மகள் மணமாகிப்போன மறுநாளிலிருந்து

===========================================
அவள் எழுந்ததும் கூவிக்கொண்டப்
பழக்கத்தோசம் மாறாமல்
உறங்கிவிடுகின்ற சேவல்,
உரியநேரத்திற்குக் கூவி
வீட்டாரை கண்விழிக்கச் செய்ய
கடைத்தெருவில் புத்தகம் ஏதேனும்
கிடைக்குமாவென்று கேட்கிறது.
௦௦
நட்சத்திரங்களை இழந்த
வானத்தைப்போல
புள்ளிக் கோலங்களைத் தொலைத்த
வாசல் சாணம் குளிக்க ஏங்குகிறது.
௦௦
எப்போதும் அவள்முகத்தில் விழித்துச்
சிரிக்கக் கற்றுக்கொண்ட பூவிதழ்கள்
பனித்துளியாய் அழுகின்றன.
௦௦
காலைக்கடனுக்காய் காத்திருக்கும்
வளர்ப்பு நாயோ தன் அவஸ்தையை
சொல்லி அழமுடியாமல்
அதிகாலையிலேயே வாசல் கதவைப்
பிராண்டும்
௦௦
முன்னறிவிப்பு ஏதுமின்றி
சுப்ரபாதம் எட்டு மணிக்குமேல்
ஒலிப்பதற்கான ஒப்பந்தத்தில்
கையெழுத்திட்டுவிட்டது.
௦௦
முகப்பறை கூஜாவின்
நெகிழிப் பூக்கள் தூசிகொண்டு
தன்னைத்தானே அலங்கரித்துக் கொள்கின்றன.
௦௦
கோழி இறைதேடக் கிளறிவிட்டக்
வைக்கோல் சிதறல்களாய்
படுக்கை விரிப்புகள்.
௦0
வீடுகடத்தப்பட்ட சிலந்திகள்
அனுமதியின்றி மீள் பிரவேசம்
நடத்தத் தொடங்கிவிடுகின்றன
௦௦
துப்பரவு தொழிலாளர்கள்
வாராத நாட்களில் தொட்டியை மீறி
வீதிவரை நிறைந்துவிடும்
குப்பைத்தொட்டியைப்போல
குவிந்து விடுகின்றன
அழுக்குத்துணிகள்
௦௦
அனாவசியமாய்
எரியும் மின்விளக்குகள்
கட்டண அதிகரிப்பை உறுதி செய்கின்றன
௦௦
அரிசி டப்பாவில் உழுந்தையும்
உப்புக் கலயத்தில் சர்க்கரையையும் என்று
பலசரக்குப் பொருட்களை
மாறி மாறித்தேடி இந்தவீட்டில்
ஒரு சாமான் வச்சா வச்ச இடத்தில்
இருக்காதென்ற மனைவியின் புலம்பல்
அரங்கேற்றம் நிகழ்த்தத் தொடங்கியது
௦௦
மனைவியின் முகத்திலும் சருமத்திலும்
விழத்தொடங்கிய சுருக்கத்தை அவள்
இஸ்திரிகைப் போட்டுக்கொடுக்கும்
சட்டைகளிலும் காண நேர்கிறது
௦௦
நேரம் தவறிய உணவு வழக்கம்
ஆரம்பமாகிய குறிப்பை
சாப்பிட்டப் பின்னரும் வாலாட்டாத
நாயின் வால் அறிவித்துவிடுகிறது..
௦௦
கடைத்தெருவில்
அவள் விரும்பி உண்ணும்
நொறுக்குத்தீனி வாங்கிச்சென்று
இந்தாம்மா இதை கொண்டே உள்ளே
வை என்று அழைத்து
நாக்கைக் கடித்துக் கொள்ளும்
நிகழ்வுகள் ஏற்பட்டு விடுகின்றது..
௦௦
என்னங்க..
என்னால தனியா
கஷ்டப்பட இயலாது சீக்கிரமா
அவனுக்கு ஒரு பொண்ண பாருங்க
என்ற மனைவியின் புறுபுறுப்பு
வலுக்கத் தொடங்குகின்றது .
௦௦
எப்படியோ அவளில்லாமல்
கழிகின்ற நாட்களினூடே
அவரவர் கடமைகள் அவரவர்
செய்துகொள்ளவேண்டிய நிர்பந்தத்தை
ஏற்படுத்தி சென்றுவிட்டப் பிரிவு
அவளின் இடத்தை அவளால் மட்டும்
நிரப்ப முடியும் என்ற பாடத்தைப்
புகட்டியே விடுகிறது
௦௦௦௦
***மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (14-Jul-18, 2:42 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 74

மேலே