நிலவு மனிதன் - 7 மூன்றாம் படையெடுப்பு

நிலவு மனிதன்
7
மூன்றாம் படையெடுப்பு
மாலைப் பொழுது. வெயிலி நகரம். சிலாவின் திட்டப்படி புது அரண்மனை கட்டிட வேலைகள் மும்முரமாக நடந்து கொண்டிருந்தன. அங்கிருந்து சற்று தொலைவில் இருந்த ஒரு இடத்தில் சிலா அமர்ந்துக் கொண்டு மேல்நோக்கி அந்த சிறான் பள்ளதாக்கை வியப்போடு பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவளது மடியில் அவளது காதலன் மானன் வீற்றிருந்தான்.

“என்ன பார்க்கிறாய் சிலா?”

“நாம் இருக்கும் இடத்தில் இருந்து பார்த்தால் சிறானின் அழகு என்னை கவர்கிறது. அதோ அந்த விளிம்பை சற்று பாருங்கள். இந்த பள்ளத்தாக்கின் விளிம்பில் ஒரு எரிகல் விழுந்து ஏற்படுத்திய சிறு துளையும் அதன் மூலம் ஒரு சூரிய ஒளிக்கதிர் நேராக வந்து இந்த நகரத்தில் விழுவதும் மிக அற்புதமாய் உள்ளது. மேலும் இது போன்ற ஒரு அமைப்பு இந்த கோனியாவில் வேறு எந்த நகரத்திலும் கிடையாது!”

“ஆனால், உன் மடியில் இருந்து கொண்டு பார்த்தால், எனக்கு எதுவுமே தெரியவில்லை சிலா!” என்று குறும்பாக கூறினான் மானன்.

சிலா அதற்கு அவன் கன்னங்களை மென்மையாக கிள்ளினாள். பின்பு இருவரும் சிறிது நேரம் உரையாடிக்கொண்டிருந்தனர். அப்பொழுது மானன் அவளிடம்
சின்டா யுத்தத்தை பற்றி கேட்டான். அவளும் ஆர்வமாக கூற ஆரம்பித்தாள்.

பூமியில் வருடம் கிபி 1799. செவ்வாய்க்கும் வியாழனுக்கும் இடையே பல்லாயிரம் கோடி விண்கற்கள் நீள் வட்டமாக சூரியனை சுற்றி வரும் ஆஸ்டிராய்டு பெல்ட் (Asteroid belt) என்று அழைக்கப்படும் இடத்தில் முதல் சின்டா யுத்தத்தின் மூன்றாம் மற்றும் இறுதி படையெடுப்பு நடந்தது.

“பட்லோ..., நிடோ..., நிலாங்கி... நோசு கச்பி!!” (அவர்கள் வந்து விட்டார்கள். ஜாக்கிரதை நிலாங்கிகளே) என நுராப் கூறிக்கொண்டே அந்த மின்சாரம் வந்த திசை நோக்கி திரும்பினார்.
ரிமுக்களின் சக்தி எல்லையற்றதாக தோன்றியது. அவைகள் வீசும் மின்ஆற்றல் சக்தியின் ஒளியால் அந்த இருண்ட விண்வெளியில் பல இடங்களில் வெளிச்சம் பரவியது. முன்பை விட அவைகளின் கோபமும் வெறித்தனமும் அதிகரித்திருந்தது. பறந்து வேகமாக முன்னேறிக்கொண்டே தாக்கின.
நிலாங்கிகள் நுராப்பின் உத்தரவுப்படி, அவர்கள் மின் தாக்குதலில் சிக்காமல் அங்கும் இங்குமாக பறந்து அந்த மிதக்கும் பாறைகளில் சென்று மறைந்தனர். இவர்கள் ஏன் பதில் தாக்குதல் செய்யாமல் ஓடுகின்றனர் என்று அவைகள் யோசிக்கவில்லை. இன்று இவர்களை அழித்தே ஆகவேண்டும் என கோபத்தோடு தங்கள் கண்களில் படுகின்ற அனைத்தையும் தாக்கின.

ஐந்தாறு ரிமுக்கள் ஒன்றாக கைகோர்த்து ஒரு வட்டம் போல் அமைத்து தங்கள் மின் ஆற்றலை ஒன்றாகத் திரட்டி பெரிய அளவில் மின்சாரத்தை உருவாக்கி தாக்கினர். எதிலும் அவர்கள் சிக்கவில்லை.

சிறிது நேரம் கழித்து தான் நிலாங்கிகளின் திட்டம் அவைகளுக்கு புரிந்தது. ஒரு கட்டத்தில் அவைகளை 360° கோணமும் நிலாங்கிகள் சூழ்ந்து கொண்டனர். அவர்கள் அந்த இடத்தைவிட்டு வெளியே வரமுடியாத அளவிற்கு தங்கள் கைகளில் இருந்த கோல்களால் மிக அதிக சத்தத்துடன் ஒலி அலைகளை எழுப்பி அவர்களை ஒரு வட்டத்திற்குள் ஒடுக்கினர். ரிமுக்கள் ஒன்றோடு ஒன்று நெருக்கிக்கொண்டு வெளியே வரமுடியாத அளவிற்கு கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டனர். இதுதான் தக்க சமயம் என்று எண்ணி நுராப் தனது விண்கலத்தை இயக்கி அதை ஒரு மிகப்பெரிய சாட்டிலைட் ரிசீவர் போல அமைத்து தாக்கினார். அதிலிருந்து நேராக சென்ற ஒளிக்கற்றை ரிமுக்கள் மீது விழுந்து அவர்களின் மொத்த மின் ஆற்றலும் உறியப்பட்டது.

