‘அனைவராலும் கவிதை எழுத முடியும்’

கோவை:
“கவிஞர்களால் மட்டுமே கவிதை எழுத முடியும் என்பதில்லை; அனைவராலும் சிறந்த கவிதை எழுத முடியும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் படிக்கும் காலத்தில் கவிதை எழுதும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும்,” என்று கவிஞர் புவியரசு கூறினார்.

நிர்மலா மகளிர் கல்லூரியில் ‘பொங்கல் கவியரங்கம்’ நடந்தது. கவிஞர்கள் சிதம்பரநாதன், கவிதாசன், திலகபாமா, உமா மகேஸ்வரி ஆகியோர் பங்கேற்று கவிதை படித்தனர்; கவிதையின் இன்றைய போக்கு பற்றி பேசினர். கவியரங்கத்துக்கு தலைமை தாங்கிய கவிஞர் புவியரசு பேசியதாவது:

கவிதை என்பது கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டது. அவை பழக்கத்தாலும் தொடர்பாலும், புழக்கத்தாலும் தானாக வருபவை. கவிஞர்களால் மட்டுமே கவிதை எழுத முடியும் என்பது தவறு. அனைவராலும் கவிதை எழுத முடியும். இதற்காகவே ‘வானம்பாடி கவிஞர் இயக்கம்’ துவங்கப்பட்டது. கவிதையை ஜனநாயகப்படுத்த தெருவுக்கு வந்தோம். அதன் பின் ஆயிரம் பேர் கவிதை எழுதத் துவங்கினர்.

ஒரு கவிதையை படிக்கும் போது, ‘இதை நாம் எழுதி இருக்கலாமே’ என தோன்றும். அப்படி தோன்றினால், எழுதியவர் தாக்கம் ஏற்படுத்தியதாக அர்த்தம். அதன் பின் அதே போல் நாமும் கவிதை எழுத முயற்சிக்கிறோம். ‘உலகம் ஒரு கிராமமாச்சு; வீடு மட்டும் தூரமாச்சு’ என ஒரு சிறுவன் கவிதை எழுதினான். மற்றொரு சிறுவன், ‘இரவில் வாங்கினோம்; இன்னும் விடியவில்லை’ என எழுதினான்.

இந்த கவிதைகளை எழுதியவர்கள் வயது குறைந்தவர்கள். இன்று கவிஞர்கள் புறக்கணிக்கப்படும் அளவுக்கு பிறர் சிறப்பாக கவிதை எழுதுகின்றனர். பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர் சிறந்த கவிதைகளை எழுத வேண்டும். அதற்கான ஆர்வத்தை படிக்கும் வயதிலேயே வளர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு, கவிஞர் புவியரசு பேசினார். நிர்மலா கல்லூரி முதல்வர் சவரியம்மாள், தமிழ்த்துறை தலைவர் அருள்சீலி மற்றும் ஏராளமான மாணவியர் பங்கேற்றனர்.

---------------
கல்விமலர்

எழுதியவர் : (15-Aug-18, 3:40 pm)
பார்வை : 63

மேலே