தாயே நீயே துணை சென்னை காளிகாம்பாள் அம்மன் அற்புதங்கள் தலங்கள்

அம்மாவுக்கு இணையான அன்பும் ஆதரவும் தருபவர்களைச் சொல்லவே முடியாதுதானே. ‘என்னதான் இருந்தாலும் என் அம்மா மாதிரி வருமா?’ என்று சொல்லாதவர்களே இல்லை. எல்லாத் தருணங்களிலும் அம்மாவை நினைத்து, அம்மாவைச் சொல்லி, அம்மாவைப் பேசி, அம்மாவின் பெருமைகளை எண்ணத்தால் அசைபோட்டுக் கொண்டிருக்கிறவர்கள்தானே நாம்!அம்மா என்பவள் எப்போதுமே, எல்லோருக்குமே, எல்லா தருணங்களிலுமே அப்படித்தான்!

ஒரு வீட்டை நிர்வகிக்கிற பெரும் பொறுப்பு அவளுக்குத்தான் இருக்கிறது. அவளின்றி அங்கே ஓர் அணுவும் அசைவதே இல்லை. ஏனென்றால், அம்மா என்பவள் சக்தி மிக்கவள். அம்மா என்பவள் அம்மாவாக மட்டுமே இருப்பதில்லை. வீட்டைக் கவனிப்பதில் நிர்வாகியாகவும் நம்மைக் கவனிப்பதில் அன்னையாகவும் குடும்பத்தை மேம்படுத்துவதில் மிகப்பெரிய முதலாளியாகவும், நல்ல விஷயங்களை நமக்குள் விதைப்பதில் ஆசானாகவும் திகழ்கிற பல ரூபங்களைக் கொண்டவள்.

நதியைப் போல ஓடிக்கொண்டிருப்பவள் அன்னை. அதனால்தான் நதிகளுக்கெல்லாம் பெண்ணின் பெயரைச் சூட்டியிருக்கிறது நம் பாரத தேசம். எல்லாப் பெண்களிலும் அம்மாவைத் தேடுகிறது மனம். ஓர் ஆண் ததும்பத் ததும்ப அன்பு காட்டினால், அவரை அம்மாவாகவே, அன்னையாகவே., தாயாராகவே நினைத்துப் பூரித்துப் போகிறோம். அதனால்தான், அப்படிப்பட்டவர்களை தாயுமானவன் என்று போற்றுகிறோம்.

இங்கே... அம்மா என்பவள் எல்லாமாகவும் இருக்கிறாள். தாய் என்பவள் எல்லா வடிவங்களையும் கொண்டிருக்கிறாள். அவள் சக்தி மிக்கவள் என்பதால்தான் இவை அனைத்தும் சாத்தியமாகிறது. ஏனெனில், அவள் சக்தியின் பிரதிபிம்பம். சக்தியின் இன்னொரு சாயல், சக்தியின் மற்றொரு வடிவம்.

சக்தியின் சக்தி என்பதே இவ்விதம்தான். அது எல்லா இடங்களிலும் வியாபித்திருக்கும். எல்லார் மனங்களுக்குள்ளும் இருந்தபடி, வழி நடத்தும். வாஞ்சை காட்டி பூரிக்கச் செய்யும். துவளும் தருணங்களிலெல்லாம் கண்ணுக்குத் தெரியாத கரமாக வந்து, வாரிக்கொள்ளும். அதனால்தான் பிரபஞ்ச இயக்கம் என்பதே சக்தியால் இயங்குகிறது என்று சொல்கின்றன, புராணங்களும் விஞ்ஞானங்களும்!

சக்தியின்றி இங்கே எதுவும் சாத்தியமில்லை. சக்தி என்பது ஓர் தேவதை.அப்படி ஓர் தேவதையில் இருந்து கிளைத்துக் கிளைத்து, முளைத்து, வேர்விட்டு விஸ்வரூபமெடுத்திருக்கிற தேவதைகள். அந்த தேவதைகள் அனைவருமே சக்திகள்தான். உலகாளும் பராசக்திகள்தான். உலகை உய்விக்கவும் உன்னதப்படுத்தவுமாக அவர்களின் சக்தியானது, அன்பாய், ஆதுரமாய், கனிவாய், கருணையாய் வரங்களை வழங்கிக் கொண்டே இருக்கின்றன நமக்கு!

