வெற்றி பெற்று தோற்றவன்

வெற்றி பெற்று தோற்றவன்

இந்த கதை நடை பெற்ற காலம் 1975 லிருந்து 1985 க்குள்

நாயர் கடையில் கூட்டம் அலை மோதியது அவர் கடையில் காலையில் போடும் போண்டா,வடை பஜ்ஜி, போனறவைகளை வாங்க போட்டா போட்டி நடக்கும். அதே போல நாயர் டீ ஆற்றும் அழகே தனி ! எத்தனை பேர் வந்தாலும் ஒரே மாதிரி முகத்தை வைத்துக்கொண்டு (மகிழ்ச்சியாக இருக்கிறாரா கவலையாக இருக்கிறாரா என்று கண்டு பிடிக்க முடியாது)
அன்றைய இளைஞர்களாகிய நாங்கள் இரண்டாவது டீ குடிக்க ஆசைப்பட்டு நாயரே கொஞ்சம் ‘டிகாசன்’ ஊத்துங்க கேட்டு பின் பாலையும் வாங்கி கொஞ்சூண்டு சர்க்கரை, மீண்டும் டம்ளரை நிறைத்து குடித்து விடுவோம். நாங்கள் அவரை ஏமாற்றுவது தெரிந்தாலும் தெரியாதது போலவே முகத்தை வைத்துக்கொள்வார். நாங்கள் மலையாளம் கற்றுக்கொள்ள அவரிடம் மலையாளத்தில் பேச முயற்சி செய்தாலும் தமிழில்தான் பேசுவார். அவருக்கு மூன்று பெண்கள் என்றாலும் அவர் கவலைப்பட்டது கிடையாது. மூத்த பெண் கல்லாவில் உட்கார்ந்து இருப்பாள். மற்ற இருவரும் கடைக்கு கூட மாட உதவி செய்து விட்டு பள்ளிக்கு சென்று விடுவர்.
இந்த ஊர் தமிழ்நாட்டு பகுதியில் அமைந்துள்ள அணைக்கட்டு பகுதி என்றாலும், நிலப்பரப்பில் கேரள எல்லையை ஒட்டி அமைந்திருப்பதால் இரு மாநில மக்களும் கலந்துதான் காணப்படுவர். ஏறக்குறைய பத்தாயிரம் தொழிலாளர்கள் இந்த பகுதியில் வசித்து வந்தனர். இந்த பக்கம் அரசு ஊழியர்கள், அதிகாரிகள் குடியிருப்பும்,அந்த பக்கம் தொழிலாளர்கள் குடியிருப்பும் இருந்தது. . இருந்தாலும் இவை அனைத்துமே வனத்துறைக்கு உட்பட்டது. அணைக்கட்டு வேலை முடிந்தவுடன் மின்வாரியத்துக்கு தேவையான இடங்களை மட்டும் வைத்துக்கொண்டு மற்ற பகுதிகளை வனத்துறைக்கு மீண்டும் ஒப்படைத்து விட வேண்டும்.
வழக்கம்போல நாயர் கடையில் கூட்டம் நிரம்பி வழிந்த்து. உண்ணி பிரமாண்டமான மரக்கடை ஒன்றை தோளில் சுமந்து கடை வாசலில் நின்றான். கல்லாவில் இருந்த நாயரின் மூத்த பெண் “அடா உண்ணி” இந்த கட்டையை கொண்டு போய் பின்னாடி போடு பாரஸ்ட்காரங்க பார்த்தா நமக்குத்தான் தொல்லை. மலையாளத்தில் சத்தம் போட்டாள். உண்ணி எதுவும் பேசாமல் கட்டையை பின்புறம் கொண்டு போய் போட்டவன் தோளில் இருந்த துண்டால் முகத்தை துடைத்துக்கொண்டு தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டான். அதற்குள் நாயரின் இரண்டாவது பெண் ஒரு தட்டில் நான்கைந்து போண்டாவையும் டீயையும் கையில் கொண்டு வந்து கொடுத்து விட்டு கட்டையை பிளந்து போட்டுடு உண்ணி, சொல்லி விட்டு சென்றாள். இவனும் சரி என்று தலையாட்டினான். யாருமில்லாத அநாதையாக வந்தவன் இவர் கடை பக்கமாக ஒதுங்க நாயர் இவனை தன் மகன் போல பார்த்துக்கொண்டார். பீமனைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம், ஆனால் உண்மையில் எப்படி இருப்பான் என்று நமக்கு தெரியாது. ஆனால் உண்ணியை பார்க்கும்போது இவனை போல பீமன் இருக்கலாம் என்று தோன்றும் தோற்றம் கொண்டவன். மீசையை முறுக்கி விட்டிருப்பான்.ஒரு விதத்தில் நாயர் குடும்பத்திற்கு பாதுகாவலன் என்றும் சொல்லலாம். நாயரின் மூன்று பெண்களுக்கும் இவன் மூத்த சகோதரன் போல இருந்தான்.
