கல்லில் தொடங்கி காசு என முடியும் பாக்கள்

'கல்'லில் தொடங்கி 'காசு' என முடியும் பாக்கள்!!!

கல்பதித்த கைவளையும் கம்மலுடன் கால்கொலுசும்
மெல்லிடை யைத்தழுவும் மேகலையும் - புல்லாக்கும்
தைப்பிறந்தால் வாங்கித் தருவேனென் றேனானால்
கைப்பையி லில்லையே காசு.

கல்லா லடித்துக் கனிவிக்க லாகுமோ?
சொல்லா லடித்தால் சுகம்வருமோ? - நல்லோய்!
புரியாயோ? வீணே புகைந்து வெடித்துக்
கரியாகும் பட்டாசால் காசு.

கல்வைத்துக் காயைக் கனிந்திட வைத்திங்கே
நல்லவரும் தானிழப்பார் நாணயத்தை! - பொல்லா
உலகமிது! எவ்வழியி லுய்யலா மென்றே
கலப்படஞ்செய் தள்ளுவார் காசு.

கல்லடுக்கிக் கட்டிய கட்டிடம் மேலெழும்பிப்
பல்லடுக்கி லீர்த்திடும் பார்ப்போரை - யெல்லாம்
அடடா! வெனவியந் தங்கேயே நிற்பார்
கடவுளடா இல்லார்க்குக் காசு.

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (15-Aug-18, 1:22 pm)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 34

மேலே