திருநெல்வேலி மாவட்ட நாவல்களில் காலப்பின்னணி

ஒர் இலக்கியப் படைப்பிற்கு உயிர் போன்றது காலம். கதை, கதை நிகழும் இடம், கதாமாந்தர்கள், மொழித்திறன், கதை சொல்லப்பட்டவிதம் என்று பல காரணிகள் ஒரு படைப்பிற்கு வலிமை சேர்க்கின்றன. ஆனால் எல்லாக்காரணிகளையும் விட முக்கியமானது காலம். கதையில் விவரிக்கப்படும் சம்பவம், வாழ்க்கைமுறை எந்தக் காலத்தில் நிகழ்ந்தது என்பதைப் பொறுத்துத்தான் அதற்கு மதிப்பு ஏற்படுகிறது. படைப்பிலக்கியத்தில் குறிப்பிடப்படுகிறது. காலத்தை வைத்துத்தான் குறிப்பிட்ட காலப்பகுதியில், குறிப்பிட்ட நிலப்பகுதியில் மக்கள் எவ்வாறு வாழ்ந்தனர் என்பதை அறியமுடியும். அவ்வாறு அறிவதுதான் இலக்கிய வரலாறு. அந்தவகையில் திருநெல்வேலி மாவட்டத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல்களின் காலத்தை அறிவது என்பது திருநெல்வேலி மாவட்ட இலக்கிய வரலாற்றை அறிவதாகும். அதே போன்று ஒவ்வோர் இலக்கியப் படைப்பின் வழியாக ஒவ்வொரு நாவலும் விவரிக்கும் காலத்தில் திருநெல்வேலி மாவட்ட மக்கள் எவ்வாறு வாழ்ந்தனர் என்பதை அறியமுடியும். இவ்வாறு ஆராய்வதன்மூலதான் திருநெல்வேலி மாவட்டத்தை மையப்படுத்தி எழுதப்பட்ட நாவல்கள் எவை, அவை எந்தெந்தக் காலத்தில் எழுதப்பட்டன, அவற்றின் மூலமாக நாம் அறிவதென்ன என்பதைப் பார்க்கலாம்.

ஒவ்வொரு நாவலும் அந்தந்த காலகட்டத்தின் நிலையை பிரதிபலிப்பதாக உருவாக்கப்பட்டுள்ளது. ‘காலம்’ சமூகத்தின் வாழ்வையும் பண்பாட்டுக் கலாச்சாரத்தையும் நிர்ணயிப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது. ‘பத்மாவதி சரித்திரம்’ நாவல் வெளிவந்த வருடம் 1898. 1880 – 1890 களில் நாவலின் கதை நிகழும் காலம் என்பது நாவலாசிரியரின் கூற்றின் வாயிலாக தெரியவருகிறது. கல்விகற்கும் காலங்களில் ஏற்பட்ட வாழ்க்கை அனுபவங்களே பத்மாவதி சரித்திரம் நாவலாகும். நாவலின் கதை 10 ஆண்டுகள் நடக்கிறது. நாராயணனின் பதினான்கு வயதில் கதை தொடங்கி இருபத்தி நான்கு வயதில் முடிகிறது. அன்றையகால நிகழ்காலத்தை எதார்த்தமாக பதிவுசெய்துள்ளார். அன்றைய காலத்தில் பட்டப்படிப்பை வசதியானவர்கள், பண்ணையார்களின் குழந்தைகள் மட்டுமே படித்து வந்ததை நாவலின் வழியாக அறியமுடிகிறது. கிறித்தவர்கள் கல்வி நிலையங்கள் தொடங்கி கல்விப்பணியாற்றியதையும், தமிழ்ப் பண்டிதர்கள் கல்விக் கூடங்கள் வைத்து கல்வி அறிவைப் போதித்ததையும் நாவலில் பதிவு செய்துள்ளமையால் பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் கல்வியின் நிலை குறித்து அறிந்துகொள்ள முடிகிறது.

