கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை

காதல் பதின் பருவத்தினருக்கான தொற்று நோய் என்பதை உணரக்கூடிய தருணத்தில் , பள்ளிக்கூட சிறைவாசத்தை தூக்கியெறிந்து , ஆயிரம் கனவுகளோடு மிதந்து கொண்டும் ,மதிப்பெண்ணுக்காகவும் காத்திருந்த மே மாதம்............. மதிப்பெண் அதிகம் பெற்றும் மகிழ்வில்லை ........... . மருத்துவம் பயிலா மாணவன் , மாக்கான் என்று பார்க்கும் சுற்றம் .
சரி , மருத்துவம் சுற்றத்தார் விருப்பம் , நமது விருப்பம் வேளாண் கல்வி . வேளாண் கல்லூரி கலந்தாய்வே விந்தையானதாய் மாற ,மாணவர்கள் தத்தளிக்க, கிடைத்த துறையை எடுத்துக்கொண்டு வேறு வழியே இல்லை என்னும் வலியோடு காத்திருந்தேன் . புயலடித்த பூமியில் சுழன்று வந்தாள் ,என் முதல் கல்லூரித் தோழி .அவள் ஒரு நிமிடம் கூட பேசாமல் இல்லை . கண்ணீர் பூக்களை உதிர்த்துக் கொண்டிருந்த என்னையே புன்னகையை சிந்தவைத்து விட்டாள். கலந்தாய்வில் தான் காத்திருப்பு பட்டியல் இல்லையே தவிர ,கல்லூரித் திறப்பிற்கு நெடுநாள் காத்திருந்தேன் . கல்லூரிப் பயணத்திற்கு முந்தைய நாள் கல்லூரிப்பற்றிய கனவுகளே என் உறக்கத்தை ஆக்கிரமித்திருந்தன. காலை நான்கு மணிக்கெல்லாம் கல்லூரிப்பயணத்திற்கு தயாராகிவிட்டோம் .கல்லூரியில் உறவுகள் உண்டாகும் முன்பே கல்லூரி பிடித்து போனது .காரணம் கல்லூரின் அமைவு மலைச் சாரலில் ,பசுமை போர்வைக்குள் இருந்ததே . பின் சேர்க்கை நிகழும் இடத்தில் விட்டுக்கொடுத்தலில் அறிமுகமான என் தோழி இப்போது உயிர்த் தோழி .சக மாணவர்களை வகுப்பறையின் சிரிப்பொலிகளிலிருந்து அறிந்தேன் .மாலை கதிரொளி நீங்கும் நேரம் என் குடும்பத்தார் என்னை விடுதியில் விட்டு விட்டு அவ்விடம் விட்டு நீங்கினார்கள் .என் புன்னகையை சிந்தவிட்டவளும் நானும் ஒரே அறையில் இரவு முழுதும் அரட்டையில் செலவிட்டோம் . பின் பல நாட்கள் வகுப்புகள் நிகழாமல் வெறுமனே ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வதில் செலவிட்டோம் .அதில் நான் மட்டும் சற்று வித்தியாசமானவள் .நான் எனது வகுப்புத் தோழர்களிடம் பேசவே மாட்டேன் . வகுப்புகள் தொடங்கிய சில நாட்களுக்குப்பின் அனைவரும் அயர்ந்து போனோம் .காரணம் வயல் வேலைகளும் எழுத்து வேலைகளும் எங்களை வாட்டிவிட்டன.திறமைகளுக்காக சில நாட்கள் ,திணறவைக்கும் தேர்வுக்காக பல நாட்கள் என காலமும் உருண்டோடியது . இடையிடையே கண்ணீர்த் துளிகளும் மகிழ்ச்சிக் கூத்துக்களும் எட்டிப்பார்க்கும் .கல்விச் சுற்றுலா செல்லும் காலங்கள் எங்களின் வாழ்வில் பொற்காலம் .ஆனால் காணார் கண்கள் போர்க்களத்தை உண்டாக்காமல் விடாது . காணா பொருளுக்கு அளவில்லா ஒப்பனை பூட்டி மனிதநேயத்தை பூட்டி வைத்துவிடுவார்கள் பாதகர்கள் .


ஒவ்வொரு கல்விச் சுற்றுலாவும் எங்களை வலுவூட்டின மனதளவிலும் உடலளவிலும் ;நாங்கள் செல்லும் பாதை பசுமை நிறைந்தும் வளங்கள் கொழித்தும் நின்றதே இன்றளவும் அவை எங்கள் மனதில் நிற்க காரணம் .


நாட்டு நலப்பணித் திட்டமும் இங்கு விந்தையானதாய்த் தான் தோன்றும் . நாட்டுக்கு சேவை செய்யாது கொத்தடிமைகளாகி விடும் நாட்களது .பின் ஆசான் மாற்றம் இங்கும் மாற்றத்தை உண்டாக்கியது .அன்று
முதல் திட்டங்கள் புதிது செயலும் புதிது . சேவை பல செய்தோம் .அதிலும் எங்களின் தங்கும் முகாமே எங்களின் பலரது வாழ்வின் மாற்றத்திற்கு காரணம் .


