வள்ளல் மொழி

கல்லிலே கலையைக் கண்டவன்
கலையிலே உணர்வை வைத்தான்

வில்லிலே அம்பைத் தொடுத்தவன்
வித்தையில் வியக்க வைத்தான்

சொல்லிலே மொழியமைத்தான்
உலகமதில் கிறங்க வைத்தான்

தில்லிலே திகைக்க செய்தான்
திணறலில் துடிக்க வைத்தான்

மெல்லிய இசை அமைத்தான்
மெய்மறந்து ரசிக்க வைத்தான்

பொல்லாத புகழை எண்ணி
போர்க்களமே அதிர நின்றான்

செல்லாத இடம் சேர்ந்து
சேவைகளும் சேர்ந்து செய்தான்

நல்லதொரு சேவகனாய்
நலம் வாழ நாடி நின்றான்

இல்லை என்ற சொல்லுக்கு
இடமில்லை அவன் வாழ்வில்

தொல்லை பல வந்திடினும்
தொடர் முழக்கம் கொண்டிடுவான்

வெல்லும் வரை விடுவதில்லை
வீண் புகழும் விரும்பவில்லை

அல்லும் பகலும் அயராது பாடுபடும்
அவன் ஓதும் மந்திரமே அன்புதான்

எல்லையும் தாண்ட மாட்டான்
எளியவரை தீண்ட மாட்டான்

வல்ல அவன் பெயரே தமிழன்
சொல்ல சொல்ல இனிக்கும் அவன் நாமம்

செல்லத் தமிழ் செந்தமிழாம்
செவ்வாயின் நற்றமிழாம்

வல்ல மொழி வாழ்த்தி நிற்கும்
வள்ளல் அவன் தமிழ் இன்பத் தமிழாலே

எழுதியவர் : பாத்திமாமலர் (6-Jul-18, 12:31 pm)
Tanglish : vallal mozhi
பார்வை : 745

மேலே