பூங் கை புகழவோ நாவிற்கு உதவும் நயந்து - நன்னெறி 1

நன்மைகளைத் தரும் ஒழுக்க நெறிகளைக் கூறுவதால் நன்னெறி எனப்படுகிறது. கடவுள் வாழ்த்தோடு சேர்ந்து 41 பாடல்கள் உள்ளன. கடவுள் வாழ்த்து மட்டும் 2 அடி, ஏனைய நான்கு அடிகளைக் கொண்ட நேரிசை வெண்பாக்கள் ஆகும். முதல் இரண்டடியில் ஆசிரியர் சொல்ல வந்த கருத்தும், அடுத்த இரண்டடிகளில் அதனை விளக்க வந்த உவமையும் கூறப்பட்டுள்ளன.

இந்நூலை இயற்றிய துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த குமாரசாமி தேசிகருக்கு மூத்த மகனாகப் பிறந்தவர். திருநெல்வேலியின் தாமிரபரணிக் கரையிலுள்ள சிந்து பூந்துறையில் வாழ்ந்த வெள்ளியம்பலத் தம்பிரானிடம் இலக்கணம் கற்றார். இவருடைய காலம் பதினேழாம் நூற்றாண்டு. இவர் தம்முடைய முப்பத்திரண்டாம் வயதில் சிவபதம் அடைந்தார்.

நேரிசை வெண்பா

என்றும் முகமன் இயம்பாத வர்கண்ணும்
சென்று பொருள்கொடுப்பர் தீதற்றோர் - துன்றுசுவை
பூவின் பொலிகுழலாய்! பூங்கை புகழவோ
நாவிற்(கு) உதவும் நயந்து. 1

- நன்னெறி

பொருள்: மலர் சூடிப் பொலியும் பெண்ணே!

நம் அழகிய கை புகழ்ச்சிக்காக சென்று சுவையான உணவை நாவிற்குக் கொடுத்து உதவுவதில்லை.

அது போல தீதில்லாத நல்லவர்களும் தம்மை என்றும் திரும்பிக் கூடப் பார்க்காதவர்களுக்கும் சென்று பொருள் கொடுத்து உதவுவர்.

முஹம்மது சார்பான கருத்து: 07 Dec.2015

உங்கள் வெண்பாவை படிக்கும் போது நெஞ்சில் ஆனந்தம் அடைந்தேன் இது போல் நயமிக்க படைப்புக்களை அதுவும் பொருளோடு படிப்பது என்பது ரொம்மவும் சந்தோசம் தருகிறது எனக்கு வெண்பாக்கள் படிக்க மிகவும் பிடிக்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (29-Jul-18, 10:24 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 79

மேலே