செய்யும் தொழிலே தெய்வம்

தொழிலில் உயர இன்னொரு சூத்திரம் சொல்கிறேன். கர்வம் தவறு.. தன்னம்பிக்கை தவறல்ல. எந்தத் தொழிலிலும் சுயமரியாதை அவசியம். இதற்கு ஓர் அடையாளம் நாதஸ்வர சக்கரவர்த்தி, டி.என். ராஜரத்தினம்பிள்ளை. ஒரு காலத்தில், கலையின் சிகரங்களாகத் திகழ்ந்தவர்களையும் கவுரவமாக நடத்த சமூகம் தயாராகவில்லை. அந்த நேரத்தில் கிழக்கைக் கிழித்த கதிரவனாகக் கிளம்பியவர் அவர். சட்டை போடக்கூடாது.. செருப்பணியக் கூடாது.. எத்தனை மணிநேரம் என்றாலும், நின்று கொண்டுதான் வாசிக்க வேண்டும் என்கிற இறுக்கங்களை எல்லாம் உடைத்தெறிந்தவர் அந்த இசை அரசர். அவரது தன்னம்பிக்கையும், சுயமரியாதை உணர்வும் அவரது தொழிலுக்கே எழில் கூட்டியது. மங்கல இசை மன்னராகி, புதிய மரபுகளை மரியாதைகளைத் தமக்கும் தமது தொழிலுக்கும் கூட்டியவர் அவர்.

தொழில் கவுரவம் பற்றி இன்னொன்று சொல்கிறேன். என் தந்தையார் எழுதியகதை. கதைத் தலைப்பு " தமிழன் என்று சொல்லடா '.

பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்திய கதை. திருநெல்வேலி ஜில்லா கலெக்டர் மற்றும் நீதிபதியாக இருந்த ஸ்டோன் துரையின் கோர்ட் குமாஸ்தா குமர குருபரன்பிள்ளை. அவரிடம் தமிழ் சொல்லித் தரும்படி கேட்கிறார் ஸ்டோன் துரை. தயக்கத்துடன் தமிழ் ஆசிரியர் பணியை ஏற்கிறார் பிள்ளை. ஸ்டோன் துரைக்கு "கல்லாடன்' என்று நயம்பட பெயர் மாற்றுகிறார்! துரையும் ஆர்வத்துடனும் மரியாதையுடனும் பிள்ளைவாளிடம் பாடம் படிக்கிறார்.

ஒருநாள் பாடம் நடக்கும் போது, துரையைப் பார்க்க வந்த சாம்பசிவம் என்கிற டெபுடி கலெக்டர் துரைக்கு எதிரில் நிற்க நேருகிறது.. அதேசமயம் துரையின் தமிழாசிரியர் என்ற அந்தஸ்து காரணமாக, குமரகுருபரன் பிள்ளை நாற்காலியில் துரைக்குச் சமமாக உட்கார்ந்திருக்கிறார். டெபுடி கலெக்டர் இதைப் பார்த்து மனம் பொருமுகிறார். ஒரு குமாஸ்தா கலெக்டருக்குச் சமமாக உட்கார்ந்திருக்க, டெபுடி கலெக்டராகிய தான் நிற்க வேண்டிவந்ததை அவரால் தாங்க முடியவில்லை.

பின்னொரு நாளில், ஸ்டோன் துரையிடம் நைச்சியமாகப் பேசி, ""உங்களுக்குக் கீழே வேலை பார்க்கும் சாதாரண குமாஸ்தாவைச் சமமாக உட்கார வைப்பதா? பாடம் சொல்லிக் கொடுப்பதானாலும் குமரகுருபரன் பிள்ளை பணிவுடன் நின்று கொண்டே சொல்லித்தரட்டுமே,'' என்ற மானங்கெட்ட யோசனையை தமிழர்க்கே உரிய இனப்பற்றுடன் வத்தி வைத்து விடுகிறார். கலெக்டர் மனம் திரிகிறது. மறுநாள் வகுப்பு தொடங்கு முன் பிள்ளைக்கான நாற்காலி எடுக்கப்பட்டு விடுகிறது. நின்று கொண்டு பாடம் சொல்லித் தரும்படி உத்தரவாகிறது. கொதித்துப் போன குமரகுருபரன் பிள்ளை ஆசிரியரின் கவுரவத்திற்கே இழுக்கு.. தமிழுக்கே அவமானம் என்ற மான உணர்வுடன் வெளியேறி விடுகிறார்.