நல்ல மழை பெய்து கொண்டிருந்தது, ஒரு மின் வாரிய அதிகாரி தன் ஜீப்பை நிறுத்தி விட்டு டிரைவருடன் கடையில் டீ சாப்பிட்டு கொண்டிருந்த பொழுது உண்ணி பெரிய மரக்கட்டையை சுமந்து கடைக்கு பின்புறம் கொண்டு போவதை பார்த்தவர், ஏன் நாயரே இந்த உண்ணியை என் கூட அனுப்புங்க, “டெலிபோன் லைன்ல” மரம் விழுந்துடுச்சு, வெட்டி எடுக்கணும் என்றார். நாயர் சிறிது யோசித்தவர் பின் அட உண்ணி என்றழைத்தார். உண்ணி உள்ளே வந்தான். ஏண்டா உண்ணி சாருக்கு ஏதோ வேலையாகணுமாம், போயிட்டு வர்றியா? மலையாளத்தில் கேட்க அவனும் தலையாட்டினான். “வெற்றி” என்னும் தேவதை தன்னை பார்க்க தொடங்கி விட்டாள் என்பதை அறியாமலே !
இவன் வேலை செய்யும் விதமும், வேகத்தையும் பார்த்த அதிகாரி, உண்ணி இந்த ஏரியாவுல டெலிபோன் லைன், கரண்ட் லைன் போற இடத்துல எல்லாம் செடி வெட்டறது, மரம் வெட்டறது, இப்படி எல்லாத்தையும் காண்ட்ராக்ட் எடுத்துக்கறியா? அவன் எதுவும் புரியாமல் தலையாட்ட, இவர் இவனை ஒரு சிறிய காண்ட்ராக்டராக உருவாக்கம் செய்து கொடுத்தார். இப்பொழுது அவன் சிறிய “காண்ட்ராக்டர்”. சாரே “எண்டையிடத்து பத்து ஆளுக்காரு உண்டு” ஈ ஆளுங்களுக்கு தின கூலி கொடுக்கானெங்கில் ஈ மர காண்ட்ராக்டில் எங்கன சாரே முடியும்? உடலை வளைத்து கும்பிடுவது போல கேட்ட உண்ணியை வியப்புடன் பார்த்த அதிகாரி என்ன செய்யலாம் உண்ணி அவனிடமே கேட்டார். அதை எதிர்பார்த்தவ்ன் போல் இருந்த உண்ணி சாரே “சிவில்” வொர்க் கொடு சாரே மக்களுக்கு புண்ணியமாயிருக்கும் என்று கும்பிட்டான்.
இப்பொழுது சிவில் வொர்க், அதாவது அங்கு குடியிருப்புகளை கட்டுவதற்கு சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள கட்டிட காண்ட்ராக்டர் ஆகி விட்டான்.
காலங்கள் ஓட ஆரம்பித்தன. இப்பொழுது உண்ணி பெரிய பெரிய காண்ட்ராக்டர் வேலைகளை எடுத்து செய்யும் அளவில் வந்து விட்டான். அதன் படி அவன் தோரணைகளையும் மாற்றி விட்டான். வெள்ளை வெளேர் சட்டை, வேட்டிக்கு மாறி விட்டான். தன்னை சுற்றி உதவியாளர்களை வைத்துக்கொண்டான். ஒரு அம்பாசிடர் கார் ஒன்று வாங்கிக்கொண்டான். அரசாங்க குடியிருப்பில் வாடகை அடிப்படையில் ஒரு வீட்டை ஏற்பாடு செய்து கொண்டான். நாயர் அவன் வீடு சென்று (இப்பொழுதெல்லாம் உண்ணி நாயர் கடைக்கு வருவதில்லை) உண்ணி உனக்கு ஊரில் ஒரு பெண் பார்த்துள்ளேன் ஏற்பாடு செய்து விடலாமா? சிறிது யோசித்தவன் சம்மதம் சொல்லி விட்டான்.
