அன்பால் உலகை வென்ற நவீன இந்தியாவின் சிற்பி வாஜ்பாய்க்கு பிரியாவிடை

டெல்லி:

மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் இறுதி சடங்கு விஜய்காட் பகுதியில் உள்ள ராஷ்டிரிய ஸ்மிருதி ஸ்தலமில் நடைபெற்றது

. இதையடுத்து பாஜக தலைமை அலுவலகத்தில் இருந்து மதியம் 2 மணியளவில் வாஜ்பாய் உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.

உடல்நலக்குறைவால் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நேற்று மாலை காலமானார். இரவில் டெல்லியிலுள்ள அவர் இல்லத்திற்கு வாஜ்பாய் உடல் கொண்டு செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர் ஜெயக்குமார், திமுக சார்பில் அக்கட்சி செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், ராஜ்யசபா எம்.பி.கள், கனிமொழி, திருச்சி சிவா, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராரஜன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

இதன்பிறகு, வாஜ்பாய் உடல் பாஜக அலுவலகத்திற்கு, காலை 9 மணிக்கு கொண்டு செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் அங்கு அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து, ஆயிரக்கணக்கான மக்கள் வரிசையாக சென்று வாஜ்பாய்க்கு தங்கள் இதய பூர்வ அஞ்சலியை செலுத்தினர்.

பின்னர் மதியம் 2 மணிக்கு, தேசிய கொடி போர்த்தப்பட்ட வாஜ்பாய் உடல், அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில், பாஜக அலுவலகத்திலிருந்து ஊர்வலமாக யமுனை நதி தீரத்தில் அமைந்துள்ள, ராஜ்காட்-விஜய்காட் பகுதிக்கு கிளம்பியது. எந்த கட்சிக்காக இடையறாது உழைத்தாரோ அந்த கட்சி அலுவலகத்தில் இருந்து பிரியாவிடை பெற்றார் வாஜ்பாய்.

மாலை 4 மணியளவில், விஜய்காட்-ராஜ்காட் பகுதியில் பெரிய தலைவர்கள் இறுதி சடங்கு செய்ய உருவாக்கப்பட்டுள்ள ராஷ்டிரிய ஸ்மிருதி ஸ்தலம் பகுதிக்கு வாஜ்பாய் உடல் வந்து சேர்ந்தது.

வாஜ்பாய்க்கு இறுதி சடங்குகள் ஆரம்பித்தன. இதன்பிறகு, வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது வாஜ்பாய் உடலுக்கு பூட்டான் மன்னர் ஜிக்மே, ஆப்கன் முன்னாள் அதிபர் ஹமீத் கர்சாய், வங்கதேச அமைச்சர் அபுல் ஹாசன் மகமூத் அலி, இலங்கை அமைச்சர் லட்சுமண் கிரியல்லா ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மன்மோகன் சிங், சோனியா காந்தி பங்கேற்றுள்ளனர். முன்னதாக, 4 கிமீ தூர இறுதி ஊர்வலத்தில் பிரதமர் மோடி நடந்தே சென்றார். இதையடுத்து, முப்படை வீரர்கள் வாஜ்பாய்க்கு இறுதி மரியாதை செலுத்தியதையடுத்து, வாஜ்பாய் பேத்தி உறவான நிகாரிகாவிடம் தேசிய கொடியை ஒப்படைத்தனர். இதன்பிறகு குடும்பத்தினர், தங்கள் பாரம்பரியபடி வேத மந்திரங்கள் முழங்க இறுதி சடங்குகளை மேற்கொண்டனர்.

இதையடுத்து தகன மேடையில் வாஜ்பாய் உடல் வைக்கப்பட்டு உறவினர்களால் எரியூட்டப்பட்டது. பசுஞ்சாண வரட்டிகள், சந்தன கட்டைகள் கொண்டு, வாஜ்பாய் உடல் எரியூட்டப்பட்டது. அப்போது 21 துப்பாக்கி குண்டுகள் முழங்கி அவருக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

அனைத்து தலைவர்களும் அப்போது எழுந்து நின்று, அன்பால் உலகை வென்ற நவீன இந்தியாவின் சிற்பி வாஜ்பாய்க்கு பிரியாவிடை கொடுத்தனர்.


வீர குமார்

Friday, August 17, 2018, 17:08 [IST]


.

எழுதியவர் : (17-Aug-18, 5:34 pm)
பார்வை : 67

மேலே