428 உலகியல் பொருளெல்லாம் கூற்றுவன் ஆயுதங்கள் - யாக்கை நிலையாமை 10

அறுசீர் விருத்தம்
(காய் 4 / மா தேமா)

மண்டலத்தா ருயிர்வாங்க நமன்கொண்ட ஆயுதத்தின்
..வகுப்பை நோக்கில்
கொண்டலிடி மின்னீர்கா லனன்மரங்கல் மண்ணோய்மீன்
..கொடிய புட்கள்
உண்டிவிலங் கின்பதுன்பம் பகையச்சம் ஊர்வனபேய்
..உலகில் இன்னுங்
கண்டதெல்லாம் அவன்கையா யுதமென்னிற் றப்பும்வகை
..காணோ நெஞ்சே. 10

- யாக்கை நிலையாமை
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”நெஞ்சே! உலகிலுள்ளார் உயிரை எடுத்துச் செல்ல, எமன் கையாளும் கருவிகள் எவையென்று பார்த்தால், அவை மழை, இடி, மின்னல், வெள்ளம், காற்று, தீ, மரம், மலை, மண், நோய், மீன், கொடிய பறவைகள், உணவு, விலங்கு, இன்பம், துன்பம், பகை, பயம், ஊர்ந்து செல்லும் உயிரினங்கள், பேய் முதலாகிய உலகத்தில் இன்னும் காணும் பொருள் எல்லாம் அவன் கையிலுள்ள ஆயுதங்களாகும்.

ஆதலால், நாம் தப்பும் வகை காணவில்லையே” என்கிறார் இப்பாடலாசிரியர்.


கொண்டல் - மழை. கால் - காற்று. அனல் - தீ. கல் - மலை. புள் - பறவை.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (9-Jul-18, 5:55 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 34

மேலே