முல்லைப்பாட்டில் உவமைகள்

மேகம் கடல் நீரைப் பருகி மேலெழுந்து சென்றதை, வாமனனாக (குள்ளனாக) இருந்த திருமால் உயர்ந்து மேலெழுந்து சென்றதற்கு ஒப்பிட்டுப் புலவர் கீழ்வரும் அடிகளில் குறிப்பிடுகிறார்.

நனந்தலை உலகம் வளைஇ, நேமியொடு
வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை
நீர் செல, நிமிர்ந்த மாஅல் போல,
பாடுஇமிழ் பனிக்கடல் பருகி, வலன் ஏர்பு,
கோடு கொண்டு எழுந்த கொடுஞ்செலவு எழிலி (1 - 5)

பொருள்: சக்கரம், வலம்புரிச் சங்கு ஆகியவற்றைத் தன் பெரிய கைகளில் வைத்துக்கொண்டு, திருமகளை மார்பில் தாங்கும் திருமால், மாபலிச் சக்கரவர்த்தி தாரை வார்த்த நீர் கையில்பட்ட அளவிலே நிமிர்ந்து எழுந்த தோற்றத்தைப் போல், அகன்ற இடத்தையுடைய இந்த உலகத்தை வளைத்து, ஒலி முழங்கும் குளிர்ந்த கடல் நீரைப் பருகி, மேகங்கள் வலிமையுடன் உயர்ந்து எழுந்து, மலைகளை நோக்கி விரைந்து சென்றன

தலைவியின் பணிப்பெண்களும் தோழியரும் இறைவனை வணங்கி, விரிச்சி கேட்பதற்காக மலர்களை எடுத்துச் சென்றனர். அவர்கள் எடுத்துச் சென்ற மலர்களைச் சுற்றி வண்டுகள் ஒலித்தன. அந்த வண்டுகளின் ஒலி, யாழின் இன்னிசைபோல் இருந்தது என்று புலவர் குறிப்பிடுகிறார்.

யாழ்இசை இனவண்டு ஆர்ப்ப (8)

விரிச்சி கேட்ட பெருமுது பெண்டிர், தாம் கேட்ட நற்செதியைத் தலைவியிடம் கூறி, அவளைத் தேற்ற முயற்சி செய்கிறார்கள். நற்செய்தி கேள்விப்பட்டாலும், தலைவனைப் பிரிந்திருக்கும் தலைவியின் துயரம் குறையவில்லை. உள்ளத்தில் உள்ள துயரத்தைத் தலைவி மறைக்க முயற்சி செய்கிறாள். அதனால், அவள் துயரம் கண்ணீர்த்துளிகளாக வெளிப்படுகிறது. பிரிவினால் ஏற்பட்ட துயரத்தைத் தாங்க முடியாமல் தலைவி தேம்பித் தேம்பி அழுது புலம்பினாள் என்று புலவர் குறிப்பிட்டிருந்தால் அது முல்லைத்திணையின் உரிப்பொருளுக்கு மாறாக நெய்தல் திணையின் உரிப்பொருளாகிய இரங்கலாக அமைந்து விடும். அதனால், தலைவியின் கண்களிலிருந்து வெளிப்படும் கண்ணீர்த்துளிகள் ஒவ்வொன்றாக முத்துப் போல் வெளிப்படுகின்றன என்று புலவர் குறிப்பிடுவது, தலைவி தன் துயரத்தைப் பொறுத்துகொள்ள முயற்சி செய்துகொண்டு முல்லைத்திணைக்குரிய கற்பொழுக்கமாகிய இருத்தலை மேற்கொள்கிறாள் என்பதைக் குறிக்கிறது. தலைவியின் கண்களை மலர்களுக்கும் அவள் கண்ணீர்த் துளிகளுக்கு முத்தையும் புலவர் ஒப்பிடுகிறர்.

பூப்போல் உண்கண் புலம்புமுத்து உறைப்ப (23)

தவவேடமுடைய அந்தணர், தம் காவி நிறம் தோய்ந்த ஆடையை, முக்கோலை நட்டு அதன்மேல் தொங்கவிட்டிருப்பது போல, வீரர்கள் தாம செய்கின்ற நல்ல போரில் புறமுதுகிட்டு ஓடாமல் இருப்பதற்குக் காரணமான வலிய வில்லை ஊன்றி அதன் மேல் அம்புக்கூட்டை தொங்கவிட்டனர். இங்கு, வீரர்கள் வில்லை நட்டு அவற்றில் அம்புறாத்தூணிகளை தொங்கவிட்டிருப்பது அந்தணர்கள் தம் காவிநிறமான உடையை தங்களின் முக்கோலில் தொங்கவிட்டிருப்பதற்கு ஒப்பிடப்பட்டிருக்கிறது.

