தனியே சென்ற தமிழே கலைஞரே

"தனியே சென்ற தமிழே"

அய்யா!!
தன்னலமிலாத் தமிழே
தம்மவர்கள் புடைசூழ
தனியே சென்ற தமிழே
காதடைக்கிறதே அய்யா!
துக்கம் எனதிரு காதையும் அடைக்கிறதே
இனி என்று அக்காந்த குரலை கேட்போம்
இனி என்று அவ்வன்பின் முகம் காண்போம்
கவலைதோய்ந்த முகத்துடன் வானவீதியை நோக்கியுள்ளோம் அய்யா!

எங்கள் தமிழ் நீரே
தமிழ் அய்யா
நீரே தமிழையா!

தன்னையறியா தமிழர்க்கு தமிழை கொண்டு சேர்த்தீரே
உண்மையறியா உள்ளத்திற்க்கு உண்மைப்பால் ஊட்டினீரே
உடைந்திருந்த சமூகத்திற்க்கு உடனின்று உழைத்தீரே
கடைநிலை ஊழியர்க்கும் கடமையாவும் அளித்தீரே
கட்டுக்கடங்கா கூட்டமதனை தமிழ் உலகில் சேர்த்தீரே
அய்யா!!
உம்மைக் காணா உயிர்கள்யாவும் உந்தனை இங்கு அழைக்கிறதே!
கானல் நீராய் காண்போமோ என்று கதறி அழுகிறதே!
உயிரில்லா உம் பேனாவும் உந்தனுக்காக ஏங்கிடுதே!
நீர்இனி பேச மாட்டீரோ ஒலிவாங்கியும் உம்மை அழைக்கிறதே!
யாரை இனிநான் சுமப்பேன்! என உம்இருக்கை நிற்க்கிறதே!
இனிஉம் குரல்தான் கேட்காமல் உம்கவியரங்கம் திகைக்கிறதே!

உம்மைஅறியா ஒருதமிழன் கோடி பாவம் செய்தவனே
திகைக்கும் மக்கள் நாங்கள் தான் நீங்காத் துயர்உடையவர்களே
எந்தன் உயரம் எமக்குத்தெரியும் என்றேசூள் உரைத்தவரே
உரைத்தசொல் அத்தனையும் உண்மையாய் கடைபிடித்தவரே
கோட்டம் உமது பெயர் அறியும்; குமரியும் உந்தன் உயர்வு அறியும்;
உலகம் உந்தன் உழைப்பறியும்; தமிழும் உந்தன் திறனறியும்;
நான் எனும்சொல்தான் அகந்தையாம், என்றே என்றும் உரைத்தவரே
நாம் எனும்சொல்தான் உகந்ததென்று வீதியெங்கும் விளக்கினீரே.
உமக்கு மேலோர் என்றுநாங்கள் நினைப்பவர்கள் சிலருண்டு
உமக்கு கீழோர் என்றாலேஎம் எல்லோருக்கும் அதிலே இடமுண்டு
விலங்கை ஏற்ற நீரோ கள்வரில்லையே அய்யா
விலங்கான மாந்தர் விலங்கவிழ ஏற்றீர் விலங்கை நீரே!
அய்யா!!

அரசியல் வாழ்க்கை அதிகமறியேன்,
கலை வாழ்க்கையில் சிறிது அறிவேன்
ஆனால்,
தமிழ்ப்பணியாவும் தானறிவேன்
தமிழே உந்தன் சுவையறிவேன்
சுவைத்து களித்த என்நா; சுவையில்லாமல் செத்ததுவே,
உந்தன் முதல்நா அண்ணாவோடு நீர்தான் இன்று சென்றதுமே !
காணவேண்டும் உந்தன் தேகம் என்றே
தமிழர் வேண்டிய நேரம்;
வேண்டவேண்டாம் வேலையைச்செய் என ஒலித்தது உந்தன்குரல்
அதுவே பகுத்தறிவு பண்புக்குரல்;
அறிவே இல்லா எமக்கும்; பகுத்து அறிவை வழங்கினீரே;

