உதிஷ்ய தர்ஸ ஸ்ராத்தம் தில தர்ப்பண ரூபேணே அத்யக் கரிஷ்யே

இழுத்துபோகும் நதியில்
என் கட்டில் உண்டு.
நதிக்கு முளைத்த பருவாய்
என் கண்ணீர் கண்டும்
புரண்டும் மிதந்தும்
போகிறது என் கட்டில்.
பெருகும் மழையில்
மரக்கிளை பற்றி பார்க்கிறேன்.
அப்பா எழுதிக்காட்டிய
வாய்ப்பாடும் மான் பொம்மையும்..
அம்மாவின் பால் கணக்கும்..
கட்டில் வயிற்றில் சுவடென உண்டு.
முங்காமல் சுழலும்
கட்டிலின் நாற்காலிலும்
சித்தப்பா அறைந்த ஆணிகள் உண்டு.
தருமு பெரியப்பாவின்
சுண்ணாம்பு தீற்றல்கள்
அதன் அடிவயிற்றில் காணலாம்
புள்ளிமான் போல இருக்கும்.
நதியில் இப்போது எதன்மீதோ
முட்டுகிறது கட்டில்.
குப்பிப்பாட்டி தானே இடித்து
சனியனே என்று வளைவாள்
வலியில் தவித்து அமர்வாள்.
ஆயிற்று...
கட்டில் போயே விட்டது.
நதிக்கரையில் பிண்டங்கள் என்பது
சோறு மட்டுமல்ல.

எழுதியவர் : ஸ்பரிசன் (17-Jul-18, 7:45 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 189

மேலே