சக்தியின் வடிவங்களும் ரூபங்களும் வேறு வேறு. ஆனால் சக்தியின் குணமானது ஒன்றே ஒன்றுதான். அது... படைத்தவர்களைக் காத்தல். யாரைப் படைத்தார்கள். நம்மையெல்லாம் படைத்திருக்கிறார்கள். அப்படியெனில்... நம்மைப் படைத்தவர்கள் என்றால், அவர்கள் நமக்கு அன்னை அல்லவா. ஆமாம்... அன்னைதான். அம்மாதான். அம்பாள்தான் நமக்கான முதல் அன்னை, தாய், அம்மா எல்லாமே!

நமக்கும் நம் அம்மாவுக்கும் நம்பிள்ளைகளுக்கும் நாளை நாளை என்று வரப்போகிற நம் சந்ததியினருக்கும் என எல்லா உயிர்களுக்கும் பராசக்தியே அன்னை. அவளின் பராக்கிரமத்தால் விளைந்திருக்கிற அருளாடல்களே இங்கு நம்மையெல்லாம் இயக்கிக் கொண்டிருக்கின்றன. அதனால்தான் பெண் தெய்வங்கள் அனைவரையுமே சக்தி என்கிறோம்.

காமாட்சி, மீனாட்சி, விசாலாட்சி, லலிதாம்பாள், பெரியநாயகி, வேத நாயகி, கற்பகாம்பாள், மாரியம்மன், வேம்புலி அம்மன், முப்பிடாதி அம்மன், செல்லியம்மன், இசக்கியம்மன் என்று எல்லா பெண் தெய்வங்களும் நமக்கு அன்பைப் பொழிந்து, கருணையை வழங்கி, அருள் செய்து , நம்மை இன்னும் இன்னும் வாழச் செய்கிறார்கள். வாழ அருளிக் கொண்டே இருக்கிறார்கள்.

இதோ... இந்தத் தொடர்... தாயே நீயே துணை... அப்படியான பெண் தெய்வங்களை, மகாசக்திகளை, அவர்களின் அருளாடல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் அற்புதத் தொடர்.

கரையில் இருந்து தானே பயணமானது தொடங்கும். அது... கரையில் இருந்து சாலைக்கு வந்து செய்கிற பயணமாக இருந்தாலும் சரி... கரையில் இருந்து கடலுக்குள் சென்று பயணிப்பதாக இருந்தாலும் சரி... கரை என்பது ஒரு புள்ளி. ஒரு மையம். ஒரு துவக்கம். ஓர் ஆரம்பத்தின் நேர்க்கோடு.

தவிர, ‘நம்மை கரையேற்றிவிட யாருமே இல்லியே...’ என்றுதானே ஏங்கிக் கொண்டிருக்கிறோம். ‘நல்லபடியா கரையேறிட்டாப் போதும்பா சாமீ’ என்றுதானே புலம்பிக் கொண்டிருக்கிறோம். ‘நாமெல்லாம் கரையை அடையறதுக்கு ஒரு வழி கிடைக்காதா. ஒரு கலங்கரை விளக்கம் இருக்காதா...’ என்பதுதானே நம் எல்லாருடைய எதிர்பார்ப்பு. அப்படி கரையேற்றி விடுபவள், கரையேறுவதற்கு வழிகள் செய்பவள், கரையை அடைய வழிகாட்டியாக இருப்பவள்... கடற்கரைக்கு சற்றே தூரத்தில் , வெகு அருகிலேயே இருப்பவளில் இருந்து இந்தத் தொடரைத் தொடங்குகிறேன்.

தாயே... நீயே துணை!

ரயில் மார்க்கத்தில் சென்னையில் அதுதான் முதல் ஸ்டேஷன். அங்கிருந்துதான் சென்னை வாழ் மனிதர்களுக்கான, மனிதர்களின் பயணங்களுக்கான யூனிட் ரயில் எனப்படும் எலெக்ட்ரிக் ரயில்கள் இயங்குகின்றன. அது... பீச் ஸ்டேஷன். நம்முடைய வாழ்க்கைப் பயணத்தின் இருளையெல்லாம் விலக்கும் ஒளியெனத் திகழும் காளிகாம்பாள் குடியிருக்கிற கோயில், இந்த ஸ்டேஷனுக்கு அருகில்தான் இருக்கிறது.

சென்னையின் முக்கிய முனைப் பகுதி, பாரிமுனை. ஒருகாலத்தில், தமிழகம் முழுவதுக்கும் செல்வதற்கு, இங்கிருந்துதான் பேருந்துகள் கிளம்பின. இங்கேதான் பேருந்து நிலையம் இருந்தது. இந்தப் பகுதியில்தான் காளிகாம்பாள் கோயில் கொண்டு, காட்சி தந்துகொண்டிருக்கிறாள். பேருந்துப் பயணம் தொடங்கிய இடத்தில் இருந்தே, இந்தத் தொடரின் பயணமும் முதல் கியர் போட்டுத் தொடங்குகிறது.