கலெக்டரால் துன்பம் வரும் என்று கவலைப்பட்டு தற்காத்துக் கொள்ளாமல், தமிழாசிரியர் என்கிற தொழிலின் தன்மானம் காத்து தலைநிமிர்ந்து வெளியே போகிறார்.

நடந்ததை அறிந்த திருவாட்டி ஸ்டோன், தன் கணவரைக் கண்டிக்கிறார். ' ""உங்கள் செயலால் ஆங்கிலேயர் பண்பாட்டையே உலகம் குறைவாக நினைக்கும். ஆசிரியரை அவரது சுயமரியாதையை மதிக்கத் தெரியாதவர்கள் என்று பழிக்கும்,'' என இடித்துரைக்கிறார். கலெக்டர் ஸ்டோன் துரை கவுரவம் பாராது குமரகுருபரன் பிள்ளையிடம் மன்னிப்பு கேட்டு அவருக்குரிய மரியாதை அளித்து படிக்கத் தொடங்குகிறார். "தமிழன் என்று சொல்லடா' என்கிற அருமையான இக்கதை என் தந்தை அமரர் டி.என். சுகி. சுப்பிரமணியன் எழுதியது!

பணம் கிடைக்கிறது என்கிற ஒரே காரணத்திற்காகத் தரம் தாழ்ந்து சிரம் தாழ்ந்து போவது சரியான வாழ்க்கையன்று. மகாகவி பாரதி, வாழ்க்கையில், தன் கவிதா கம்பீரத்தைக் கைவிட்டதில்லையே! யாரேனும் பொருளுதவி செய்தால் கூட, அவர்கள் கை மேலிருந்து கொடுக்க இவர் கீழிருந்து பெறுவதற்குச் சம்மதிக்க மாட்டாராம். ""நீர் உம் கையில் வைத்திரும். நான் எடுத்துக் கொள்கிறேன்,'' என்று தன் கை கீழே போகாதபடி நடந்து கொள்வார் என்கிறார்கள்.

தமிழ்நாட்டில் அழிந்து வந்த கலைகளில் ஒன்று வில்லுப் பாட்டு. அதை மீட்டெடுத்த பெருமை கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனுக்கு உண்டு. தொலைந்து போன குழந்தையை அவர் மீட்டார். ஆனால், அவளை வளர்த்து ஆளாக்கி, கல்வி சொல்லி அழகு செய்து மணமுடித்து வாழவைத்த பெருமை வில்லிசை வேந்தர் கவிஞர் சுப்பு ஆறுமுகத்தைச் சேரும். அபாரமான சமயோசித அறிவு.. கொட்டும் நகைச்சுவை. குறும்பு தவழும் பேச்சு.. நல்ல இசை ஞானம்.. இந்த நூற்றாண்டின் பெருந்தமிழ்ச் சொத்து அவர்.

ஒருமுறை காஞ்சி மடத்தின் ஆகம சில்ப சதஸ்ஸில், அவரது வில்லிசை ஏற்பாடாகி இருந்தது. அப்போது நூறாண்டு வாழ்ந்த ஞான புருஷர், காஞ்சி மகா சுவாமிகள் கலவையில் தங்கி இருந்தார். கவிஞர் சுப்பு ஆறுமுகம் கலவை சென்று, மகா பெரியவரை வணங்கி, ஆசி பெற்று, ' ஸ்வாமிகள் வந்து என் வில்லுப்பாட்டைக் கேட்டு ஆசீர்வதித்தால் புண்ணியம்" என்று குழந்தைபோல குழைந்து வேண்டினார். அந்தக் கருணாமூர்த்தி சிரித்தபடி, ""நீ.. போய் தயாராகு.. கதைக்குக் கண்டிப்பா வர்றேன்,'' என்றார். வில்லிசை வேந்தர் மேடையில் அமர்ந்து பெரியவருக்காகக் காத்திருந்தார்.

