நற்பருவம் வந்து நாதனை தேடும்

புலர்ந்த பொழுதில் புட்களின்
மலர்ந்த முதல் பாடலாய்
எவரவர் வாய் கேட்பினும்
அப்பொருளே மெய்ப்பொருளாய்
இசைத்துப்போகும் தினமின்றில்
யாதுமாகியதொரு
ஆலயத்தின் நடுவில்
சூழல் காற்றின் ஸ்வப்னமாய்
நம் விழிகள் தீற்றி திகைத்தன
ஏற்றிய மணிவொலியின்
நடு நொடி ரீங்காரமாய்.
சலித்த வேண்டுதலில்
இளைத்த பனிச்சடையன்
குனித்த புருவம் சிலிர்க்க
தனித்து நமை கடைக்கண்ணினானோ.
ஹாரத்தி புஷ்பத்தில்
புகைக்கடவுளாய் என்னுள் நீ.
காற்றும் மணமும்
கலந்து கழுவிய ப்ரஹாரத்தில்
நடை நழுவி நாணத்தில் கமழ
காணுற்று தொலைந்த
நயனங்களை தேடுகிறேன்.
கற்பனைகள் முற்ற
காட்சி தந்த உன்
ஈரத்தடத்தின் குளிர்மை
மனதில் காணப்பெற்றால்
மனித்த பிறவியும்
வேண்டுவதே இம்மாநிலத்தே.

எழுதியவர் : ஸ்பரிசன் (29-Aug-18, 7:04 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 65

மேலே