எது இலக்கியம் யார் இலக்கியவாதி -----------------------------கலந்துரையாடல் ---விவாதக் களம்

- இலக்கியம் என்பது உண்மைக்கான தேடல் என்பது

. இலக்கியத்தின் பல வகைகளில் பிரச்சார எழுத்தும் ஒன்று. அதுவும் இலக்கியமே.

இலக்கியம் உண்மைக்கான தேடலே

பிரசாரமும் உண்மைக்கான தேடல்தான்.

பிரசாரம் என்பது என்ன ? நாம் அறிந்தவற்றை அல்லது உணர்ந்தவற்றை இன்னொருவரோடு – வாசகரோடோ, பார்வையாளரோடோ – பகிர்வதுதான்.

வெவ்வேறு வாசக நிலையில் இருப்பவர்களுக்கு வெவ்வேறு வகையிலான மொழி நடைதான் மனதின் ஆழத்துக்கு இட்டுச் செல்லும். ஒரு வகை வாசகரின் மனதைத் துளைத்துச் செல்லும் எழுத்து இன்னொரு வகை வாசகரின் மன மேற்பரப்பில் சலனம் கூட ஏற்படுத்தாமல் போகலாம். இது படைப்பாளி வசப்படுத்தி வைத்திருக்கும் எழுத்தின் தொழில் நுட்பமும், தனக்கு இலக்காக உள்ள வாசகர் பற்றிப் படைப்பாளிக்குள்ள புரிதலும் இணைந்து செயல்படும் விதத்தைப் பொறுத்தது.

இந்த இணைப்பு சரியாக செயல்படும்போது பிரசாரம் இலக்கியமாகிறது. பிரசார நோக்கம் வாசகரை வெருட்டாத, உறுத்தாததாக படைப்புக்குள் பொதிந்து இருக்கும்போது படைப்பு பிரசாரம் என்று அடையாளம் காணப்படாமல் கலைப்படைப்பாக மட்டுமே காணப்படுகிறது.

நல்ல இலக்கியம் என்பது மொழியைப் பயன்படுத்தி மனதின் ஆழத்திற்குள் செல்லும் பயணமாகும்.

தான் தேடிக் கண்டடைந்த உண்மைகளை இன்னொருவருடன் பகிர்ந்துகொள்வதும், அந்தப் பகிர்தல் மூலம் மேலும் உண்மைகளைத்தேடுவதும்தான் பிரசார எழுத்து.

மனிதனை உயர்த்த நேர்மையாக முயற்சிக்கும் எழுத்து மட்டுமே இலக்கியம். அப்படி முயற்சிப்பது போல பாவனை காட்டுவது அல்ல.

அந்த நேர்மையான முயற்சியை சொந்த வாழ்க்கையிலும் சேர்த்து பின்பற்றுகிறவர்கள்தான் மெய்யான இலக்கியவாதிகள்.

இந்த அளவுகோலை வைத்து எல்லா படைப்பாளிகளும் – மதிப்பிடப்பட்டால் யார் தேறுவார்கள், யார் தேறமாட்டார்கள் என்பதைத்தான் வாசகர்கள் சிந்திக்க வேண்டும். இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒரு நாள் இந்த அடிப்படையில்தான் படைப்பாளிகள் மதிப்பிடப்படுவார்கள்.



ஞாநி

எழுதியவர் : (8-Aug-18, 4:31 pm)
பார்வை : 43

மேலே