ரகுநாதனின் ‘பஞ்சும் பசியும்’ நாவல் வெளிவந்த ஆண்டு 1951. ஓர் ஆண்டு மட்டுமே கதை நடக்கிறது. இந்தியா முழுவதும் சுதேசிஇயக்கம் கடைப்பிடிக்கப்பட்ட காரணத்தால் அந்நியத்துணி எரிப்பு மற்றும் புறக்கணிப்புப் போராட்டம் நடைபெற்றது. இதன் விளைவாக சிறு, குறு நெசவாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். தொழிலில் பெரும் பாதிப்படைந்தார்கள். கைத்தறி நெசவாளர்கள் வறுமையின் பிடியில் தள்ளப்பட்டனர். நாடு முழுவதும் போராட்டங்களும், ஊர்வலங்களும் நடைபெற்றன. அம்பையில் அனைத்து நெசவாளர்களும் சங்கம் அமைத்துப் போராடிய போராட்ட வாழ்க்கையை நாவலாக்கியுள்ளார் நாவல் வெளிவந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்வோடு, இரண்டாம் உலகப்போரின் தாக்கத்தையும் சுதந்திரப்போராட்ட காலத்தில் கொண்டுவரப்பட்ட கொள்கைகள், இயக்கங்கள், அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் என்ன என்பதையும் பஞ்சும் பசியும் நாவலின் வழியாக தொ.மு.சி.ரகுநாதன் கூறியுள்ளார்.

“கல்லுக்குள் ஈரம்” என்ற நாவல் சுதந்திரப் போராட்டத்தையும், அதில் ஈடுபட்ட தலைவர்கள், வீரர்கள், தியாகிகள் பற்றிய உண்மைச் சம்பவத்தையும் பின்னணியாகக் கொண்டு 1966 இல் எழுதப்பட்டது. 1941 முதல் 1948 வரை கதை நடக்கிறது. இந்தியாவிலும், தமிழகத்திலும் குறிப்பாக திருநெல்வேலியில் விடுதலைப்போராட்ட முன்னெடுப்புகள் மிகத் தீவிரமாக இருந்ததையும், மிதவாதிகளும் தீவிரவாதிகளும் விடுதலைக்கு எவ்வாறு வித்திட்டனர் என்றும் அதற்கு திருநெல்வேலி மாவட்ட தலைவர்களும், மக்களும், வீரர்களும் தங்கள் உயிரைக் கொடுத்து சுதந்திரத்திற்காகப் பாடுபட்டதையும் நாவலாக்கியுள்ளார். வரலாற்றில் இந்நிகழ்வுகள் மதிப்பிற்குரியனவாகவும் மரியாதைக்குரியனவாகவும் பார்க்கப்படுவதைக் காணமுடிகிறது. கதையின் நிகழ்வானது திருநெல்வேலியில் தொடங்கி டெல்லி வரை செல்கிறது. காந்தி, நேரு போன்ற முக்கியத்தலைவர்களின் செயல்பாடுகளையும் சுபாஷ் சந்திர போஸின் வழிமுறையைப் பின்பற்றும் தீவிரவாத இயக்கத்தின் செயல்பாடுகள் என நாவல் இந்தியா முழுவதும் பயணிக்கிறது. இறுதியில் காந்தியின் கொலையோடு நாவல் முடிகிறது. வ.உ.சிதம்பரம்பிள்ளை கப்பல் வாங்க பணம் வசூலித்த காலம், சட்ட மறுப்பு இயக்கத்திற்கு அடிக்கோலிட்ட காலம், வாஞ்சிநாதன் ஆஷ் துரையை சுட்டுகொன்ற காலம், 1942, இல் நடந்த ஆகஸ்ட் புரட்சி காலம், மகாத்மாகாந்தி மரணிக்கும் காலம் என மிகநீண்ட கால வரலாற்றை கல்லுக்குள் ஈரம் நாவலுக்குள் ர.சு. நல்லபெருமாள் அடக்கியுள்ளார்.

