கவிதைப் போட்டியில் வென்ற கவிதை

பெண் இனத்தால்
மண்ணுலகம் சிறக்கும்..!
============================


திறத்தாலெ உயர்வுற்று தாய்நாட்டுப் பற்றுடனே
..........தோன்றிய பெருமைநம் தாய்நாட்டுக்கு முண்டு..!
இறத்தலுக்கு அஞ்சா தாங்கிலேய ஆதிக்கத்திற்கு
..........எதிராக ஆயுதமேந்திப் போராடியவரும் உண்டு..!
மறத்தியர் பட்டியலில் மனதிற்குடன் வருவோரில்
..........மங்கைவீர வேலுநாச்சியும் அஞ்சலையம்மாளும்..!
அறத்தின் செல்வியென சுதந்திரப் போராட்டத்தில்
..........ஆயிரமாயிரம் வீராங்கனைகள் இவர் போலுண்டு..!


பெருமதிப்பு கொண்டே அக்காலத்தில் கருத்துடன்
..........பெண்ணைக் கண்ணாகக் கருதியே காப்பாற்றினர்..!
கருவிலேயே பெண்சிசுவை அழிக்கின்ற அடாத
..........காரியத்தையின்று காணும் கொடுமை நிகழ்கின்றது..!
அருகிவரும் பாலினமாக இன்று பெண்ணினமே
..........சுருங்கிவிடுமோ என்கிற அச்சமும் எழுகின்றது..!
அருங்கலம்போல் கிடைக்கின்ற அரிய உயிரை
..........அரும்புமுன் அழிப்பது கொடும் பாவச்செயலன்றோ..!


பெண்ணாய்ப் பிறந்தாலே முழுதும் துன்பமெனப்
..........பெரிதே கவலையுறும் தாய்மார்கள் திருந்தவேணும்..!
அண்டத்தில் பிறவி ஆணாயினும் பெண்ணாயினும்
..........அதிலரியது பெண்ணென்பதை அறிய வேண்டும்..!
பெண்டாட்டி தாய்மகள் சகோதரியெனும் பலவாறு
..........பிறவியெடுக்கும் பிறப்புக்குப் பெண்ணே மூலமெனும்..
கண்ணோட்டம் வந்துவிட்டால் கண்ணீர் அகலும்
..........காலமாற்ற மிதற்குக் கண்டிப்பாய் உதவிசெய்யும்..!

===================================================

ஏற்புரை::
========
கடந்த மாதத்தில் (04-06-18 - 09-06-18) சிறந்த கவிதையாகவும், கவிஞராகவும் தேர்ந்தெடுத்த நடுவர் திருமதி மேகலா ராமமூர்த்தி அவர்களுக்கும், கவிதைக்குப் படத்தைக் கொடுத்த கோபிசங்கருக்கும், படக்குழுமத்தின் ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பனுக்கும், ஆசிரியர் திருமதி பவளசங்கரிக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

பெண்குழந்தைக்குப் பெருமை சேர்க்கின்ற வகையிலே, கவி புனைந்த ஏனைய கவிஞர்களுக்கும் என் அகமகிழ்ந்த நன்றி..

நடுவர் திருமதி மேகலா இராமமூர்த்தி அவர்களின்..

“மறத்தோடு நம் மண் காத்த வீரமங்கையரை மறக்கவியலுமோ? பெண் குழந்தைகளை அருளின்றிக் கருவிலே கொல்லாமல், திருவெனக் காப்போம்!”

என்கிற வாழ்த்துரையை மீண்டும் நினைவு கூறி, நன்றி சொல்கிறேன்.

அன்புடன் பெருவை பார்த்தசாரதி

எழுதியவர் : பெருவை பார்த்தசாரதி (8-Jul-18, 8:13 pm)
பார்வை : 57

மேலே