ஏற்பாட்டாளர்கள் ஆரம்பிக்கும்படி அவசரப்படுத்தியதும், ""மகா பெரியவர் உறுதியாக வருவதாக வாக்களித்தார்கள்.. காத்திருப்போமே,'' என்றார். 'கலவையிலிருந்து அவர் வருவது சாத்தியமில்லை. உங்கள் மனஆறுதலுக்காக சொல்லி இருப்பார். கால விரயம் வேண்டாம்,'' என்று வற்புறுத்தவும், வேறு வழியின்றிவில்லைக் காலில் கட்டிக் கொண்டு "தந்தனத்தோம் என்று சொல்லியே' வணக்கம் பாடத் தொடங்கினார்.

சிறிது நேரத்தில் "ஜயஜய சங்கர' என்கிற அறவொலி முழங்க மகா பெரியவர் சதஸ்ஸூக்கு எழுந்தருளி விட்டார். உயர்ந்த பீடத்தில் உட்கார்ந்து ஆசி வழங்கினார். எல்லாரும் எழுந்து நின்று வணங்கும் போது, சுப்பு ஆறுமுகம் இருந்த இடத்தில் இருந்தபடி சுவாமிகளை வணங்கி இருக்கிறார். மேடையில் இருந்து எழுந்துபோய் நமஸ்கரிக்கவில்லை.

பிறகு தமக்கே உரிய நுண்ணறிவுடன், சுப்பு ஆறுமுகம், ""உயரமா இருக்கிற ராஜகோபுரத்தை அண்ணாந்து பாக்கிறோம். அது உயரத்துக்கு நாம கிட்ட போயா கும்பிட முடியும். இருந்த இடத்திலேந்து கன்னத்தில போட்டுக்கிறோம் இல்லையா.. அப்படி அந்த ராஜகோபுரத்தை (மகா பெரியவரை) இங்கே இருந்தே கும்பிடறேன்,'' என்று சொல்லி கதையை நடத்தி முடித்திருக்கிறார்.

இருந்தாலும் போட்டுக் கொடுக்கும் புண்ணியவான்கள் பிற்பாடு மகா பெரியவரிடம், ""சுப்பு ஆறுமுகம் இருந்த இடத்தில் இருந்தே கும்பிட்டிருக்கப்பிடாது.. பெரியவாளை எழுந்து வந்து நமஸ்காரம் பண்ணியிருக்க வேண்டாமோ,'' என்று தங்கள் குருபக்தியை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். அந்த மகானோ, ""உனக்கு வில்லுப்பாட்டோட லட்சணம் தெரியுமோ. கால்லவில்ல கட்டி பாட ஆரம்பிச்சுட்டா, மங்களம் பாடிட்டுதான் வில்லையே காலைவிட்டு கழட்டணும். நடுவில் கழட்டக் கூடாது.. எந்திரிக்கக் கூடாது. அந்தக் கலையோட லட்சணம் அது. அந்தத் தொழிலுக்கான தர்மம் அது. அதுமட்டுமில்ல. அது வியாசபீடம். பீடத்திலேந்து கதை ஆரம்பிச்சுட்டா, அதிலேந்து எழுந்து மத்தவாளை அவா நமஸ்காரம் பண்ணக் கூடாதுங்கறது மரபு.... அவர் தன்வித்தைக்கான (தொழில்) தர்மத்தை சரியாத்தான் அனுஷ்டிச்சார்.. நல்ல மனுஷனை ஏன் குறை சொல்றே,'' என்று கண்டித்திருக்கிறார்.

தனிமனித விருப்பு வெறுப்புகளைத் தாண்டி அவரவரது தொழில் தர்மம் மேலானது.. அனுஷ்டானத்திற்கு உரியது என்பதை மகா பெரியவர் உணர்த்திய அருமையான நிகழ்வு இது!


சுகி. சிவம்

எழுதியவர் : (9-Aug-18, 9:25 pm)
பார்வை : 5215

மேலே