அதேபோல், இங்கேதான் பூக்கடை இருந்தது. பூக்கடை என்றால் ஒரு கடை இல்லை. பூ மார்க்கெட். தமிழகத்தில் இருந்தும் கர்நாடகத்தில் இருந்தும் ஆந்திரத்தில் இருந்தும் இங்கே பூக்கள், சந்தைக்கு வந்திறங்கும். எல்லாப் பூக்களும் இங்கே கிடைக்கும். மொத்த இடமும் மணத்துக் கிடக்கும். பூ என்பது மங்கலகரமான , நம் வாழ்க்கையுடன் ஒன்றியிருக்கிற புனிதப் பொருள். பொருள் பொதிந்த அடையாளம். ‘பொன் வைக்கிற இடத்துல நாங்க பூ வைக்கிறோம்’ என்று விலையுயர்ந்த பொன்னுக்கு நிகராக பூக்களைச் சொன்ன தேசம், நம்முடையது!

பூக்கள் வாங்காத வீடே இல்லை. பூக்களைச் சூட்டுவதற்காகவே தெய்வப்படங்களையும், தெய்வப் படங்களுக்குச் சூட்டுவதற்காகவே பூக்களையும் கொண்ட பின்னிப்பிணைந்த பூவுடனான நம் வாழ்க்கை... நினைக்க நினைக்க மணம் பரப்பக் கூடியது. பூ... மங்கலத்தன்மை கொண்டது. சுமங்கலிகளின் ஆகப்பெரிய சொத்துகளில், தாலியும் மஞ்சளும் குங்குமமும்தான்! அந்தத் தாலியை மஞ்சளை குங்குமத்தை, ஆயுள் முழுவதும் பெண்களுக்கு வழங்கி பலம் தரக்கூடிய காளிகாம்பாள், இதோ...சென்னையின் பாரிமுனைப் பகுதியில்தான் கோலோச்சிக் கொண்டிருக்கிறாள்.

அந்தக் காளிகாம்பாள் என்கிற தாயை வணங்கி, தாயிடம் இருந்தே தொடங்குகிறேன் ‘தாயே... நீயே துணை’ தொடரை!

காளிகாம்பாள். சென்னை ஐகோர்ட்டுக்கு அருகில் உள்ள அற்புதமான கோயில். நம் மனதில் உள்ள வழக்குகளையும் கேள்விகளையும் சந்தேகங்களையும் சங்கடங்களையும் பிரச்சினைகளையும் சிக்கல்களையும் ... அவ்வளவு ஏன்... நம்மில் உள்ள குற்றம்குறைகளையும் போக்கி அருளக்கூடியவளாக, எல்லாச் சிக்கல்களையும் தீர்த்து வைப்பவளாக அருள்பாலித்துக் கொண்டிருக்கிறாள் காளிகாம்பாள்.

இவளின் கோயிலுக்குள் நுழையும் போதே, அம்மாவைப் பார்க்கப் போவதாகவே உள்ளுணர்வு சொல்லும். உள்ளம் துள்ளும். திக்குத்திசை தெரியாத கன்று, தாய்ப்பசுவைப் பார்த்ததும் ஓடுகிற ஓர் பரவசமும் நிம்மதியும் உள்ளுக்குள்ளே பரவியிருக்கும்.

கிழக்குப் பார்த்த ஆலயம், காளிகாம்பாள் திருத்தலம். நம் வாழ்க்கையையே விடியச் செய்யவும் உதிக்கச் செய்யவும் மலரச் செய்யவும் அமைந்திருக்கிற சக்தி மிக்க கோயில்.

வாசலில் நின்று, தலை நிமிர்த்தி, கோபுரம் பார்த்து, ‘தாயே... நீயே துணை’ என்று மனதுள் அவளை நிறுத்தி, அந்த பரோபகாரியை, பாசக் காளியை, கனிவு முகம் காட்டும் காளிகாம்பாளைத் தரிசிக்க உள்ளே செல்வோமா?

தாயே நீயே துணை!

வி.ராம்ஜி

எழுதியவர் : (21-Aug-18, 7:22 pm)
பார்வை : 93

சிறந்த கட்டுரைகள்

மேலே