நெருப்பு நொடிகள்-2

ஏனோ அன்று அந்திவானம் வெகு சீக்கிரமாய் ஒளியிழக்க துவங்கியிருந்தது. கல்லூரிக்கு போகச்சொல்லி பெற்றோர் கட்டாயப்படுத்துவதை எண்ணி மனம் நொந்துகொண்டே கட்டிலில் சாய்ந்திருந்தாள் மோனா.

அழுது வெளிறிய அவள் முகம் நிலவொளியில் கரைந்து கொண்டிருந்தது. தலையணையை கட்டியபடி தன்னையும் அறியாமல் தூங்கிப்போனாள். படுக்கையறையில் இருள் கவ்வத் தொடங்கியிருந்த நேரம், தேகம் முழுதும் மெல்லிய குளிர் பரவியது. போர்வையை தேடி கட்டிலை துழாவினாள் மோனா. சில்லென்று ஏதோ விழுந்து நொறுங்கிய சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்தாள். எதை தட்டி விட்டோம் என்று யோசித்துக்கொண்டே கால்களை தரையில் ஊன்றினாள். மேசை விளக்கின் மங்கிய ஒளியில் கூர்ந்து நோக்கினாள். சில காகித துண்டுகளை தவிர வேறொன்றையும் காணவில்லை.

நாளை பார்த்துக்கொள்ளலாம் என எண்ணிக்கொண்டு விளக்கை அணைக்க முற்பட்டாள். அணைத்தும் விட்டாள்.. ஆனால் இந்த சொற்பநேரத்தில் அவள் கண்கள் எதையோ படம்பிடித்திருந்தது அவளுக்கு உறைத்தது. கட்டுக்கடங்காமல் இதயம் துடிப்பது அவள் செவிகளை எட்டியது. விரல்களை பிணைத்துக்கொண்டு திரும்பி பார்த்தாள். அறையின் மூலையில் இருந்த நாற்காலியில் யாரோ அமர்ந்திருப்பதாய் தோன்றியது. தன்னுள் எழுந்த அச்சத்தை வென்றுவிட நினைத்து கண்களை இறுக மூடி எச்சில் விழுங்கிய பின்பு மீண்டும் கண்திறந்தாள்.

"அங்கே ஒன்றும் இல்லை.. பயப்படாதே. ஏதும் நிழலாய் இருக்கும்", தனக்கு தானே பேசிக்கொண்டு மீண்டும் நாற்காலியை நோக்கினாள். அது தன்னிலை இழந்து அந்தரத்தில் ஊசலாடி கொண்டிருந்தது. கண் இமைக்கும் நொடியில் அவளை நோக்கி பாய்ந்து வந்தது. அலறி துடிக்க மனம் பரபரத்தாலும் தொண்டையில் பயம் கவ்வி கொண்டு குரலை விழுங்கிற்று. கையும் காலும் அசைவற்று போயிருந்தது. பாய்ந்து வந்த நாற்காலி அவள் முன் ஒரு வினாடி நின்று பின் தறிகெட்டு சுழல ஆரம்பித்தது. தரையில் கிடந்த காகித துண்டுகள் காற்றோடு பறந்து கட்டிலில் விழுந்தது. அப்போது தான் அது என்னவென்று கவனித்தாள் மோனா. அதில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் அவள் வகுப்பு மாணவர்களின் முகங்கள் அவளை பார்த்து சிரித்து கொண்டிருந்தது. அது அவள் கல்லூரியின் இறுதிநாளில் எடுத்துக்கொண்ட படம்.

எலும்புகளை சில்லிட செய்யும் சிரிப்பு சத்தம் கொஞ்சம் கொஞ்சமாய் தீவிரமடைந்தது. "ஐயோ.. என்னை விட்டு விடு. என்னை விட்டு விடு.. ப்ளீஸ்!!", சத்தமாய் அலற தொடங்கியிருந்தாள் மோனா. "மோனா.. எங்களை காப்பாற்று!". குரல் வந்த திசையில் திரும்பிய மோனா நொறுங்கி போனாள். அவள் தாய் தந்தையின் கழுத்தை தடிமனான கயிறு ஒன்று நெருக்கி கொண்டிருந்தது.

