேழுபேர் பெரிய குழு. இன்று ஐம்பதுபேருக்குமேல் செல்லாமல் காத்துக்கொள்ளவேண்டியிருக்கிறது. ஒவ்வொரு சந்திப்பும் இலக்கியத்தின் கொண்டாட்டமாக ஆகிவிட்டிருக்கிறது. இவர்கள் ஏற்கனவே சூழலில் இருந்த தரப்புகளில் இருந்து வந்தவர்கள் அல்ல. என் எழுத்துக்கள் வழியாக மட்டுமே என்னை அறிந்தவர்கள். இலக்கியவாதியாக மட்டுமே அணுகுபவர்கள்.

உண்மையில் இதைத்தானே ஆசைப்பட்டோம்? இவர்கள்தானே நாம் திரட்ட முற்பட்டவர்கள்? மனிதர்கள் வருவார்கள் மறைவார்கள். கண்ணிமைக்கும்பொழுதுக்குள் பத்தாண்டு கடந்துவிட்டிருக்கிறது. இன்னொரு பத்தாண்டு இன்னும் ஒரு கைநொடிப்பில் நிகழ்ந்து மறையும். என்றுமிருப்பது நாம் எண்ணியதும் இயற்றியதும் மட்டுமே. நம்முடன் வருவது இனியதருணங்களின் நினைவுகள் மட்டுமே.

அன்றுவந்தவர்களில் மற்ற அனைவரும் அப்படியே இன்றும் நீடிக்கிறார்கள். எல்லாருக்குமே கொஞ்சம் வயதாகிவிட்டிருப்பதை தவிர்த்தால் நினைவுகள் உவகையளிப்பவையே. அவர்களுடனான நட்பு இன்று குடும்ப உறவுக்கும் அப்பால் செல்லுமளவு அணுக்கமானதாக ஆகிவிட்டிருக்கிறது.ஆயினும் எப்போதும் நண்பர்களின் இழப்பு தனிமையை அளிக்கிறது — அவர்கள் ஓரிருவரே ஆயினும். குறிப்பாக பழைய படங்களில்.அவர்களைப் பார்க்கையில்.

ஜெ

எழுதியவர் : (18-Jun-18, 4:14 am)
பார்வை : 28

மேலே