தமிழா நீ புயலாவது எப்போது

தென்னை மரத்தில் தேள் கொட்டினால்
பனைமரத்தில் நெறி கட்டுதென்று பதறியவர்கள்.
கண்ணைக் குத்திடும் முள்ளை மட்டும்
கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன் ?

உலகுக்கு ஊறல் எடுத்தால்
சொறிந்துவிடத் தெரிந்தவர்கள் –தன்
உடலுக்கு ஊறுதரும் ஊசிக் குத்தலை
உணராமல் நடப்பதும் ஏன் ?

கபடக்காரர்களைக் கண்டு கொள்ளாத வரையில்-உன்
கண்களுக்கு ஒளியில்லை தமிழா ?
ஓட்டுக்காக மட்டுமே உன்னை உயர்த்தி –பின்
வேட்டு வைக்கும் வியாபாரிகளை நம்பியா ? –நீ
வீணாகி அழிகிறாய் ?

இன உணர்வு அல்ல –மனித
உணர்வே இல்லாத இவர்களை இன்னுமா மதிக்கிறாய் ?

பதவிக்காக மட்டுமே பவனிவருபவர்கள் !
பரலோகப் பதவி என்றாலும் பரவசப்படும் பக்த கோடிகள் !

பழகிக் கொண்டு இருக்கும் போதே
பாசணத்தைக் கலக்கும் நயவஞ்சகர்கள்.
அமைதி என்று சொல்லிக் கொண்டே
ஆயுதம் எடுக்கும் அயோக்கியர்கள் .

உயிரற்ற பொருளுக்காய் ஓடோடிச் செல்பவர்கள்
உயிர் கொலை கண்டும் ஊமையாய் நிற்பது ஏன் ?
துடிப்பவர்களைக் கண்டும் துயரப்படாதவர்கள் மனிதரா ?
இனத்தை இழிவு செய்யும் இதயமற்றவர்கள்
குணத்தைக் கண்டும் கோபப்படாமல் கிடப்பது ஏன் ?

எரிதணலில் துடிப்பவர்கள் எழுந்து வந்தால்
பரிதாபப் படாமல் பரிகாசம் செய்வதும் ஏன் ?
இதுதான் மனித தர்மமா ? நெஞ்சம் துடிக்கிறது...
கையால் ஆகாதனத்தை எண்ணி கண்ணீர் வடிக்கிறது.
புலிகளுக்கே புல்லைக் காட்டியவர்கள்
புறாக்களுக்கா இரையைக் காட்டுவார்கள்.

புரிந்தும் புரியாமல் கிடக்காதே தமிழா !
புரிந்து கொண்டு புயலாவது எப்போது ?
அப்போது எல்லாமே மாறிவிடும் தப்பாது.......

எழுதியவர் : பொதிகை மு.செல்வராசன் (3-Jul-18, 8:44 pm)
பார்வை : 268

மேலே