விடியும் வரையில்

விடியும் வரையில் . . . . .

இரவு என்பதில்
நிலா , விண்மீன்கள்
கருமை, நிசப்தம் என
இவைகள் மட்டுமே அடங்குவதில்லை

பகலெல்லாம் உழைத்து வியர்த்த உடலை
உறக்கத்தில் காய போடும் மனிதர்கள்

ஏக்கத்தோடு இருந்த இன்பத்தை
வியர்வையோடு பரிமாறி கொள்ளும் தம்பதிகள்

கொசுக்களோடு மல்லுகட்டி
தூக்கத்தை தொலைக்கும் ஏழைகள்

தொலைபேசி உரையாடலிலும்
குருஞ்செயதி பரிமாற்றத்திலும்
உறக்கத்தை தொலைக்கும் காதலர்கள்

தூக்கத்தை விற்று
காசு வாங்கும்
இரவு காவலாளிகள்

வறுமை சூட்டை தணிக்க
மிதிவண்டியில் சுட சுட
தேனீர் விற்கும் மனிதர்கள்

இரண்டாம் ஆட்டம்
திரைப்படம் முடித்து
கூடு திரும்பும் ரசிகர்கள்

பிறவி சாபம் என்றே நொந்து
காமத்தையும் வலியுடன் பகிரும்
விலை மாந்தர்கள்

அரை தூக்கத்தில்
அலைபாயும் வாகனத்தோடு
தூக்கத்தையும் விரட்டும் ஓட்டுனர்கள்

முகம் தெரியா மனிதர்களுடன்
டார்கெட்டுக்காய் பேசி தீர்க்கும்
கால் சென்டர் பணியாளர்கள்

அதிகம் சேர்த்ததாலேயே
தூக்கத்தை தொலைத்த
நோயாளிகளும் செல்வந்தர்களும்

இது தான் சமயம் என்று
வேலையை கச்சிதமாய் செய்யும்
திருட்டு மானிடர்கள்

ராஜாவாகவோ கோடீஸ்வரராகவோ
தாங்கள் மாறுவதை
கனவில் கண்டு வியக்கும்
பிச்சை காரர்கள்

இரவு பகல் அறியாது
புன்னகையோடு உரையாடியபடியும்
அழுத படியும் வாழும்
மனநல நோயாளிகள்

பயிர்களை வளர்க்க
ராந்தல் வெளிச்சத்துடனோ
டார்ச்லைட் வெளிச்சத்துடனோ
தண்ணீர் பாய்ச்சும் விவசாயிகள்

கனவில் மட்டுமே வந்து போகும்
கடவுள்களும் முன்னோர்களும்

என பல யதார்த்தங்களையும் சுமந்தபடி
தினம் தினம் தவறாமல்
தவம் இருக்கத்தான் செய்கிறது
இரவு . . . .

விடியும் வரையில் .......

எழுதியவர் : ந.சத்யா (20-Aug-18, 12:58 pm)
சேர்த்தது : சத்யா
Tanglish : vidiyum varaiyil
பார்வை : 135

மேலே