மலைவாழ் மக்கள் பொழியும் அன்பும்
எழில் பொங்கிய மலைகளும்
பாக்கு மர வரிசைகளும்
பச்சை மாங்கனிகளும்
நெடுந்தூர நடைப்பயணமும்
குதித்தோடும் ஆறும்
பழகிய முகங்களும்
முன்னறியா நகர மிருகங்கள் பெண்களிடம் செய்த செயல்களும்
மலையேற உதவிய கைகளும்
மாலை நேரத்து கலைநிகழ்ச்சிகளும்
மறக்கமுடியாத உணவும் ;கால்வாசி நண்பர்கள் உணவு ஒவ்வாமையால் நோயுற்றதும்
நடக்க முடியாத நாட்களும் மறக்கமுடியாதவை

மழை நேரத்தில் இரவு தூக்கமின்மையும் , காலை நேரத்தில் தண்ணீரின்மையும் ,பசிகொண்ட வேளையில் உணவு ருசியின்மையையும் யாருமே பெரிதுபடுத்தியதில்லை .

எங்களுக்கு பல்கலைக் கழக தேர்வு முடிந்திருந்தால் கூட இன்று போல் என்றும் மகிழ்ந்திருக்கமாட்டோம் .
அப்படி ஒரு மகிழ்ச்சி இன்று அனைவர் முகத்திலும் .ஏனெனில் இன்றுடன் உழைப்போர் உதாசீனப்படுத்தப்பட மாட்டார்கள் ;உழைக்கா மக்கள் வெறுமனே ஆசிரியையின் வார்த்தைகளுக்கெல்லாம் நகைக்கத் தேவையில்லை என்பதே ;ஆனால் உண்மை அதுவல்ல


பசுமை போர்த்தப்பட்டு ,மழைச் சாரல் வீசும் தருணங்களில் ,கொன்றைப் பூக்கள் மஞ்சள் சிவப்பு என்று வண்ணங்களை அள்ளி தெளித்துக்கொண்டிருக்கையில் நண்பர்கள் கூட்டத்தோடு உரையாடி களித்தோம் .
ஆணும் பெண்ணும் கல்லூரிக் காலங்களில் நட்புடன் பழகினாலும் ,அதை காதல் என்றே கொச்சை படுத்தும் இக்கல்லூரியில்,,,,,,, இன்று எவரும் எதிர்பார்த்திராத நிகழ்வு ஒன்று.......... .உள்ளத்தால் உணர்பவர்க்கு இவை நிச்சயம் புரியும் !


ஆணும் பெண்ணும் நட்போடு பழக முடியாது என்னும் சமூகம் இதை அறிய வேண்டும்
இக்கல்லூரியில் உணவுண்ண ஓர் நீண்ட அறை அதன் நடுவே இருபுறமும் இடைவெளி விட்டு ஓர் தடுப்பு .தடுப்பின் ஒருபுறம் மாணவர்களும் மறுபுறம் மாணவிகளும் அமர்வோம் .இன்றும் அதை போலவே அமர்ந்தோம் .இன்று எங்களுக்கு சிறப்பு உணவு என்பதால் உணவுண்ண காலதாமதமானது .அதில் எங்கள் தோழர் ஒரு சிலருக்கு மட்டும் மாணவர் பக்கம் இடமில்லை . தோழிமார் அழைக்கவே மாணவிகள் பக்கம் அமர்ந்தார்கள் .... புற்றீசல் போலவே எனது மற்ற தோழர்களும் வகுப்புத் தோழமைகளோடு வந்துஅமர்ந்தனர் ..........

உண்மையில் எங்கள் வகுப்பில் காதலர்கள் இல்லை ஆனால் காதலுண்டு .............
ஆனால் எங்களோடு பயிலும் வேறு துறை மாணவர்கள் வகுப்பில் காதலர்கள் உண்டு ஆனால் காதல் இல்லை



இன்றுதான் புரிந்தது தோழமைக்குள் காதல் ஒளிந்திருக்கும் ........ இது உலகம் நினைப்பது போன்றதல்ல !

சகோதரத்துவம் தான் இங்குண்டு .......................
இதன் உன்னதம் புரிபவர்க்கு இதுவும் புரியும் !


துன்பம் என்றால் இரவு பகல் பாராது ஆண் பெண் இரு பாலரும் ஓருவருக்கொருவர் நாங்கள் அனைவரும் ஒன்றாகவே நிற்போம் . எங்களின் கல்லூரிக்குடும்பத்தில் எவரும் பாதை மாறியதுமில்லை பாதை மாற நாங்கள் விட்டது மில்லை ...........அன்னையாய் ஒருவள் ..........குட்டிக் குறும்புக்காரத் தங்கையாய் சிலர் ............பொறுப்புள்ள அண்ணன்மார்கள் சிலர் .................நெடிய உருவமுள்ள நெட்டையன் ஒருவன் ...........ஒட்டிக்கொள்ளும் நிறமுடைய கரியன் ஒருவன் ............. கருத்துக்கு இருவர் ............ கவிதைக்கு சிலர் ........ ஓவியத்திற்கு சிலர் .........என்று எங்களின் தோற்றமும் திறமைகளும் வெவ்வேறானாலும் நாங்கள் ஒரு குடும்பத்துப் பிள்ளைகள் தான் ............

எழுதியவர் : கயல் அமுது (30-Jun-18, 5:54 pm)
பார்வை : 250

மேலே