சின்ன வீடு

பசியில் அவள்…
கிறக்கத்தில் நான்…
சர்க்கரைக் குவளையில்
அடைபட்ட எறும்பாய்
ரோமக் காட்டில் விரல்கள்

கிறக்கம் தீர்ந்து
உறக்கத்தில் வீழ்ந்த நொடி
எந்த நொடி என்றறியேன்

நடுஇரவில் நாயொன்றின்
ஊழை கேட்டு உறக்கம் கலைந்தேன்

மனம் மெல்ல வீடு திரும்பியது
மாலை திரும்புகையில்
மல்லி வாங்கி வரச் சொன்னாளே மனைவி
காத்திருந்திருப்பாள்…

மகளுக்காக வாங்கிய குட்டைப் பாவாடை
இதோ கட்டிலில்…

“நேத்து ஏன்பா வீட்டுக்கு வரல”
காலை மகளின் கேள்விக்கு
மனைவியின் கண்ணீர்த் துளிகள்
விடையாய்க் கிடைக்கும்

ஏதேதோ நினைத்துக் கொண்டிருக்கையில்
புகைக்கச் சொன்னது மனம்

இன்னுமொரு போதை கிசுகிசுத்துப் புன்னகைத்தது
“தூக்கம் வரலயா”என்று

மௌனக் கட்டளைகளுக்குக்
கட்டுப்பட்டு இயங்க ஆரம்பித்தது
மனமும் உடலும்…

நாளை முதல் இங்கு வரக்கூடாது என்ற
வழக்கமான சபதம்
நான் எடுத்து முடிக்கு முன்
காமம் கட்டளை யிட்டது
“இது தான் கடைசி முறை” என்று

எழுதியவர் : செவல்குளம் செல்வராசு (23-Aug-18, 10:36 pm)
Tanglish : sinna veedu
பார்வை : 48

மேலே