‘ஒரு கோட்டுக்கு வெளியே’ நாவல் வெளிவந்த ஆண்டு 1971. நாவலின் கதை நிகழும் காலம் இரண்டு மாதங்கள். ஒரே சாதிக்குள் மேல்வர்க்கக் குடும்பம் ஒன்றின் பகைக்கு ஆளான உழைக்கும் வர்க்கக் குடும்பப் பெண்ணும் அவள் தந்தையும் அடையும் பிரச்சனைகள் என்னென்ன என்பதை எழுபது காலகட்டத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளின் பின்னணியில் நாவல் உருவாக்கப்பட்டுள்ளது. கடன்பட்டோர் திருப்பிக்கொடுக்கும் வரை கடன் கொடுத்தோரால் ஊர் மத்தியில் வட்டக் கோட்டுக்குள் நிறுத்தப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டு ஊர்க்கட்டுப்பாட்டின் பெயரில் ஒதுக்கி வைத்தல் என்கின்ற கிராமத்தின் மரபார்ந்த நடைமுறையால் தந்தையும் மகளும் சந்திக்கும் சிக்கல்கள், போராட்டங்களை வலிகளோடு பதிவு செய்துள்ளார். மேல்சாதியினரால் புறக்கணிக்கப்பட்ட ஏழைகளையும், சேரிமக்களையும் இணைத்து உழைக்கும் வர்க்கத்தினர் என்ற ஓரணியினராக்கிப் போராடி வரும் பட்டதாரி அருணாசலம், சேரிக்கு அடைக்கலமாக வரும் மேல்சாதி உலகம்மையை தன் தங்கையாக ஏற்கிறான். படித்த பட்டதாரிகள் கல்வியறிவு கொடுக்கப்படாத பாமரமக்களின் அறியாமையை அகற்ற, அம்மக்களின் அடிப்படைத் தேவைகளையும் உரிமைகளையும் தரமறுக்கும் முரண்பட்ட சமுதாயத்துடன் போராடி மீட்டுத்தருவதற்கு அருணாச்சலம் கதாபாத்திரம் போராடுகிறது. மேல்வர்க்கத்தினரின் ஓர் இளம் பெண்ணுக்குத் தொடர்ந்து ஏற்படுத்தும் இடையூறுகளால், சேரியில் மனிதாபிமானத்துடன் தன்னை அரவணைக்கும் ஹரிஜன மக்களுடன் மானத்தோடு வாழ எண்ணி சேரிக்குக் குடிபெயர்வதாக நாவலை முடிக்கிறார் சு.சமுத்திரம்.

‘கிளாரிந்தா’ நாவலை 1915 ஆம் ஆண்டு அ.மாதவையா ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டார். பின்னர் 1978 தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டது. நாவலின் கதையானது 1746 இல் 1783 வரை நிகழ்கிறது. இதற்கான ஆதாரங்களை வரலாற்று நிகழ்வுடன் 1746 இல் நடந்த போரில் தொடங்கி, 1785 வரை நடந்த ஆலயப் பிரதிஷ்டை வரை நாவலில் குறிப்பிட்டுள்ளார். கிளாரிந்தாவின் கதை 130 ஆண்டுகளுக்குப் பின் எழுதப்பட்டுள்ளது. இது ஒரு வரலாற்று நாவல். வரலாற்றின் பின்னணியில் இந்நாவல் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆங்கிலேயர்களின் காலம், நவாப்புகளின் காலம், கிறித்தவர்களின் காலம், மராட்டியர்களின் காலம் என பல இனத்தவர்களின் காலம் பற்றி அறியமுடிகிறது. கிளாரிந்தா நாவலின் இறுதிப்பகுதியைத் தவிர நாவல் முழுவதும் தஞ்சையில் நடக்கிறது. கதையின் முடிவில் லிட்டில்டனும் கிளாரிந்தாவும் திருநெல்வேலிக்கு குடிபெயர்கின்றனர். அங்கு லிட்டில்டன் இறந்த பிறகு கிறித்தவ மதத்தைப் பரப்பி ஏழைகளுக்கு உதவி செய்து வாழ்ந்தார். அந்த காலகட்டமே திருநெல்வேலி வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த காலமாகும். பாளையங்கோட்டைப் பகுதியில் ஆங்கிலேய கிறித்தவர்கள் வசித்துவந்தாலும் கிளாரிந்தா வந்தபிறகுதான் இந்துக்களை கிறித்தவராக்கும் முயற்சி தொடங்கி அதிகமாக வளர்ச்சியடைந்தது. ஒரு கிறித்தவ ஆலயத்தையும் தன் சொந்த செலவில் கட்டியுள்ளார். இன்றும் அவர் கட்டிய ஆலயம் அங்கு உள்ளது.