"ஐயோ நான் என்ன செய்வேன்.. என் அம்மா அப்பாவை விட்டுடு ப்ளீஸ்.. நான் கல்லூரிக்கு போறேன்.. அவங்களை விட்டுடு..விட்டுடு.. ப்ளீஸ்.." அழுதுகொண்டே மூர்ச்சையானாள் மோனா. அவள் கண்விழித்தபோது தன் தாயின் மடியில் படுத்திருப்பதை உணர்ந்தாள்.

"மோனா.. ஒன்னும் இல்லை மா. நீ ஏதோ கனவு கண்டிருக்க", தன் மகளை சமாதானம் செய்ய முயன்றாள் அவள் தாய்.

"அம்மா என்னோட கல்லூரி புகைப்படம்.. அது கிழிந்து.. இங்க..", தடுமாறி கொண்டே அவற்றை தேடிய மோனாவை அவள் தாய் இறுக அணைத்து கொண்டாள். "உனக்கு அந்த போட்டோவை பார்க்க பிடிக்காதுன்னு நாங்க ஊர்ல இருக்கும் போதே அதை குப்பைல போட்டுட்டோம் மோனா". குழப்பத்துடன் தன் தாயின் சேலை முந்தியை எடுத்து நெஞ்சோடு சேர்த்து அணைத்து கொண்டாள். "அம்மா.. நான் கல்லூரிக்கு போறேன். ஏற்பாடு பண்ணுங்க", சொல்லிவிட்டு அவள் அன்னையின் மடியில் படுத்துகொண்டாள்.

மோனா கல்லூரிக்கு வரும் சேதி கிடைத்ததும் டீனாவும் ப்ரியாவும் தங்களால் இயன்ற முயற்சிகளை மேற்கொள்ள துவங்கியிருந்தனர். யாரும் அவளின் பழைய நினைவுகளை கிளறி விட்டுவிட கூடாதென்பதில் கூடுதல் அக்கறை எடுத்திருந்தனர். அன்று டீனா சத்யாவை தொடர்புகொள்ள முயற்சித்தாள். கல்லூரி நாட்களில் சத்யா, டீனா, ப்ரியா, மார்டின் நால்வரும் எப்போதும் ஒன்றாய் சுற்றி திரிந்தனர். கல்லூரி இறுதி தேர்வுகள் நெருங்கும் சமயம் வேதியியல் ஆய்வகத்தில் ஏற்பட்ட ஒரு விபத்தில் மார்ட்டின் இறந்து போனான். மார்டினின் இறப்பு இவர்கள் அனைவரையும் மனதளவில் மிகவும் பாதித்திருந்தது. அதிலும் விடுதியில் சத்யா, மார்டினுடன் ஒரே அறையில் தங்கியிருந்தான். மார்டின் இறந்தபின் தன் தந்தையிடம் சொல்லி வீட்டில் இருந்தே கல்லூரி செல்ல ஆரம்பித்தான்.

அனைவரும் மீண்டும் ஒருமுறை கல்லூரியில் சந்தித்து தங்கள் நினைவுகளோடு போராட தயாராகினர். தொலைவிலிருந்து வரும் முன்னாள் மாணவர்கள் தங்க விடுதியில் அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. ஆனால் மோனா தன் உறவினர் ஒருவர் வீட்டில் பெற்றோருடன் தங்கியிருந்தாள்.

நிகழ்ச்சிகள் துவங்க சில மணி நேரமே எஞ்சியிருந்தது. சத்யா, ப்ரியா மற்றும் டீனாவுடன் தாங்கள் எப்போதும் அமர்ந்து மதிய உணவருந்தும் வாகை மரத்தின் அடியில் நின்றுகொண்டிருந்தான். மாணவர்கள் மத்தியில் ஆங்காங்கே சின்னதாய் சலனம் ஏற்படுவதை உணர்ந்து நிமிர்ந்து பார்த்தவன் கல்லூரியில் காலெடுத்து வைத்த மோனாவை கண்டான்..

தொடரும்..!

எழுதியவர் : மது (10-Jul-18, 3:17 pm)
பார்வை : 980

மேலே