537 பாட்டறு நூறும் பகர்ந்தேன் எனக்கே – நீதிநூல் - பாயிரம் 1

அறுசீர் விருத்தம்
விளம் மா தேமா அரையடிக்கு
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் அருகி வரும்)

தனக்குத்தா னொருவன் போதம்
சாற்றிடிற் குறைபி றர்க்கென்
எனக்கவிர் நீதி நூனாற்
பத்துநான் கதிகா ரங்கள்
இனக்கவி யறுநூ றாய
இனையநூ லயலார்க் கன்றென்
மனக்கியான் உணர்த்து கின்றேன்
மற்றெனை முனிவர் யாரே.

– நீதிநூல் - பாயிரம் 1
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

ஒருவன் தானே திருந்தி நன்னெறிச் செல்லவேண்டும். அதன் பொருட்டுத் தனக்குத்தானே அறிவு கூறிக் கொள்கிறான்; அதனால், பிறர்க்கு உண்டாகும் குறைவு ஒன்றுமின்று.

அதுபோல், என் அகவிருள் அகன்று அறிவொளி விளங்குதற்குப் படலம் (அதிகாரம்) நாற்பத்து நான்கும், செய்யுள் அறுநூறும் சேர்ந்த இந் நீதிநூலைக் கூறினேன்.

அயலவர் பொருட்டு அன்று இந் நூல்; அதனால், என்னை முனிபவர் ஒருவரும் இலர்.

போதம்-அறிவு. அவிர்-விளக்கம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (9-Jul-18, 7:53 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 28

சிறந்த கட்டுரைகள்

மேலே