கல்தோய்த்து உடுத்த படிவப் பார்ப்பான்
முக்கோல் அசைநிலை கடுப்ப, நல்போர்
ஓடா வல்வில் தூணி நாற்றி (37-39)

இரவு நேரத்தில், பாசறையைக் காவலாளர்கள் காவல் புரிகிறார்கள். அவர்கள், தங்கள் தலைகளில் வெண்ணிறமான துணிகளாலான தலைப்பாகை அணிந்துகொண்டு, தங்கள் உடலையும் போர்த்திக்கொண்டு, தூக்கக் கலக்கத்தில் தள்ளாடுகின்றனர். இந்தக் காட்சியைப் புலவர், காட்டு மல்லிகையின் வெண்ணிறமான மலர்கள் புதர்களின்மேல் மலர்ந்து, அப்புதர்கள் மழைத்துளிகளுடன் வரும் காற்றில் அசைந்தாடும் காட்சிக்கு ஒப்பிடுகிறார்.

அதிரல் பூத்த ஆடுகொடிப் படாஅர்
சிதர்வரல் அசைவளிக்கு அசைவந் தாங்கு,
துகில்முடித்துப் போர்த்த தூங்கல் ஓங்குநடைப்
பெருமூ தாளர் ஏமம் சூழ (51 - 54)

போரில், ஒருயானையின் வெட்டப்பட்ட தும்பிக்கை துடிப்பதைப் பாம்பு துடிப்பதற்குப் புலவர் ஒப்பிடுகிறார்.

வேழத்துப் பாம்பு பதைப்பன்ன பரூஉக்கை துமிய (69-70)

தலைவன் வராததால் துயருற்று வருந்திய தலைவியை, அவள் நெஞ்சமானது, ‘ஆற்றியிரு’ என்று சொல்லிக் கொண்டிருந்தது. ஆனால், தலைவியோ துயரத்தை மறைக்க முடியாமல் வருத்தத்தில் இருந்தாள். நீண்ட நேரம் சிந்தித்தாள். பின் தன்னைத் தேற்றிக் கொண்டாள்; கழன்று விழுகின்ற வளையல்களைத் திருத்தமுற, கழறாமல் அணிந்து கொண்டாள்; அறிவு மயங்கியும், அறிவு மயக்கத்தால் பெருமூச்செறிந்தும், நடுங்கிக்கொண்டிருந்தாள். அவள் நடுங்கியதை அம்பு தைத்த மயிலின் நடுக்கத்திற்குப் புலவர் ஒப்பிடுகிறார்.

ஏஉறு மஞ்ஞையின் நடுங்கி (84)

போரில் வெற்றிபெற்று, மன்னன் தன் மனைவியைக் காணத் திரும்பிவருகிறான். அவன் வரும் வழியில், முல்லைநிலத்திலுள்ள மலர்கள் பூத்திருக்கின்றன. அந்த மலர்கள் மலர்ந்திருப்பதை, அந்த மலர்களின் நிறங்களுக்கு ஏற்ப, புலவர் மிக அழகாக அவற்றைச் சித்திரிக்கிறார். கருநீலநிறமாகக் காயா மலர்கள் மலர்ந்திருப்பதை பெண்கள் கண்களுக்கு இடும் மைபோல் இருப்பதற்கும், கொன்றைமலர்கள் பூத்திருப்பதைப் பொன்னாலான மலர்கள்போல் இருப்பதற்கும், வெண்காந்தள் மலர்கள் வெண்மையாக மலர்ந்திருப்பதை அழகிய கைபோல் இருப்பதற்கும், செங்காந்தள் மலர்கள் சிவப்பாக மலர்ந்திருப்பதை குருதிபோல் இருப்பதற்கும் புலவர் ஒப்பிடுகிறார்.

செறிஇலைக் காயா அஞ்சனம் மலர
முறிஇணர்க் கொன்றை நன்பொன் கால
கோடல் குவிமுகை அங்கை அவிழ
தோடுஆர் தோன்றி குருதி பூப்ப (94 - 97)

இச்சிறிய பாடலில் இத்துணை அழகிய உவமைகளைப் புலவர் பயன்படுத்தியிருப்பது பாரட்டுவதற்கும் படித்து மகிழ்வதற்கும் உரியது.


முனைவர். பிரபாகரன்

எழுதியவர் : (17-Aug-18, 6:08 pm)
பார்வை : 84

சிறந்த கட்டுரைகள்

மேலே