அடைக்கலம் தாராயோ

========================
காதல் வாங்கும் பையாய் உனது
இதயத்தை கொண்டு வாராது போனால்
கண்களின் சந்தையில் குவிந்த எனது
கனவுகளை எப்படி விற்பனை செய்வேன்.
***
கண்களை நீயே வைத்துக் கொண்டு
இமைகளாக இருக்கும் வரம் கொடு
கனவுகளில் என்னை என்ன செய்கிறாய்
என்று கண்டுப் பிடித்துக் கொள்கிறேன்
***
தோழிகள் இல்லாத நாட்களில் கையோடு
கூட்டிக் கொண்டுதான் வருகிறாய் வெட்கத்தை.
உன்னோடு இருப்பது வெட்கமென்று
வெட்கப்படக் கூடும் அந்த வெட்கந்தான்
***
வார்த்தைகள் முழுவதும் விழுங்கி ஏப்பமிடும்
மலைப்பாம்பு இனமுந்தன் இதழ்கள் அல்லவா
மௌனத்தை உயிர்ப்பிக்கப் புன்னகை போதும்
கேளாதக் கேள்விக்குப் பதிலைச் சொல்லவா
**
புத்தகப் பக்கங்கள் விரிவது போலே
விரிந்து மூடுமுன் இமைகள் நான்கும்
காதலைப் படித்து எழுதும் வாலிப
சோதனை பருவச் சுமையால் ஏங்கும்
***
ஆடை அலங்காரங்களுடன் சென்றாலும் நீ
வெளியே விட்டுத்தான் செல்கிறாய் வெட்கத்தை
ஆசை அணையுடைத்து நின்றாலும் நான்
உள்ளே பூட்டித்தான் வைக்கிறேன் துக்கத்தை
**
நெருப்புக்கு அடியில் நீரைப் புதைத்த
நீயோ அழகிய தியானமாய் சமைந்து..
ஆவியான என்னை அடையாளம் கண்டு
அடைக்கலம் தாராயோ மயானமாய் அமைந்து
****
**மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன்நடராஜ் (23-Jun-18, 2:30 am)
பார்வை : 155

மேலே