வண்ணநிலவனின் ‘கம்பா நதி’ நாவல் 1980 இல் வெளிவந்தது. நாவலின் கதையானது ஒரு வருட காலத்தில் நடக்கிறது. நாவல் நிகழும் காலகட்டம் பற்றிய குறிப்புகள் நாவலுக்குள் இடம்பெறவில்லை. இந்நாவல் 1980 களில் வாழ்ந்த பிராமணக் குடும்பத்தின் வாழ்க்கை முறையைக் கூறுவதாக அனுமானிக்க முடிவதால் நாவல் வெளிவந்த காலத்தையே நாவலின் காலமாக எடுத்துக்கொள்ள முடியும். நெல்லையப்பர் கோவிலை ஒட்டி கம்பாநதி என்ற ஒரு நதி ஓடியதை பதிவு செய்யும் விதமாக நாவலுக்கு கம்பாநதி எனப்பெயர் சூட்டியுள்ளார் நாவலாசிரியர். அந்த நதிக்கரையில் வாழ்ந்த மனிதர்களையும் அவர்களின் வாழ்க்கை முறையையும் நாவலாக்கியுள்ளார். நதிக்கரை மனிதர்கள் இயற்கையோடு இயைந்து வாழ்ந்ததை கம்பாநதி நாவல் விவரிக்கிறது.

வண்ணநிலவன் பாளையங்கோட்டைக்கு அருகிலுள்ள பெருமாள்புரம் பகுதியிலுள்ள ரெயினீஸ் ஐயர் தெருவை கதைக்களமாகக் கொண்டு ‘ரெயினீஸ் ஐயர் தெரு’ நாவலை 1981 இல் எழுதியுள்ளார். நாவலின் கதை நிகழும் காலம் ஒன்றரை ஆண்டுகள். இருபுறமும் ஆறே வீடுகள் கொண்ட ரெயினீஸ் ஐயர் தெரு மற்றும் அவ்வீடுகளில் வசிக்கும் குடும்பங்களைப்பற்றியும், உறவுகளின் நேசம், விரிசல்கள், சிக்கல்கள், வாழ்க்கைமுறை என டாரதி என்ற சிறுமியின் வழியாக நாவலை நகர்த்திச் செல்கிறார். எஸ்தர் (சித்தி), சாம்ஸன் உறவுச்சிக்கல்கள் போன்று சிலரின் உறவுமுரண்களை பதிவு செய்துள்ளார். ஒவ்வொரு குடும்பத்திலுள்ள மனிதர்கள், அவர்களுக்கிடையிலான உறவுகள், காதல், அன்பு, நோய், சிக்கல், பொறாமை, தனிமை, ஏக்கம், தியாகம் போன்றவற்றை விவரிக்கிறது. கிறித்தவர்களின் வாழ்க்கை முறையை விவரிக்கிறது. ஒரு கார் கூட நிற்கமுடியாத அளவுக்கு குறுகலான பாதையைக் கொண்ட தெருதான் ரெயினீஸ் ஐயர் தெரு. டெய்சி பெரியம்மா வீடு, இருதயம் ஆசிரியை வீடு, அன்னமேரி ஆசிரியை வீடு, ஹென்றி மதுரநாயகம் பிள்ளை வீடு, அற்புதமேரி வீடு, ஆசிர்வாதம் பிள்ளைவீடு என ஆறு வீடுகளுக்குள் இருக்கும் குடும்பச்சிக்கல்கள், முரண்கள், கனவுகள், ஆசைகள், தெய்வபக்தி பற்றிய கதையே நாவலாகப் பரிணமித்திருக்கிறது.

ஜெயசாந்தியின் ‘பரணி’ நாவல் வெளிவந்த ஆண்டு 2001. 1985 முதல் 1987 வரை நாவலின் கதை நிகழ்கிறது. நாவலில் 1982 லிருந்து 1987 வரை உள்ள காலகட்டம் விவரிக்கப்படுகிறது. செண்பகம், பரணி என்ற இரண்டு பெண்களின் வாழ்க்கையைப்பற்றி பேசுகிறது. சமுதாயத்தில் சாதீய ஆதிக்கம் வேரூன்றியிருந்த காலம், கல்வி நிறுவனங்களில் மதத்தின் ஆளுமைக்காலம், இலங்கைத் தமிழர்களை சிங்கள ராணுவம் கொன்று குவித்த காலம், நாகாலாந்தில் வாழும் நாகர் இன பழங்குடி மக்களின் காலம் நாவலில் விவரிக்கப்பட்டுள்ளது. செண்பகத்தின் இளமைக்காலத்தின் வாழ்க்கையையும், செண்பகத்தின் மகளான பரணியின் கல்வி வாழ்க்கையும் நாவல் முழுவதும் விவரிக்கப்பட்டுள்ளது. 1982 ஆம் ஆண்டு தொடங்கி 1987 வரை திருநெல்வேலியின் வாழ்க்கைச் சூழலை ஜெயசாந்தி விவரிக்கிறார்.