இதை சற்றும் எதிர்பார்க்காத ரிமுக்கள் என்ன செய்வதுதென தெரியாமல் விழி பிதிங்கினர். சில மணி நேரங்களில் அவர்களின் மொத்த மின் ஆற்றலும் எடுக்கப்பட்டு பதில் தாக்குதல் செய்வதற்குக்கூட சக்தியில்லாமல் அடங்கிப் போனார்கள்.

நுராப் இன்னும் சில நிலாங்கிகளுக்கு உத்தரவு கொடுக்க, அவர்கள் ஏற்கனவே போட்ட திட்டத்தை செயல்படுத்த தொடங்கினர். அதன்படி அருகில் மிதந்து கொண்டிருந்த பல்லாயிரக் கணக்கான பாறைகளை அவர்களை நோக்கி வேகமாக தள்ளினர். ஒரே சமயத்தில் பல கோணங்களில் அவர்கள் மீது வந்து மோதிய பாறையால் ரிமுக்கள் உயிரோடு அடைக்கப்பட்டார்கள்.

இந்த தாக்குதலை எதிர்பார்க்காத வருக்கோ சற்று திகைத்துப்போனார். நுராப் இவர்களை எதிர்க்க ஏன் இந்த இடத்தை தேர்ந்தெடுத்தார் என்பது இப்பொழுதுதான் அவருக்கு புரிந்தது. இப்பொழுது ரிமுக்கள் சற்றும் வெளியே வர முடியாத அளவிற்கு அவர்கள் அந்த மிதக்கும் விண்கற்களால் உயிரோடு அடைக்கப்பட்டு சிறைப்படுத்தப்பட்டனர். மின்சார ஆற்றல் இல்லாமல் ரிமுக்களால் எதுவும் செய்ய முடியவில்லை.

“இன்னும் பாறைகளை கொண்டு அடையுங்கள்.” என்று நுராப் கட்டளையிட்டவுடன் மேற்கொண்டு பல விண்கற்களை கொண்டு எட்டு கோணத்திலும் ரிமுக்களை மேலும் அடைத்தனர். உயிரோடும், கடுங் கோபத்தோடும் அந்த ரிமுக்கள் நிலவு மனிதர்களால் அந்த பாறைகளுக்குள் காற்று கூட புக முடியாத அளவிற்கு உயிரோடு அடைக்கப்பட்டனர்.

இப்பொழுது அவர்கள் அடைக்கப்பட்டு இருந்த பாறைகளை வருக்கோ தூரத்தில் இருந்து பார்க்கும் பொழுது ஒரு சிறு கோள வடிவில் தோற்றமளித்தது. நிலாங்கி வீரர்கள் வெற்றி பெற்ற மகிழ்வில் ஆரவாரத்துடன் முழங்கி இந்நிகழ்வை கொண்டாடினர். பின்பு அனைவரும் தங்களது விண்கலத்தை அடைந்து நிலவை நோக்கி பயணிக்க ஆயத்தமானார்கள்.

வருக்கோ ஒரு விண்கலத்தை இயக்க அருகில் அமர்ந்திருந்த நுராப் அவரிடம் உரையாடினார்.

“சேனாதிபதி அவர்களே, உங்களிடம் இந்த திட்டத்தை முன்பே கூறாததற்கு மன்னிக்கவும்.”

“இதில் தவறு ஏதும் இல்லை தளபதி. நீங்கள் செய்யும் எந்த ஒரு காரியத்திற்குள்ளும் பல உள் அர்த்தங்கள் இருக்கும் என்பதை நான் நன்கு அறிவேன். இவர்களை அழிக்க முடியாது என்று தெரிந்தவுடன் இந்த இடத்தில் உள்ள பாறைகளால் சிறை வைக்கலாம் என்ற உங்கள் சிந்தனை என்னை வியக்க வைத்துவிட்டது. இருப்பினும் ஒரு சந்தேகம்.”

“கேளுங்கள், எதுவாக இருப்பினும் விளக்குகிறேன்.”

“எதிர்காலத்தில் இவர்கள் இந்த பாறைகளை உடைத்துக்கொண்டு வரமாட்டார்கள் என்று என்ன நிச்சயம்?”

