கொஞ்சம் பேசட்டுமா

ஆழவேரூன்றி அடுக்கடுக்காய் அடுத்தடுத்தாய்
ஆட்சிகொண்டவர்களின் அழகழகான கட்டிடங்கள்...

ஊருக்கொரு கோவிலென ஊழல்செய்து
ஊறு விளைவிக்கும் கூட்டங்களை ஊக்கப்படுத்த
ஊசிமுனை நின்று துணைநிற்கும் சில ஊடகங்கள்...

கார்முகிலிடம் கதை பேசும் மினராக்களும்
காதர் பாய் ஓதிய பாங்குச் சப்தங்களும்
காவலுக்கு நிற்கின்றன சில சைத்தான்களின் சைகைகளுக்கு எதிராக...

வெண்மை போர்த்திய தேவாலயங்களில்
வெற்றுக் கண்களால் வேதாகமம் கண்டு
வெட்டப்பட்ட சிலுவையை சுமந்தபடி சில பயனற்ற ஆத்மாக்கள்...

சமத்துவம் நம்மிடம் பேசிப்பேசி
சவக்குழிக்கு வழிகாட்டிய சதிகாரக் கூட்டம்
சந்தர்ப்பம் தேடி சுரண்டத் தொடங்கிவிட்டது...

வறட்சியான நிலப்பரப்பில் வாடிநிற்கும் முற்றிய கனிகளாய்
வல்லரசு என்னும் புனைப்பெயரில் ஒளிந்துகொண்டது நம் சுதந்திரம்
வறுமை உரைக்கும் ஊழல்வாதிகளின் இரும்புப் பெட்டகத்தில்...

அலைப்பேசி முதலே தொலைக்காட்சி வரையென
அரசியலைப் பேசிப்பேசி பிழைப்பு நடத்தும்
அதிகாரவர்க்கம் ஆங்காங்கே வருகிறது அங்கும் குளிர்காய...

வேட்டுச் சப்தமும் வெண்புறாக் கூட்டங்களும்
வேடன் வலையில் சிக்கித் தப்பிய புள்ளிமான்களாய்
வேகமாய் வேலிகளைத் தாண்டுகிறது வேடமிட்ட சமாதானப் புறாக்களாக...

புல்தரை உள்ளமர்ந்த புதையலைத் தேடி
புல்லாங்குழல் தீண்டி புத்தனாகிப் போவேனோ...! இல்லை,
புலம்பெயரா மனதினை வதம்செய்துப் புதைப்பேனோ...!!

#கொஞ்சம்_பேசட்டுமா...?

எழுதியவர் : கௌதமன் நீல்ராஜ் (17-Jul-18, 4:17 pm)
சேர்த்தது : கௌதமன் நீல்ராஜ்
பார்வை : 52

மேலே