உண்ணியின் நட்பு வட்டாரம் பெரிதானது. இவனோடு பெரிய காண்ட்ராக்டர்கள், அரசு அதிகாரிகள் இவர்களின் தொடர்பை ஏற்படுத்தி கொண்டான். தினமும் அவர்களை திருப்தி படுத்த எல்லா வழிகளையும் கையாண்டான். இதனால் அவனை திருமணம் செய்து வந்த பெண் இவனோடு வாழ முடியாமல் நாயர் எவ்வளவு சொல்லியும் அவனை விட்டு போய் விட்டாள். “இவனும்” அதை பற்றி கவலைப்படவில்லை. நாளொரு பெண், குடி, போன்ற பழக்கங்கள் அவனை வந்து அணைத்து கொண்டது. அவனை பற்றி கவலைப்பட்ட ஆத்மா “நாயர்” மட்டுமே.
பல்லாயிரம் தொழிலாளர்கள் கொண்ட அந்த பகுதியில் சாராயக்கடை ஏலம் எடுக்க போட்டி ஏற்பட்டது. யாரோ தூண்டி விட இவன் ஆள்,படை, அம்பு போன்றவைகளுடன் கடைகளை ஏலம் எடுத்தான். இதனால் இவனுக்கு விரோதிகள் அதிகமாக ஆரம்பித்தனர். நாயர் எவ்வளவு கெஞ்சியும் இவன் சாராயக்கடை ஏலம் எடுப்பதை தடுக்க முடியவில்லை.
சாரயக்கடை வருமானம் அமோகமாக இருந்தது. தினமும் வசூலாகும் பணத்தை அவன் கட்டிலின் மேல் கொட்டி அதன் மீது படுத்து உருளுவான்.அடியாட்களை எப்போதும் அருகில் வைத்துக்கொண்டான். இவன் சாராய கடையையே பார்த்ததால் காண்ட்ராக்ட் வேலைகள் நின்றன. அடுத்தடுத்து அவனது இரு பெரிய காண்ட்ராக்டுகள் ரத்து செய்யப்பட்டன. அவனை வீழ்த்த நேரம் பார்த்துக்கொண்டிருந்த பலரில் சிலர் அவனது வேலைகளை கைப்பற்றிக்கொண்டனர். இதனால் இவன் சாராய வருமானத்தையே நம்ப வேண்டியிருந்தது.
இரண்டு வருடங்களில் சாராயம் ஏலம் எடுக்கும் முறைகள் மாற்றப்பட்டன. இவனை விட பெரிய ஆள் போட்டியிட, இவன் காணாமல் போனான். சாராயக்கடைகளும் இவன் கையை விட்டு போயின. தன் நிலை உணர்ந்தான். ஆனால் என்ன பயன்? உடல் நலிவடைய ஆரம்பித்தது. சுற்றியுள்ளவர்கள் காணாமல் போயினர். அரசு வீடு வாடகை பாக்கியில் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டான். நாயர் அங்கும் இங்கும் அலைந்து ஒரு சிமிண்ட் கூரை போட்ட வீட்டை ஏற்பாடு செய்து கொடுத்தார்.
அவனால் எழுந்து வெளியே வரமுடியாத அளவில் உடல் நிலை சீர் கெட்டது. நாயரும் அவர்கள் குடுமபமும் அவர்களால் முடிந்த அளவுக்கு அவனுக்கு உதவிகள் செய்தனர். பயனில்லாமல் போயிற்று.
அவன் உடல் புதைப்பதற்காக எடுத்து செல்ல வேண்டும். நாயரும் அவர் குடும்பம் மட்டுமே அவன் அருகில் நின்றது. இளைஞர்களாகிய நாங்கள் நாயருக்காக அவனை புதைப்பதற்கு எடுத்து செல்ல தயாரக நின்றோம்.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (7-Aug-18, 10:23 am)
பார்வை : 462

மேலே