585 ஆண்டான் அடிநினைத்து ஆடாய் நீபாடாய் - தெய்வத்தன்மையும் வாழ்த்தும் 43

வீடாத முத்தொழிலோன் விண்ணவர்கோன் மண்ணவர்கோன்
கோடாத செங்கோலான் குற்றமில்லா னித்தமுனை
வீடாகக் கொண்டுறையு மேன்மையுற்றா யிவ்வருளை
நாடா யளிநீடாம் நாத்தழும்பப் போற்றிநிதம்
பாடா யுருகாய் பரவசமிக் கூர்ந்துநனி
ஆடாய்கொண் டாடாய்வே றாருதவி சொன்மனமே. 43

- தெய்வத்தன்மையும் வாழ்த்தும்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

நெஞ்சமே! என்றும் விட்டு நீங்காப் பருமை முத்தொழிலாகிய ஆக்கல், அளித்தல், அழித்தல்களைச் செய்வோனும், வினைப்பயனாகிய நுகர்வொன்றேயுடைய விண்ணவர்க்கும், வினையும் வினைப்பயனும் செய்தும் நுகர்ந்தும் வரும் மண்ணவர்க்கும் உள் நின்று உய்க்கும் தலைவனும், முறைமை தவறா நடுநிலைச் செங்கோல் வேந்தனும், இயல்பாகவே கட்டில்லாதவனும் ஆகிய முழுமுதல்வன் நாளும் எல்லா இருக்கையினும் உன்னையே சிறந்த இருக்கையாகக் கொண்டருளும் தகுதியடைந்தாய். அத்தகைய திருவருளை நாடாமலும், அவன்பாற் காதல் கொள்ளாமலும், அவன் புகழை நாத்தழும்பேற ஏத்தாமலும், ஏத்திப் பாடாமலும், அனல்கண்ட மெழுகென அகம் உருகாமலும், அவன் வயப்பட்டுத் தன்னை இழவாமலும், ஆடாமலும், அவனருளைக் கொண்டாடாமலும் இருக்கின்றாய். அவனை யொழித்து உனக்குற்ற துணை வேறுண்டோ சொல்.

வீடாத-நீங்காத. முத்தொழில்-ஆக்கல், அளித்தல், அழித்தல். நித்தம்-நாளும். பரவசம்-தன்னிழப்பு.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (27-Aug-18, 6:25 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 41

மேலே