வீடு வரை உறவு,​​ வீதி வரை மனைவி,​​ காடு வரை பிள்ளை​ கடைசி வரை​ மறக்க முடியாத கண்ணதாசன்

சென்னை:

வீடு வரை உறவு,​​ வீதி வரை மனைவி,​​ காடு வரை பிள்ளை கடைசி வரை​ யாரோ என மறக்க முடியாத தத்துவத்தைக் கூறியவர் கண்ணதாசன் என்று மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் புகழாரம் சூட்டியுள்ளார்.

2010ம் ஆண்டு காரைக்குடி கவியரசு கண்ணதாசன் மணி மண்டபத்தில் நடைபெற்ற 21வது ஆண்டு கண்ணதாசன் விழாவில் பங்கேற்று,​​ கவிஞர்கள் கண்ணதாசன்,​​ பாரதியார் உருவப்படங்களைத் திறந்து வைத்து ப.சிதம்பரம் பேசினார். அப்போது அவர் கண்ணதாசன் குறித்த நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.

காரைக்குடி நிகழ்ச்சியில் ப.சிதம்பரம் பேசிய பேச்சிலிருந்து சில பகுதிகள்

கண்ணதாசனின் சரித்திரம்

55 வயதில் சரித்திரப் புகழை நாட்டி,​​ நம்மிடமிருந்து மறைந்தவர் கவிஞர் கண்ணதாசன்.​ எல்லோர் நாவிலும் பாடல்களைத் தவழச் செய்த சமகாலத்தில் வாழ்ந்த கவிஞர் அவர்.​ இலக்கியம்,​​ உரைநடை,​​ கவிதை,​​ நாடகம் என எதுவாக இருந்தாலும்,​​ காலத்துக்கு ஏற்ப அது அமைந்தால்தான் நிலைத்த இலக்கியமாக இருக்கும்.​ உதாரணமாக 60,​ 70 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நாடக அமைப்பை தற்போது அப்படியே அரங்கேற்றினால்,​​ அதனைப் பார்க்க யாரும் விரும்ப மாட்டார்கள்.​ காலத்திற்கேற்ப இலக்கியத்தின் முகம் மாற வேண்டும்.​

பேச்சைக் கூட கவிதையாக்கியவர்

அப்படி முகம் மாறும்போது இலக்கியத் தரம் இல்லை என்று யாரும் உறுதி செய்ய முடியாது.​ கவிதையைப் பொருத்தவரை பாரதியார்,​​ பாரதிதாசன் போன்றோர் தங்கள் காலத்துக்கேற்ப எழுத்து முறையை மாற்றிக் கொண்டதால்,​​ அவை நிலைத்து நிற்கின்றன.​ பாரதிதாசன் பாடல்கள் தொடர்ந்து ஒலிக்கின்றன.​ அவர்கள் காலத்துக்குப் பிறகு வந்த படித்தவர் மட்டுமல்ல,​​ படிக்காதவர்கள் மற்றும் கேள்வி ஞானத்தையே நம்பியுள்ளவர்களுக்கும் புரியும் வகையில் தமிழ்க் கவிதைக்குப் புதிய வடிவம் தந்தவர் கண்ணதாசன்.​ பேச்சுவார்த்தையைக் கூட கவிதை வடிவாக்கினார்.

12 வார்த்தைகளில் வாழ்க்கை

பட்டினத்தார் பாடல் புரியாதவர்களுக்கும் புரியும் வகையில்,​​ 12 வார்த்தைகளைக் கொண்டு வீடு வரை உறவு,​​ வீதி வரை மனைவி,​​ காடு வரை பிள்ளை,​​ கடைசி வரை யாரோ..​ என்ற சொற்கள் சாரத்தால் கவிதை தந்தவர் கண்ணதாசன். தமிழ்ப் பாடல்கள்,​​ தமிழ்க் கவிதை,​​ சங்ககாலக் கவிதைகள்,​​ அதற்கும் முந்தைய கவிதைகள் போன்றவற்றில் உள்ள உயர் கருத்துகளை தமிழ் இலக்கியச் சுவை குறையாமல் பிழிந்து தந்து சென்றவர் கவிஞர் கண்ணதாசன்.​

எழுத்துக்கள்தான் சாதனை

கவிஞனுக்குச் சொந்த வாழ்க்கையில் குறைகள்,​​ நிறைகள் இருக்கலாம்.​ அது காலப்போக்கில் மறைந்துவிடும்.​ நிலைத்து நிற்பது அவருடைய சாதனை எழுத்துகள்தான். கண்ணதாசன் எழுத வேண்டும்,​​ டி.எம்.​ சௌந்தரராஜன் பாட வேண்டும்,​​ சிவாஜி கணேசன் வாயசைக்க வேண்டும்.​ அப்படிப்பட்ட பாடல் நூறாண்டுகள் நிலைத்து விடும்.​ அவரது பாடல்கள் நிலைத்திருக்கின்றன.​ கண்ணதாசன் இப் பகுதியில் பிறந்தவர் என்பது நமக்கு பெருமைக்குரியது.​

அவரை விஞ்சிய கவிஞன் சம காலத்தில் இன்னும் தோன்றவில்லை.​ கண்ணதாசனை ஞானக் கண்களாக ஏற்று பல கவிஞர்கள் தோன்ற வேண்டும் என்று பேசியிருந்தார் ப.சிதம்பரம்.

எழுதியவர் : (24-Jun-18, 6:37 pm)
பார்வை : 160

மேலே