திருப்பிரமபுரம் - சம்பந்தர் தேவாரம் பாடல் 1
ஓரடியே பொருள் வேறுபட்டு நான்கு முறை மடித்து வந்து ஒரு பாடலாக அமைவது ஏகபாத அந்தாதி எனப்படும்.
ஏகம் – ஒன்று, பாதம் – அடி.
முதல் திருமுறையில் உள்ள 127 வது திருப்பிரமபுர பதிகம் திருஞானசம்பந்தரால் இயற்றப்பட்டது. இது ஏகபாத அமைப்புடையது.
கலி விருத்தம்
(புளிமா கருவிளம் தேமா தேமா)
பிரம புரத்துறை பெம்மா னெம்மான்
பிரம புரத்துறை பெம்மா னெம்மான்
பிரம புரத்துறை பெம்மா னெம்மான்
பிரம புரத்துறை பெம்மா னெம்மான். பாடல் 1
பொருளுரை:
ஞானாகாசமாகிய பராசக்தியான பரிபூரணத்தை மிகுதியாக வியந்து, அந்தப் பராசக்திக்கு அதீத மாகிய சுகமே வடிவாய் முதல், நடு, இறுதி காணப்படாத மெய்ப்பொருள் எந்தப் பெரியோன்?
மேல்நிலமாகிய ஆகாசத்திலுள்ள கங்காதேவியை விரும்பித் தலைமுடியிலே வைத்தவன், அடிமை யாகிய எம்மை நீங்காத நிலைமை உடைய எமது உயிர் ஆவான்.
பிரமரூபத்திலே எண்ணப்பட்ட ஆருயிர்களாகிய எம்மை மலப்பிணிப்பினின்றும் நீக்கி முக்தியிலே விடும் பெரும் விருப்பமுள்ளவனாய் எம்மோடு ஒன்றாம், வேறாம், உடனாய்க் கலந்து ஒன்றாய் நிற்பவன்.
பிரமபுரம் என்கின்ற சீர்காழிப் பதியிலே வீற்றிருந் தருளும் முழுமுதற்பொருள் எளியேனின் கடவுள் ஆவார்.
பொழிப்புரை:
பெரியோனும் எனக்கு உயிரானவனும் என்னோடு கலந்து ஒன்றாய் நிற்பவனும் ஆகிய முழு முதற் பொருள் சீர்காழிப்பதியில் வீற்றிருக்கும், எனது கடவுள் ஆவார்.
Dr.V.K.Kanniappan • 19-Jun-2014
தமிழில் முதன்முதலாக எழுந்த ஏகபாத அந்தாதி இலக்கியம் திருஞானசம்பந்தரின் 'பிரம புரத்துறை பெம்மா னெம்மான்' என்ற பதிகமே!
இதனைத் தொடர்ந்து சோழவந்தானில் வாழ்ந்த பெரும்புலவர் அரசஞ் சண்முகனார் 'ஏகபாத நூற்றந்தாதி' இயற்றியிருக்கிறார்.
மேலே உள்ள அந்தாதிக்குப் பொருள் ஒவ்வொரு அடிக்கும் ஒவ்வொரு பத்தியாகவும், பொழிப்புரையாகக் கடைசியிலும் தேவாரம் தளத்தில் உள்ளபடி தந்திருக்கிறேன்.
இன்னும் சொற்களைப் பிரித்து ஒரு சில தமிழறிஞர்களாலேயே சொல்ல இயலும் என்று நினைக்கிறேன்.