538 இருள்வேட்டு வெண்மையை ஏசலென் பாற்சினம் – நீதிநூல் - பாயிரம் 2

அறுசீர் விருத்தம்
விளம் மா தேமா அரையடிக்கு
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் அருகி வரும்)

மண்கவி மாந்தர் யாரும்
..மறைவின்றி யுணரும் வண்ணம்
வெண்கவி புனைந்தே னென்னை
..வெகுளுத லிருளை வேட்டு
விண்கவி மதியைப் பாலை
..வெள்ளியை வெண்ப டாத்தைக்
கண்கவி வயிர முத்தைக்
..கவுரமென் றுடற்றல் போலும்.

– நீதிநூல் - பாயிரம் 2
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

நிலவுலகத்துச் சூழ்ந்து வாழும் மக்கள் எல்லாரும் வெளிப்படையாக உணரும்படி இந் நீதி நூலை எளிய செய்யுட்களால் பாடினேன். அதனால், என்னை யாரும் வெகுளார். யாராவது வெகுள்வாரானால், அதற்குக் காரணம் அவர்கள் அறமுறையை விரும்பாமையாகும். அது பெரும்பாலும் தீமைக்கே துணையாம்.

இருளை விரும்பி அதற்கு மாறாகிய வெண்மையான வான்ஊர் திங்களை, இனிய ஆன்பாலை, ஒளிசேர் வெள்ளியை, தூய வெள்ளாடையை, கண்ணைப் பறிக்கும் வயிரத்தை, தண்ணென இருக்கும் முத்தை வெண்மையென்று வெறுத்துப் பழிப்பதுபோல் ஆகும்.

கவி-சூழ். மாந்தர்-மக்கள். வெண்கவி-வெள்ளைப்பாட்டு; எளிதில் விளங்கும் பாட்டு. படாம்-ஆடை. கவுரம்-வெண்மை.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (9-Jul-18, 7:57 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 39

சிறந்த கட்டுரைகள்

மேலே