ஆர்.எஸ்.ஜேக்கப்பின் ‘வாத்தியார் மறுபிறவி மரணவாயிலில்…’ நாவல் 2003 இல் வெளிவந்தது. ஜேக்கப்பின் சிறைப்போரட்ட வாழ்க்கை 1950 முதல் 1952 வரை கதை நடக்கிறது. இதுவே நாவலின் கதை நிகழும் காலமாகும். 1820 ஆம் ஆண்டு தொடங்கி 1952 வரையுள்ள காலங்கள் நாவலில் விவரிக்கப்படும் காலமாக அமைந்துள்ளது. நெல்லை கம்யூனிஸ்ட் சதிவழக்கின் சரித்திர நாவலே மரணவாயிலில்… இந்த நிகழ்வு திருநெல்வேலி வரலாற்றில் நடந்த மிக முக்கிய நிகழ்வுகளுள் ஒன்று. வாத்தியாரின் சிறை அனுபவங்களையும், அவருடன் வழக்கில் குற்றவாளிகளாகக் குற்றம் சுமத்தப்பட்டு சிறைவாசம் அனுபவித்த பொதுவுடைமைக்காரர்களின் தனிமனித இயல்புகளையும், சமூகச்செயல்பாடுகளையும் மற்ற கைதிகளின் போக்குகளையும் இந்த நாவல் உயிர்ப்புடன் எடுத்துக் கூறுகிறது. விடுதலைப் போராட்ட காலத்தில் இந்தியாவில் நடந்த முக்கியச் சம்பவங்கள், தலைவர்களின் நிலைப்பாடுகள், மிதவாத செயல்பாடுகள், தீவிரவாத செயல்பாடுகள், கைது நடவடிக்கைகள், வெள்ளையர்களின் திட்டங்கள், விடுதலை உணர்வும் வேட்கையும் மக்களிடையே ஏற்படுத்திய மாற்றங்கள், உயிரிழப்புகள் என எண்ணற்ற தகவல்களை குறிப்புகளாக நாவலுக்குள் விவரிக்கிறார். கம்யூனிஸ்ட் சதிவழக்கில் கைதான முக்கியத் தலைவர்களின் குடும்ப வாழ்க்கையையும் நாவலில் பதிவு செய்துள்ளார். இந்த நாவலில் வரும் வாத்தியார் என்பவர் நாவலாசிரியரான ஜேக்கப். நெல்லைச்சதி வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுள் அவரும் ஒருவர்.

“புலிநகக் கொன்றை” நாவல் வெளிவந்த ஆண்டு 2004. நாவலின் கதையானது 1858 முதல் 1971 வரை நிகழ்கிறது. 105 ஆண்டுகளாக உயிர்வாழும் பிராமணப்பெண்ணின் வழியாக, ஒரு பிராமண குடும்பத்தின் நான்கு தலைமுறைகளின் வாழ்க்கைநிலையை விவரிப்பதாக நாவல் கட்டமைக்கப்பட்டுள்ளது. ராமன் – பொன்னாவின் வாரிசுகள் சுதந்திரப்போராட்டத்தில் கலந்துகொண்ட நிகழ்வுகளும், 1970 களில் திருநெல்வேலியின் சமூகச்சூழலையும், பிராமணகுடும்பத்தின் சூழலையும் மையமாகக்கொண்டு நாவலின் கதையானது நகர்கிறது. நாவலை நான்கு பெரும்பிரிவாகவும், பதினெட்டு சிறுபிரிவாகவும் பிரித்ததோடு உட்பிரிவாக எண்ணிக்கையையும் கொடுத்துள்ளார். ஒரு வரலாற்று நாவலுக்கு நிகராக நாவலை கட்டமைத்திருக்கிறார் பி.ஏ.கிருஷ்ணன். புலிநகக் கொன்றை நாவல் மிக நீண்டதொரு வரலாற்றை வாழ்வை 105 ஆண்டு காலத்தில் திருநெல்வேலியின் வளர்ச்சியை பிராமண குடும்பத்தின் வழியாக பதிவு செய்கிறது. பொன்னாவின் குடும்ப வாரிசுகள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியான வாழ்க்கைச் சூழல் நிலவியதையும் அந்தச்சூழலின் வழியாக மனிதாபிமானம், நாட்டுப்பற்று, குடும்பப்பொறுப்பு, தியாக உணர்வு, பக்தி, பண்பாடு, ஒழுக்கம், கல்வியறிவு என ஒட்டுமொத்த மனிதவாழ்க்கையை ஒரே நாவலுக்குள் கட்டமைத்திருக்கிறார். கால வளர்ச்சியின் நிலைப்பாட்டை, புதுமையை, நவீனவாழ்க்கையை குடும்பம் என்ற அமைப்பிற்குள்ளிருந்து மிக நேர்த்தியாகச் சொல்லிச் செல்கிறார்.

