ரயில்களில் விரைவில் வருகிறது பயத்தை விரட்டும் பட்டன் அழுத்தினால் ஓடி வரும் உதவி

கோவை:
பயணத்தின்போது பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் பட்சத்தில், 'திகில்' ஒலி மூலம் பாதுகாப்பு அதிகாரிகளை உஷார்படுத்தும், 'பேனிக் பட்டன்'களை ரயில் பெட்டிகளில் பொருத்த, ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

ரயில்வே துறையை மேம்படுத்தும் விதமாக, இணையதள 'டிஜிட்டல்' மயமாக்குதல், ரொக்கமில்லா பரிவர்த்தனையை ஊக்குவித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வருவாயை மட்டுமே இலக்காக கொள்ளாமல், பயணிகள் பாதுகாப்புக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.

இருப்பினும், ரயிலில் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு இன்றும் கேள்விக்குறியாகவே உள்ளது. இரவு நேரங்களில் பயணிக்கும் பெண்கள், குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாவது, தொடர்கதையாக உள்ளது.

தற்சமயம் புதிய மொபைல்போன் செயலி, உதவி அழைப்பு எண்கள், எஸ்.எம்.எஸ்., போன்றவற்றின் வாயிலாக மட்டுமே, பெண்கள் பாதுகாப்பு தொடர்பான புகார்களை அளித்து வருகின்றனர். இந்நிலையில், குற்ற சம்பவங்களை உடனடியாக தடுக்கும் விதத்தில், திகில் ஒலி எழுப்பும், 'பேனிக் பட்டன்'கள், ரயில் பெட்டிகளில் விரைவில் பொருத்தப்படவுள்ளன.சேலம் கோட்ட ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:பயணிகள் பாதுகாப்பில் தொழில்நுட்பம் சார்ந்த உத்திகளை, ரயில்வே நிர்வாகம் புகுத்தி வருகிறது. தற்சமயம், 'அபாய சங்கிலி', எஸ்.எம்.எஸ்., மொபைல்போன் செயலி மட்டுமே, பயணிகளின் பாதுகாப்பு உபகரணங்களாக உள்ளன.

விரைவில், தொழில்நுட்பம் சார்ந்த 'பேனிக் பட்டன்'கள் பொருத்தப்பட உள்ளன. பாதுகாப்பு பிரச்னை வரும்போது, பட்டனை அழுத்தினால், ரயிலில் இருக்கும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு, உடனடியாக திகில் ஒலி மூலம், தகவல் தெரிவிக்கப்பட்டு, குற்ற சம்பவங்கள் உடனடியாக தடுக்கப்படும்.வடகிழக்கு ரயில்வேயில், இதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே துவங்கியுள்ள நிலையில், தெற்கு ரயில்வேயிலும் விரைவில் இப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.இவ்வாறு, அவர் கூறினார்.

இரவில் மகளிர் அதிகாரிகள்!
பெண்கள் பெட்டிகளுக்கு, தனி வண்ணம் அடிப்பதுடன், இரவு நேரங்களில் மகளிர் ஆர்.பி.எப்., அதிகாரிகளை ரயில்களில் பணியமர்த்தவும், பரிசீலிக்கப்பட்டு வருகிறது. ஆர்.பி.எப்., அதிகாரிகள், 'பாடி கேமரா' மூலம் கண்காணித்தல், சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்துதல் போன்ற நடவடிக்கைகளை அடுத்து, பயணிகளின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் வகையில், 'பேனிக் பட்டன்'கள் இருக்கும் என்கின்றனர் ரயில்வே அதிகாரிகள்.


தினமலர் செய்தி தொகுப்பு

எழுதியவர் : (22-Jun-18, 7:40 pm)
பார்வை : 36

சிறந்த கட்டுரைகள்

மேலே