“என்ன சேனாதிபதி, அவர்கள் தாக்குவதற்கும் உயிர் சக்தியை உறியவும் அவர்களிடம் உள்ள ஒரே ஒரு கருவி அந்த மின் ஆற்றல்தான். அந்த மொத்த மின் ஆற்றலையும் நாம் தான் உறிஞ்சி எடுத்து விட்டோமே. மேலும் இந்த பிரபஞ்ச ஈர்ப்பு விதி உங்களுக்கு நினைவில்லயா? அதை வைத்துதானே அவர்களை சிறை வைத்துள்ளேன். ”

“ஈர்ப்பு விதி பற்றி தெரியும். இந்த அண்டத்தில் உள்ள எல்லா கோள்களும் ஈர்ப்பு விதியால்தான் ஒன்றை ஒன்று சுற்றி வருகின்றன. ஆனால் அது எப்படி இவர்களை சிறை பிடிக்க உதவும் என்று நீங்கள் நினைக்கிறிர்கள்?”

நுராப் புன்சிரிப்போடு தொடங்கினார். “நீங்கள் கூறியது சரிதான் வருக்கோ. அதே போல் ஒரு பொருள் அல்லது கோளின் ஈர்ப்பு சக்தி என்பது அதன் எடையை பொறுத்தே அமையும் என்பதும் தாங்கள் அறிந்த ஒன்றே.”

“ஆமாம் நுராப். அதனால்தான் எடை அதிகம் உள்ள சூரியனை சுற்றியே இந்த சூரியக் குடுப்பதிலுள்ள அனைத்து கோள்களும் அதன் ஈர்ப்பு சக்திக்கு உட்பட்டு அதை சுற்றி
வருகின்றன.”

“அருமை வருக்கோ, அதைதான் நான் செய்துள்ளேன். பல லட்சக்கணக்கான பாறைகளை வைத்து அவர்களை அடைத்தது அந்த சமாதியின் எடையை கூட்டத்தான்.”

“இன்னும் விளங்கவில்லையென்றால் சற்று திரும்பி பாருங்கள்.”

வருக்கோ திருப்பி அந்த கொடூரர்கள் அடைக்கப்பட்டிருந்த பாறை கோளத்தை பார்த்தார். மறுபடியும் அவர் எதிர்பார்க்காமல் வியப்படைந்தார். அவர் கண்களை அவரால் நம்ப முடியவில்லை. பல பாறைகள் சேர்ந்து கோள வடிவில் இருந்த அந்த சமாதியின் மீது ஆஸ்டிராய்டு பெல்டில் மிதந்து கொண்டிருந்த விண்கற்கள் கொஞ்சம் கொஞ்சமாக தானாக வந்து ஒட்டிக் கொண்டிருந்தன.

“இந்த பிரபஞ்சத்திலேயே மிகப் பெரிய சாணக்கியன் நீதான் நுராப். அந்த பாறையின் மீது செயற்கையாக ஒரு ஈர்ப்பு சக்தியை உருவாக்கி ஒரு கிரகத்தையே படைத்துவிட்டாயே!”

“எல்லாம் நமது பூமியை காக்கத்தான் சேனாதிபதி.”

“ பின்பு சில மணி நேரங்களில் பல விண்கற்களை தானாக அக்கோள் ஈர்த்து இறுதியாக ஒரு 900 கி.மீ விட்டத்தில் ஒரு குள்ள கிரகமாக உருவானது. அதற்கு நுராப் ‘சின்டா கிரகம்’ என பெயரிட்டார்.” என்று தனது தந்தையின் பெருமையை கூறி முடித்தாள் சிலா.

“இதனால்தான் இந்த யுத்தத்திற்கு சின்டா யுத்தம் என்ற பெயர் வந்ததா சிலா?”

“ஆமாம். நிலவு புராணத்தின் படி தளபதி வருக்கோதான் ‘சின்டா யுத்தம்’ என பெயர் வைத்ததாக கூறப்படுகிறது. அதன்பின்பு சில வருடங்கள் கழித்து இந்த பூமிவாசிகள் இதை தாங்கள் கண்டுபிடித்த முதல் விண்வெளிக் கல், குட்டி கிரகம், குள்ள கிரகம் என அவர்களுக்குள்ளே பெருமையடைந்துக்கொண்டு, அந்த சமாதி கிரகத்திற்கு ‘செரஸ்’ என்று பெயர் வைத்துக்கொண்டனர்.” என்றாள்.

இருவரும் பேசிக்கொண்டே அவர்கள் வாழபோகும் அந்த அரண்மனையின் கட்டுமானத்தை ரசித்துக்கொண்டிருந்தனர். அப்பொழுது சிலாவின் கைக்கருவி ஒலி எழுப்பியது. சிலா உடனே அக்கருவியில் வந்த தகவலை படித்தாள். “ரகசிய செய்தி: உடனே மிலாகா நகர அரண்மனையில் நடைபெரும் அவசர கூட்டத்திற்கு வரவும். – டெஹரி”. அந்த தகவலை பார்த்ததும் கன நொடி கூட தாமதிக்காமல், உடனே மானனிடம் இருந்து விடைபெற்று தனது மிலாகா நகரத்தை நோக்கி பயணிக்கலானாள்.

-தொடரும்.

எழுதியவர் : அகரன் (23-Jun-18, 6:39 am)
சேர்த்தது : அகரன்
பார்வை : 143

மேலே