நடிகையர் திலகம்

ஒளிப்பதிவாளர் உயர் நாற்காலியில் அமர்ந்தவாறு, ஒளிபடப்பிடிப்புக் கருவியின் பின்னால் தயாராகிக் கொண்டிருக்கிறார். இயக்குநர் இறுகிய முகத்துடன் நம்பிக்கையே இல்லாமல் “ஸ்டார்ட்…ரெடி…ஆக்சன்” என்றவுடன் திரையில் காண்பிக்கப்படும் நடிகை ஒரு வட்டமான மஞ்சத்தில் அமர்ந்தவாரே அதிலிருக்கும் தலையணை நோக்கி பக்கவாட்டில் சரிகிறார். மிக உயர்ந்த மேற்கூரையில் இருந்து தொங்கும் திரைச்சீலை அந்த வட்ட மஞ்சத்தைத் தழுவி, காற்றிலசைந்து அந்த நடிகையையும் தழுவத் துடிக்கிறது. அத்துடிப்பு, தன்னிடமிருந்து பிரிந்து சென்ற காதலனையோ கணவனையோ நினைவுபடுத்த, அதுவரை இறுகியிருந்த நடிகையின் முகம் நெகிழத் தொடங்குகிறது. வெளியேறும் மூச்சுக் காற்றால் வயிறு உள்வாங்க, முலைக்குவைகள் கீழ்சரிந்து, அலையில் சிக்கிக் கொண்ட சிறு படகாய் தவிக்கும் அந்த கீற்றுத் தொப்புளை மீட்க முனைகின்றன. தனக்குள் நிகழும் இப்போராட்டத்தை தாங்கமுடியாமல், கழுத்து புடைக்க, உதடுகள் துடிக்க, கதுப்புக் கன்னங்கள் அத்துடிப்போடு சேர்ந்து கொள்ள அதுவரை இமையால் கட்டப்பட்டிருந்த அணையை இடது விழியோரம் கரைத்து கண்கள் பனிக்க, இயக்குநர் கேட்டு கொண்டதுபோல் அந்த வட்ட மஞ்சத்தின் உருளைத் தலையணையில் ஓரிரு கண்ணீர் துளிகள் மட்டுமே சிந்துகிறாள் அந்த நவரச நாயகி.

கிளிசரின் இல்லாததால் இந்த காட்சியை ரத்து செய்ய நினைத்த இயக்குநர் மெய்மறந்து நிற்கிறார். பிற்காலத்தில் நடிகையர் திலகம் என்றழைக்கப்படப் போகும் அந்த நடிகையைத் தவிர அங்கிருந்த ஒருவர் கூட “கட்…” சொல்லவேண்டும் என்பதை உணர்ந்திருக்கவில்லை. இப்படித்தான்

‘அம்மாடி’ என்று ஜெமினி கணேசனால் செல்லமாக அழைக்கப்பட்ட சாவித்ரியின் திரையுலக வாழ்க்கை துவங்கியுள்ளது. இதை மிக நேர்த்தியான காட்சி அமைப்புடன் சித்தரித்திருக்கிறார் ‘நடிகையர் திலகம்’ படத்தின் இயக்குனர். இங்கு தொடங்கும் இந்த நேர்த்தி படம் முழதும் நீடித்திருக்கிறது. அதிலும் காதல் மன்னன் ஜெமினி கணேசன், சாவித்ரியிடம் மிக நயமாக நான் ஏற்கனவே கல்யாணம் ஆனவன் என்பதைச் சொல்லி தன் காதலை ஏற்றுக் கொள்ள மன்றாடும் அந்தக் காட்சி,ஆர்ப்பரிக்கும் கடலலைகளுக்கு நடுவே ஆர்ப்பாட்டம் ஏதுமில்லாமல் படமாக்கப்பட்டிருக்கிறது. இப்படி படம் நெடுகிலும் இயக்குநரின் காட்சியமைப்பு இரசனை நிரம்பி வழிகிறது.

நேரில் கண்ட 80களின் சென்னையையும், பழைய படங்களில் பார்த்த 40களின் சென்னையையும் மிக தத்ரூபமாக காட்சிப்படுத்தியிருக்கிறார். அதிலும் அந்த வண்ணங்களற்ற கருப்பு வெள்ளைக் காட்சிகள் உண்மைக்கு நெருக்கமாக இருப்பதை உணரமுடிகிறது. அதன் மேல் அடிக்கப்படும் சிவப்பு காவி பச்சை என்ற அனைத்தும் எவ்வளவு செயற்கையானவை என்பதையும் உணரமுடிகிறது.

ஜெமினி சாவித்ரியாக நடித்திருக்கும் துல்கருக்கும் கீர்த்திக்கும் இது ஒரு வாழ்நாள் வாய்ப்பு. தங்கள் மேல் ஏற்றப்பட்டிருக்கும் கணத்தை மிக சிரத்தையோடு சுமந்திருக்கிறார்கள். தங்கள் நடிப்பை அவ்வளவு மெருகேற்றிக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் துல்கரின் அந்த ‘அம்மாடி’ என்ற சொல்லாடல் அரங்கத்திலிருந்த அத்தனை சாவித்ரிகளையும் உருக வைத்திருக்கும். கீர்த்தி இப்படியெல்லாம் நடிப்பாரா என்று ஆச்சரியப்படுத்துகிறார். அவ்வப்போது, ஏனோ தெரியவில்லை, நடிகை ஊர்வசியின் உடல்மொழியை ஞாபகப்படுத்துகிறது இவரின் நடிப்பு. ஊர்வசியும் சாவித்ரியின் நடிப்பிலிருந்து தானே தன் உடல்மொழியை பெற்றிருக்க முடியும்.

சாவித்திரி அவர்களின் வாழ்க்கையில் நடந்த முக்கியமான விஷயங்களை மிக நுட்பமாக சித்தரித்த இயக்குநர் அதைத் தொகுக்கும் முயற்சியில் கொஞ்சம் தொய்விழந்திருக்கிறார். படம் முழுதும் சாவித்ரியை ஒரு குழந்தை மனம் கொண்டவளாக மட்டுமே சித்தரித்திருப்பது கொஞ்சம் மிகைதான். ஆனால் அவர் கொடையுள்ளம் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதுதான். சாவித்ரியின் அழிவிற்கு ஜெமினியின் கள்ள (காதல்) தொடர்புகள் மட்டுமே காரணமாக காட்டியிருப்பது கொஞ்சம் சிறுபிள்ளைத்தனமாகத்தான் தெரிகிறது. இது ஒருவேளை உண்மையாகவும் இருக்கலாம். ஆனால், சாவித்திரியினுடைய இந்த பலவீனங்கள் அழுத்தமாகப் பதியப்படவில்லை. இதெல்லாம் ஒரு சுயசரிதைப் படத்தில் ஏற்படும் இயல்பான குறைகள் என்று தான் எண்ணத் தோன்றுகிறது. இதையெல்லாம் தவிர்த்து விட்டால், இப்படத்தில் உழைத்திருக்கும் அனைத்து கலைஞர்களும் நம்மை சாவித்ரியின் வாழ்க்கைக்கு மிகவருகில் அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.



முத்துச்சிதறல்

எழுதியவர் : (21-Jun-18, 6:16 pm)
பார்வை : 31

மேலே