ஒருதொடையான் வெல்வது கோழி - நான்மணிக்கடிகை 53

இருவிகற்ப நேரிசை வெண்பா

எருதுடையான் வேளாளன் ஏலாதான் பார்ப்பான்
ஒருதொடையான் வெல்வது கோழி - உருவோ(டு)
அறிவுடையாள் இல்வாழ்க்கைப் பெண்ணென்ப சேனைச்
செறிவுடையான் சேனா பதி. 53

- நான்மணிக்கடிகை

பொருளுரை:

”உழவு மாடுகளை உரிமையாய் உடையவன் வேளாண்மை செய்பவன் என்றும்,

ஒரு கால் தொடையால் நயந்து அணைத்து எளிதில் பெட்டைக் கோழியை வசப்படுத்தும் சேவலைப் போன்ற சாமர்த்தியத்துடன், எவரையும் பகைத்துக் கொள்ள இயலாமல் யாவரையும் நயமாகவே தன் வயப்படுத்தி தன் செய்கையை முடித்து வெல்லும் தன்மையுடையவன் பார்ப்பான் என்றும்,

உருவழகோடு வாழ்க்கையைத் திறம்பட நடத்தும் நல்லறிவும் உடையவள் இல்வாழ்க்கைக்கு உரிய இனிய துணைவி என்றும்,

தன்னுடன் திறமை வாய்ந்த சேனைப்படையைக் கொண்டு எஞ்ஞான்றும் ஒன்றுபட்டு உடன் உறைபவன் ஒரு நல்ல சேனைத் தலைவனாவான் என்றும்

பெரியோர் கூறுவர்” என்று நான்மணிக்கடிகை இயற்றிய விளம்பி நாகனார் இப்பாடலின் வழியாக நான்கு முத்தான கருத்துக்களைக் கூறுகிறார்.

கருத்து:

நினைத்த காரியத்தை நிறைவேற்றும் பார்ப்பனரின் சாதுர்யத்திற்கு சேவலின் செயலை உவமை காட்டியது சிறப்பாக இருந்தது. எனவே, நாம் நினைத்த காரியத்தை நிறைவேற்ற உடல் வலிமையை விட, புத்திக் கூர்மையும், நயமாகவே பேசி மற்றவரை தன் வயப்படுத்தி தன் செய்கையை நிறைவேற்றிக் கொள்வதும் அவசியம் என்று புலப்படுகிறது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (8-Sep-18, 10:30 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 55

சிறந்த கட்டுரைகள்

மேலே