திருநெல்வேலி மாவட்டத்தை மையமாக வைத்து எழுதப்பெற்ற நாவல்களுள் அன்வர்பால சிங்கம் எழுதிய ‘கருப்பாயி என்கிற நூர்ஜஹான்’ நாவல் மற்ற நாவல்களிலிருந்து வேறுபட்டது. நாவல் 2011 இல் வெளிவந்தது. கதை நிகழும் காலம் பகல். ஓர் இரவு. நாவலின் கதைக்குள் விவரிக்கப்படும் காலம் 1981 லிருந்து 2011 வரை. ஒரு கிராமத்தின் வாழ்க்கையை நினைவோட்டமாக விவரிக்கிறார் அன்வர் பாலசிங்கம். இந்து சமுதாயத்தின் ஒரு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்த மக்கள் ஒட்டு மொத்தமாக இஸ்லாமிய சமுதாயத்திற்கு மதம் மாறிய நிகழ்வு உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்தது. அந்த நிகழ்வின் பின்னணியில் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த மக்களின் வாழ்வியல் சார்ந்த பிரச்சனைகளைப் பற்றி நாவல் பேசுகிறது. இந்த மதமாறுதலால் திருநெல்வேலி மாவட்டத்தில், தமிழ்நாட்டில், இந்தியாவில் ஏற்பட்ட கொந்தளிப்பான நிகழ்வுகள் என்ன என்பதை மறைமுகமாக நாவலாசிரியர் சொல்கிறார். காலம்காலமாக இந்து மதமும் அதன் நடைமுறைகளும் தங்களை கௌரவமாக நடத்தவில்லை என்றுதான் ஒடுக்கப்பட்ட மக்கள் மதம் மாறுகின்றனர். மதம் மாறிய பின்பு அம்மக்களின் வாழ்க்கையில் ஏற்படும் கலாச்சார பண்பாட்டு மாற்றங்களையும், பின்னடைவுகளையும் இந்த நாவலின் வழியாக எடுத்துரைக்கிறார். நூர்ஜஹானின் இறப்பில் தொடங்கி இறப்பிலேயே நாவல் முடிவடைகிறது.

‘கெடை காடு’ நாவல் 2013 ஆம் ஆண்டு வெளிவந்தது. நாவலின் கதை நிகழும் காலம் பத்து நாட்கள் மட்டுமே. நாவலில் விவரிக்கப்படும் காலம் இருபத்து மூன்று ஆண்டுகள். திருநெல்வேலியின் மேற்குமலைத்தொடர்ச்சி மலையின் அடிவாரத்திலுள்ள கீழாம்பூரைச் சேர்ந்த மக்கள் வறட்சிக்காலங்களில் பசுக்களையும் காளைகளையும் கூட்டமாக அழைத்துச்சென்று குள்ராட்டியில் கெடை போடச்செல்லுதல் வழக்கம். கெடைபோடும் பத்துநாட்களில் அந்தக்காட்டிற்குள் நடக்கும் நிகழ்வுகளே கெடைகாடு நாவலாகும். நீரில்லாமல் வறண்ட காலகட்டத்தில் ஆடுமாடுகளை ஓட்டிக்கொண்டு மலைப்பகுதியில் கெடைபோடும் வழக்கம் திருநெல்வேலி மக்களிடம் இன்றும் இருக்கின்ற வழக்கமாகும். செழிப்பான இடத்திற்கு ஆடுகள், மாடுகள், வாத்துகளை ஓட்டிச்சென்று கெடை போடும் வழக்கம் இன்றைக்கும் நடைமுறையில் இருந்து வருகிறது. ஒரு கிராமத்தில் நிகழும் சாதாரண நிகழ்வை நாவலாக்கியுள்ளார் ஏக்நாத்.