யார்தான் செய்வார் இந்த சலுகை
கண்ணீர் மல்க நினைக்கின்றோம்,
இனியொரு பிறவி என்றிருந்தால்
உம்மை தாயாய் அழைக்கின்றோம்,
தாய்க்கு முதலிடம் கொடுத்தவரே
தாய்மையின் உணர்வை புரிந்தவரே
தமிழை அன்பால் அழைத்தவரே
திருக்குறள் முப்பால் புரிந்தவரே
மூன்றாம்பாலை மதிப்பவரே
மனிதநேயம் மிக்கவரே
மாணவநேசன் கொண்டவரே
முரசு ஒலியால் வென்றவரே
முத்தமிழின் மூத்தோரே
முக்காலத்து முதல்வரே
சொல்லின் செல்வரே
சொல்லாடலில் வல்லோரே
புத்தகத்தின் பிரியரே
புன்னகையின் மன்னரே
நீர் வாழ்ந்த இக்காலமதில் உந்தனுடன் வாழ்ந்தோம்
என்று மட்டும் நினைப்பதே!
என்றும் எங்கள் மனநிறைவே!

அய்யா!!
மூன்றெழுத்தை விளக்கிச் சென்றீர்
நான்கெழுத்தாய் விட்டுச் சென்றீர்
உம்மை நீர் எம்மிடையே ;
ஆம்,
அன்று "பெரியார்" எனும் நான்கெழுத்து விட்டுச்சென்றார் அண்ணாவை.
செல்லும் முன் அண்ணாவே "கழகம்"" எனும் நான்கெழுத்தை கொடுத்துச் சென்றார் "கலைஞர்" என்ற நான்கெழுத்திடம்,.
"கணையாழி" எனும் நான்கெழுத்தை பெற்றார் கலைஞர் அண்ணாவிடம்,
"நாற்காலி" எனும் நான்கெழுத்தில் அமர்ந்தார் அண்ணாவிற்க்கு மாற்றாக,
"ஒற்றுமை" எனும் நான்கெழுத்தை கொடுத்தார், "வேற்றுமை" எனும் நான்கெழுத்தை களைந்து,
"உழைப்பு" எனும் நான்கெழுத்தைப் பெற்றார் "தொண்டன்" எனும் நான்கெழுத்தால்,
"தமிழன்" எனும் நான்கெழுத்தை அறியச்செய்தார் உலகம் எங்கும்,
"தலைவர்" என்ற நான்கெழுத்தில் போதை என்றும் கொள்ளாதிருந்தார் ,
"மரணம்" எனும் நான்கெழுத்தை நெருங்க விடார் எப்பொழுதும்,
"முதிர்வு" என்ற நான்கெழுத்து கூட்டிச் சென்றது மறுபக்கம்,
"கண்ணீர்"(கலைஞர்) எனும் நான்கெழுத்தை மட்டுமே விட்டுச்சென்றீர் நீர்,

கண்ணீர் கடலில் கலக்கின்றோம்!
மீள முடியாமல் தவிக்கின்றோம்!
தமிழெனும் கட்டுமரமாய் நீர் வாரும்!
விரைவில் எங்களை கரைசேரும்!
கட்டுமரம் கடற்காற்றை சுவாசிக்கத்தான் வேண்டும் என்பதால் என்னவோ!
நீர் கடற்காற்றை சுவாசிக்க சென்றுவிட்டீர்!

சுவாசியுமைய்யா!
இனியாவது ஓய்வு எடுத்துக்கொள்ளும்!
வணக்கம் உமது தமிழுக்கு
நன்றி உமது எழுத்துக்கு

எழுதியவர் : ச.ஜெரோம் சகரியா (2-Sep-18, 8:05 pm)
சேர்த்தது : ஜெரோம் சகரியா
பார்வை : 391

மேலே