587 பெரியானைச் சிறியானைப் பிரியானைப் பேசு - தெய்வத்தன்மையும் வாழ்த்தும் 45

அடர்ந்தமண லெனக்கணக்கி லண்டபகி ரண்டமெலாங்
கடந்துநின்ற பெரியானைக் கடுகினுழை சிறியானைத்
தொடர்ந்தவன்பர்க் குரியானைத் துகளுடையோர்க் கரியானைப்
படர்ந்தவருள் பிரியானைப் பழிச்சாயோ நாவே
பரமசுகோ தயநிலையைப் பழிச்சாயோ நாவே. 45

- தெய்வத்தன்மையும் வாழ்த்தும்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

திணிந்த மணலினும் பலவாய் எண்ணிலடங்காப் பல்வேறு அண்டங்களை யெல்லாம் ஊடுருவி அப்பால் சென்று என்றும் பொன்றாது நின்றருளும் பெரும் பொருளாம் பெரியானை,

கடுகினுள் நுழையும் நுண்பொருளாம் சிறியானை, பற்றற்றுப் பற்றப்படும் பொருளாம் தன் (கடவுள்) பால் விட்டு நீங்காத பேரன்பர்க்கு உரியானை,

மனமாசகலா வன்கணாளர்க்குக் கருதவும், காணவும், மருவவும் பொருந்தாதவனை, அருளம்மையை என்றும் பிரியாத் தெருள் அப்பனை நன்னாவே நவின்று வழுத்துவாயாக. வேறெங்கும் கிட்டா வீறுடை அழிவில் பேரின்ப ஊற்று நிலையத்தை வழுத்துவாயாக.

துகள்-மனமாசு. பரமசுகோதயம்-அழிவில் பேரின்ப ஊற்று. பழிச்சு-வழுத்து.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (5-Sep-18, 9:39 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 96

மேலே