‘சங்கவை’ நாவல் 2014 இல் வெளிவந்தது. நாவலின் கதை நிகழும் காலம் நான்கு ஆண்டுகள். இருபத்தி ஐந்து கால ஆண்டுகளின் நிகழ்வுகள் நாவலில் விவரிக்கப்படுகின்றன. நாவலானது இரு வேறு களத்தில் பயணிக்கிறது. கிராம மக்கள், அவர்களின் வாழ்க்கை முறை, உறவுகளின் நெருக்கமும் தூரமும், விவசாயம் என ஒரு பக்கமும், மற்றொரு பக்கம் நகர வாழ்க்கை கல்லூரி வாழ்க்கை, ஆண்பெண் உறவுகள், சமயம் தொடர்பான செய்திகள், பேராசிரியர் மாணவர் உறவுநிலை என வேறொரு பரிமாணத்திலும் கதை நடக்கிறது. நாவலுக்குள் கிராம நகர வாழ்க்கையின் ஒட்டுமொத்த அம்சத்தையும் விளக்கும் வகையில் படைக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்திலுள்ள ஆலங்குளம் வட்டத்திற்கு உட்பட்ட கிராமங்களின் வாழ்க்கை நிலையினை விவரிப்பதாக நாவல் அமைந்துள்ளது.

ஆங்காரம் நாவல் 2015 இல் வெளிவந்தது. நாவலின் கதை நிகழும் காலம் ஆறு மாதம். நாவலின் கதை விவரிக்கப்படும் காலம் 18 வருடங்கள். 1990 களில் கதை நிகழ்கிறது. கோவில் சார்ந்த செய்திகள், வழிபாட்டு முறைகள், சாதிமுறை உறவுகளின் ஆதிக்கம், கோவில்கள் உருவான கதைகள், பழங்கதைகள், தெய்வங்களுக்கு கோவில் எடுக்கும் முறை, கோவில்கொடைகள் நடத்தும் முறை என நாவல் முழுவதும் நாட்டுப்புற வழக்காறுகள் சார்ந்து படைக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தை மையமாகக் கொண்டு எழுதப்பெற்ற நாவல்களின் காலம் மூன்றுநிலைகளில் காணப்படுகிறது. ஒன்று நாவல் எழுதும் காலம், இரண்டு நாவல் எழுதப்படும் காலம், மூன்று நாவலில் விவரிக்கப்படும் காலம். நாவலில் விவரிக்கப்படும் வாழ்க்கையே நாவலின் காலத்தை முடிவு செய்கிறது. அந்த வகையில் 1898 லிருந்து 2015 வரை வெளிவந்த நாவல்கள் ஒவ்வொன்றும் சமூகத்தை, மனிதர்களை, சுதந்திரப்போராட்ட காலத்தை, சுதந்திரப்போராட்ட தலைவர்களை, விடுதலைப்போராட்டத்தில் கலந்துகொண்ட வீரர்களை, சாதீய ஒடுக்குமுறைகளை, தீண்டாமை கொடுமைகளை, வன்முறைகளை, இயற்கையின் கொடையை, கலாச்சாரப் பண்பாட்டை, வாழ்வியல் போராட்டங்களை, கடைநிலை மனிதர்களை, பெண்களை, நிலவியல்தன்மையை, சமூகச்சூழலை, வாழ்வியல் நெறிகளை, நிகழ்வுகளை அடித்தளமாகக் கொண்டு நாவல் கட்டமைக்கப்பட்டுள்ளது. 269ஆண்டுகால வரலாற்றையும், 117 ஆண்டுகளில் தமிழ்ச்சமூகம் குறிப்பாக திருநெல்வேலி மாவட்டம் கடந்துவந்த காலச்சூழல், இடச்சூழல், சமூகச்சூழல், கல்விச்சூழல், மனிதர்கள், கலாச்சாரம், பண்பாடு, எழுத்துவெளி, சாதீய அடக்குமுறைகள், மத அடையாளங்கள் போன்றவை காலத்திற்கு ஏற்ப எவ்வாறு மாற்றமடைந்துள்ளன என்பதை திருநெல்வேலி வட்டார நாவல்களின் வழி அறியமுடிகிறது.


மு.ரா.மஜிதா பர்வின்
ஆய்வாளர், தமிழியல்துறை,
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்,
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்,

எழுதியவர் : (25-Aug-18, 4:11 am)
பார்வை : 93

மேலே