காதலிச்சி கல்யாணம்

பெத்தவங்க எதுத்து நிக்க
சாதிசனம் தடுத்து நிக்க
வாழ்ந்தா உன்னோடதான்னு
வீட்டவிட்டு ஓடிவந்தா
நான் மனசார காதலிச்ச
மாடிவீட்டு லெச்சுமி!!

தேடி வந்த தேவதைய
வேறென்ன நானும் சொல்ல
சேத்துவச்ச காசுல சின்னாளப் பட்டெடுத்து
மோதிரத்த வித்து
முக்கா பவுனு தாலி வாங்கி
மூணுமுடிச்சி நானும் போட்டேன்
முனியாண்டவர் கோயிலுல...

நண்பனோட தயவுல
நாலு ஊருதள்ளி வீடு பாத்தேன்
நாடிவந்த புள்ளய
நல்லா வச்சிக்கணும்னு
நாளு நேரம் பாக்காம வேல பாத்தேன்
நாலுகாசு அவளுக்காக சேத்துவச்சேன்...

பெத்தவங்க நெனப்புல
முத்தத்தோட கலந்த காதலோட
ஒவ்வொரு நாளும் கடந்து போச்சு
மாசமும் ஆறு ஆகிப்போச்சு
அவளும் மாசமா ஆகிருந்தா...

விஷயம் தெரிஞ்சிபோய்
வீடுதேடிவந்த எங்கப்பா
நாவரச மரத்துல
நடவண்டி செய்யணும்
நம்ம பேரப்புள்ளைக்கு என்க
வாடி மருமகளே! னு என்னவள
வாரியணைச்சா எங்கம்மா!!

மறுநாள் வீடு வந்த
மாமியாரும் மாமனாரும்
மகளேனு கண்ணீர்விட்டு
மாரோட சேத்தணைச்சி
மகராணியா எம் பொண்ணிருக்கா
மாப்பிள்ளை நீங்க தங்கம்னாங்க..

வரிஞ்சிக்கட்டி வம்பிழுத்து
போன மச்சான்
வளைகாப்பு நடத்தணும்னு
வாஞ்சையோட கேட்டு வந்தான்!!
என் கண்மணியும் நானும்
கண்கலங்கி நின்னோம்...

துன்பமெல்லாம் தூரம் போச்சு
பிரிஞ்சவங்க சேர்ந்தாச்சு
இந்த சொக்கனோட மீனாட்சி!
ரெட்ட புள்ள பெத்துப் போடு
நம்ம காதலுக்கு அது சாட்சி!!!

எழுதியவர் : சுரேந்தர் கண்ணன் (18-Jul-18, 11:02 pm)
சேர்த்தது : சுரேந்தர் கண்ணன்
பார்வை : 113

மேலே